Published : 05 Jan 2021 10:02 PM
Last Updated : 05 Jan 2021 10:02 PM
துக்கங்களையெல்லாம் போக்கி அருளும் துர்கையின் காயத்ரியைச் சொல்லி வழிபட்டு வந்தால், நம் துக்கத்தையெல்லாம் நீக்கியருளுவாள். கஷ்டங்களையெல்லாம் போக்கித் தருவாள்.
பராசக்தியே உலகின் சகல இயக்கங்களுக்கும் காரணமாக, காரணியாகத் திகழ்கிறாள். அவளிடம் இருந்து வெளிப்பட்ட வடிவங்கள் அனைத்துமே மக்களுக்காகவும் மக்களைப் பேணிக்காக்கவும் உண்டுபண்ணப்பட்டன என்கிறது புராணம்.
அப்படி பராசக்தியில் இருந்து வெளிப்பட்ட வடிவங்களில் மிக மிக முக்கியமானவள் துர்கை. மிகவும் சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்தவள். துர்கை என்றால் துக்கங்களையெல்லாம் போக்குபவள் என்று அர்த்தம். நம் துக்கங்களையெல்லாம் போக்கும் பணியை மேற்கொள்ளும் தேவதைகளில் துர்கைக்கு தனியிடம் உண்டு.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், துர்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவதும் ராகுகாலத்தில் தீபமேற்றி வழிபடுவதும் எண்ணற்ற பலன்களை வழங்கவல்லது. அதேசமயம், தினமும் துர்கை காயத்ரியை 11 முறை அல்லது 24 முறை அல்லது 54 முறை ஜபித்து வேண்டிக்கொள்ளலாம். காலையும் மாலையும் சொல்லி வணங்கி வழிபடலாம்.
ஓம் காத்யாயனய வித்மஹே
கன்யாகுமாரி தீமஹி
தந்நோ துர்கி ப்ரசோதயாத்
அதாவது, காத்யாயயன மகரிஷியின் மகளாக அவதரித்தவளே. நித்திய குமரியாக திகழ்பவளே. உன்னை வணங்கித் தொழுவதால், என்னுடைய மனதை தெளிவுபடுத்துவாயாக. குழப்பமில்லாத மனதையும் அறிவையும் மேம்படுத்துவாயாக. நற்பலன்களை வாரி வழங்கும் உன்னுடைய பாதங்களைப் பணிகிறேன் என்று அர்த்தம்.
இந்த துர்கை காயத்ரியை தினமும் சொல்லுங்கள். முடிந்தால் 108 முறை ஜபித்து வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டியதையெல்லாம் தந்தருளுவாள் துர்காதேவி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT