Published : 05 Jan 2021 02:05 PM
Last Updated : 05 Jan 2021 02:05 PM
பஞ்ச பூத தலங்களில், காஞ்சிபுரத்தை ப்ருத்வி தலம் என்பார்கள். ப்ருத்வி என்றால் மண். பஞ்ச பூத சக்தி பீடங்களில், காஞ்சிபுரத்தை ஆகாயத் தலம் என்று தெரிவிக்கிறது ஸ்தல புராணம். சக்திபீடங்களில், காஞ்சிபுரத்தை ஒட்டியாண பீடம் என்று போற்றுகிறார்கள். இடையில் அணிந்துகொள்ளும் ஒட்டியாணம், மேகலை என்றும் அழைக்கப்படும்.
தட்சனால் அவமதிப்பு உள்ளான தாட்சாயணி, தட்சன் வளர்த்த யாகத்தீயில் பாய்ந்தாள். தன் உடலை மாய்த்துக்கொண்டாள். சிவனார், உமையவளின் திருமேனியை தூக்கிக்கொண்டு ஆடினார். அந்த வேளையில், உமையவளின் திருமேனி பலப்பல இடங்களில் சிதறி விழுந்தன. அப்படிச் சிதறி விழுந்த இடங்களெல்லாம் சக்தி பீடங்கள் என்று போற்றப்படுகின்றன. தேவியின் நாபி விழுந்த இடம்... காஞ்சி என்கிறது ஸ்தல புராணம்.
அதுமட்டுமா? சக்தி பீடங்களில் காஞ்சி திருத்தலம், தலைமை பீடம் என்று கொண்டாடப்படுகிறது. அப்பேர்ப்பட்ட தலைமை பீடத்தில் அமர்ந்து ஆட்சி செய்யும் காமாட்சி அன்னையே, சக்தி பீடங்களுக்கெல்லாம் தலைவி என்று ஆராதிக்கப்படுகிறாள்.
‘புஷ்பேஷு ஜாதி புருஷேஷு விஷ்ணு நாரீஷு ரம்பா நகரேஷூகாஞ்சி’ என்கிறார் காளிதாசர். அதாவது நகரம் என்றாலே காஞ்சி மாநகரம்தான், நகரங்களில் சிறந்தது காஞ்சிபுரம் என்கிறார்.
காஞ்சிபுரத்தை மோட்சபுரி என்கிறது ஸ்தல புராணம். ஆதிசங்கரர் தன்னுடைய இறுதிக்காலத்தில், காஞ்சிபுரத்திலேயே இருந்தார். காமாட்சி அம்பாளை ஆராதித்து பூஜித்து வந்தார். திருவடியை அடைந்தார். இதனால், காஞ்சிபுரம் மோட்சபுரி என்ற பெருமையும் உண்டு.
காஞ்சி மாநகருக்கு, புண்ணிய கோட்டம் என்ற பெயரும் உண்டு. அதேபோல் ருத்ர கோட்டம் என்றும் சொல்லுவார்கள். குமரக்கோட்டம் என்றும் காமகோட்டம் என்றும் சொல்வார்கள். அதாவது, புண்ணியக் கோட்டத்தில் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார். ருத்ர கோட்டத்தில் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயில் கொண்டிருக்கிறார். குமரக்கோட்டத்தில் ஸ்ரீசுப்ரமணியரும் காம கோட்டத்தில் ஸ்ரீகாமாட்சி அன்னையும் அருளாட்சி செய்கின்றனர்.
புராண - புராதனப் பெருமைகள் கொண்ட காஞ்சிபுரம், கிருத யுகத்தில் அமிர்தரூபமாகத் திகழ்ந்தது என்றும் திரேதா யுகத்தில் பால் ரூபமாகத் திகழ்ந்தது என்றும் துவாபர யுகத்தில் நெய் ரூபமாகத் திகழ்ந்தது என்றும் கலியுகத்தில் ஜல ரூபமாகத் திகழ்கிறது என்றும் ஸ்தல புராணம் விவரிக்கிறது.
முக்தியைத் தந்தருளும் திருத்தலங்கள் என்று மதுரா, அயோத்தி, காசியம்பதி (காசி), அவந்திகா, துவாரகை முதலான நகரங்களைச் சொல்லுவார்கள். இவை அனைத்துமே வடநாட்டில் உள்ள க்ஷேத்திரங்கள். முக்தி திருத்தலம் என்று சொல்லும் காஞ்சி மாநகரம் மட்டுமே தமிழகத்தில் உள்ள முக்தி க்ஷேத்திரம் என்று போற்றப்படுகிறது.
காமாட்சி அன்னையே சக்தி பீடங்களின் தலைவி. இவளின் திருச்சந்நிதியில் கண் மூடி அமர்ந்து, நம்முடைய வேண்டுகோளை, நம்முடைய எண்ணங்களை, விருப்பத்தை, பிரார்த்தனையை அவளிடம் சமர்ப்பித்துவிட்டால் போதும்.. காமாட்சி அன்னை நம்மையும் நம் குடும்பத்தையும் சந்ததியையும் பார்த்துக்கொள்வாள். நம் கஷ்டங்களையும் பாவங்களையும் போக்கியருளுவாள் காமாட்சி அன்னை!
செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில், காமாட்சியை கண் குளிர தரிசித்து பிரார்த்தனை செய்து வாருங்கள். கஷ்டம் போக்குவாள்; கவலைகள் தீர்ப்பாள்; நஷ்ட நிலையை மாற்றுவாள். சகல ஐஸ்வரியங்களையும் அள்ளித் தருவாள் காமாட்சி அன்னை!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment