Last Updated : 01 Oct, 2015 01:15 PM

 

Published : 01 Oct 2015 01:15 PM
Last Updated : 01 Oct 2015 01:15 PM

விவிலிய வழிகாட்டி: கடவுள் உங்களிடம் எதை எதிர்பார்க்கிறார்?

உலகின் பல நாடுகளில் திருமணம் என்னும் பந்தத்தில் இணையாமலேயே ஒன்றாய் வாழும் பழக்கம் மலிந்திருக்கிறது. இந்தப் பழக்கம் இந்தியாவிலும் அதிகரித்துவருகிறது என்ற தன்னார்வ நிறுவனங்களின் ஆய்வுகள் வெற்று வார்த்தைகள் அல்ல. பரலோகத் தந்தையாகிய கடவுளே ஆதாமையும் ஏவாளையும் சட்டப்படியான திருமண வாழ்வில் இணைத்துத் திருமணம் எனும் உயர்ந்த சாசனத்தைத் தொடங்கிவைத்தவர்.

பரலோகத் தந்தை விரும்புவதுபோல் சட்டப்படி திருமணம் செய்தால்தான் குடும்பம் சந்தோஷமாக இருக்கும்; அப்போதுதான், பாதுகாப்பான சூழ்நிலையில் பிள்ளைகளை வளர்க்க முடியும். குடும்ப அமைதியை உணராத பிள்ளைகள் மனரீதியான உளவியல் நோய்களில் சிக்கிக்கொள்கிறார்கள் என்கின்றன ஆய்வுகள். இதற்கு முறைப்படி மணந்துகொள்ளாமல் வாழும் பெற்றோர்கள் முக்கியக் காரணமாய் இருக்கிறார்கள்.

மணவிலக்கை அவர் ஏன் விரும்புவதில்லை?

திருமண பந்தம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் எனக் கடவுள் விரும்புகிறார் என நீங்கள் கேட்கலாம். ‘அது ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பிரிக்க முடியாத நிரந்தர பந்தமாக இருக்க வேண்டும்’ என அவர் விரும்புகிறார். கடவுளை சந்தோஷப்படுத்த விரும்புகிறவர்கள், திருமணப் பதிவு தொடர்பாகத் தத்தமது நாடுகளில் உள்ள சட்டங்களை மனசாட்சிக்கும் கடவுளுக்கும் பயந்து மதிக்க வேண்டும் என்பதே அவரின் எதிர்பார்ப்பு. மிக முக்கியமாகக் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டுமென்று பரலோகத் தந்தை விரும்புகிறார்.

இதை எபிரெயர் (13:4) புத்தகம், “திருமண ஏற்பாட்டை எல்லாரும் மதியுங்கள்; தாம்பத்திய உறவின் புனிதத்தைக் கெடுக்காமல் இருங்கள்; ஏனென்றால், பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவர்களையும், மணத் துணைக்குத் துரோகம் செய்கிறவர்களையும் கடவுள் நியாயம் தீர்ப்பார்” என எடுத்துக் காட்டுகிறது. மணவிலக்கைத் தந்தை அறவே வெறுக்கிறார். மேலும் திருமண பந்தம் குறித்து தமது மகனாகிய இயேசுவின் மூலமே இந்த உலகத்துக்குத் தெளிவுற வரையறுத்து அறிவித்தார்.

தந்தையின் வார்த்தைகள்

இவை மாற்கு புத்தகத்தில் (10: 2 8) வெளிப்பட்டு நிற்கின்றன. இயேசுவைச் சோதிப்பதற்காக அவரை வெறுத்துவந்த பரிசேயர்களில் பலர் கூட்டமாக அவர் போதிக்கும் இடத்துக்கு வந்து, “ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்வது முறையா?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “உங்கள் முன்னோராகிய மோசே உங்களுக்கு என்ன கட்டளையிட்டார்?” என்று கேட்டார். “விடுதலைப் பத்திரத்தை எழுதிக் கொடுத்துவிட்டு மனைவியை விவாகரத்து செய்துகொள்ள மோசே அனுமதி கொடுத்தார்” என்றார்கள்.

ஆனால் இயேசு, “உங்கள் இருதயம் இறுகிப்போயிருந்ததன் காரணமாகவே அவர் இந்தக் கட்டளையை உங்களுக்குக் கொடுத்தார். என்றாலும், கடவுள் ஆரம்பத்தில் மனிதர்களைப் படைத்தபோது, ‘அவர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார்; இதனால், ஒருவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான்; அவர்கள் ஒரே உடலாக இருப்பார்கள்’; அதனால், அவர்கள் இருவராக அல்ல, ஒரே உடலாக இருப்பார்கள். எனவே, கடவுள் இணைத்ததை எந்த மனிதனும் பிரிக்காதிருக்கட்டும்” என்று மோசே உருவாக்கித் தந்திருந்த பழமைச் சட்டத்துக்கு எதிராக அவர்களிடம் கூறினார்.

பரிசேயர்கள் கோபத்துடன் திரும்பிப் போனார்கள். பிறகு அவர் போதனைகளை முடித்துவிட்டு மறுபடியும் அவர் தங்கியிருந்த வீட்டிற்குள் வந்தபோது சீடர்கள் இதைப் பற்றி அவரிடம் கேட்டார்கள். அப்போது அவர்களிடம், “மனைவியை விவாகரத்து செய்து வேறொரு பெண்ணை மணந்துகொள்கிற எவனும் தவறான உறவுகொள்கிறான், தன் மனைவிக்குத் துரோகம் செய்கிறான். கணவனை விவாகரத்து செய்த பின் வேறொரு ஆணை மணந்துகொள்கிற எந்தப் பெண்ணும் தவறான உறவுகொள்கிறாள் ” என்றார்.

இன்று குடும்ப நல நீதிமன்றங்களில் பெருகிக் கிடக்கும் மணவிலக்கு வழக்குகள் முடிவுக்கு வந்த பிறகு அவரவர் விருப்பங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொள்வது சகஜமான வாழ்க்கையாகிவிட்டது. ஆனால் அதில் போதிய பிடிமானம் இருக்காது. அதில் மனங்களின் இணைவு இருக்காது என்பதையே இயேசு கண்டிப்பான வார்த்தைகளால் இப்படிச் சுட்டிக்காட்டினார்.

எப்படித் தப்பிப்பது?

அப்படியானால் மணவிலக்கு வரை சென்றுவிடாமல் அதிலிருந்து எப்படித் தப்பிப்பது? ஆதியாகமம் (2:18) கூறுவதைப் பாருங்கள்: ‘மண வாழ்வில் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதற் காகவே ஆணையும் பெண்ணையும் பரலோகத் தந்தையாகிய யகோவா தேவன் படைத்தார்.’ கணவன்தான் குடும்பத்திற்குத் தலைவன். எனவே, அவர்தான் குடும்பத்தைப் பராமரிக்க வேண்டும். கடவுளைப் பற்றி அவரே குடும்பத்துக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அன்பும், முழுமையான மரியாதையும் காட்ட வேண்டும். கணவன், மனைவி இருவருமே தவறுகள் செய்பவர்கள்தான். அதனால் அவர்கள் பரஸ்பரம் மன்னிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். விட்டுக்கொடுத்தலும் மன்னிப்பும் இருந்தும் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினைகள் வெடித்தால், உங்கள் கர்வம் உங்கள் தலைக்கு மேல் கோடாரியுடன் நிற்கிறது என்பதை உணர்ந்துகொண்டு எச்சரிக்கையாக இருங்கள் என்கிறது விவிலியம்.

எனவே (ஒன்று கொரிந்தியர் 13:4, 5) புத்தகம், ‘ஒருவரையொருவர் அன்பாக நடத்த முயல வேண்டும்.’ என்கிறது. மணவாழ்வில் ஏற்படுகிற சின்னச் சின்ன பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரே வழி பிரிந்துபோவதுதான் என விவிலியம் சொல்வதில்லை. ஒன்று கொரிந்தியரை (7: 10 14) இன்னும் சற்று விரிவாக வாசியுங்கள். உண்மை எளிதில் விளங்கும்.

“ திருமணமானவர்களுக்கு நான் கொடுக்கும் அறிவுரைகள் உண்மையில் நான் தருவதல்ல, நம் எஜமானராகிய பரலோகத் தந்தை கொடுக்கும் அறிவுரைகள். மனைவி தன் கணவனை விட்டுப் பிரிந்துபோகக் கூடாது; அப்படியே பிரிந்துபோனாலும், அவள் மறுமணம் செய்யாதிருக்க வேண்டும் அல்லது மறுபடியும் தன் கணவனோடு சமரசம் செய்துகொள்ள வேண்டும்; கணவனும் தன் மனைவியை விட்டுப் பிரிந்துபோகக் கூடாது. மறுபடியும் தன் மனைவியோடு சமரசம் செய்துகொள்ள வேண்டும்; இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமானவர்களாக மாறிப்போவார்கள்; இப்போதோ உங்கள் சமாதானத்தால் அவர்கள் பரிசுத்தமானவர்களாக இருக்கிறார்கள்”.

கடவுள் தந்திருக்கும் சமாதானத்தை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்களே கற்றுக்கொடுக்கும் பெற்றோர்களாய் இருக்க வழிகாட்டுகிறது விவிலியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x