Published : 03 Jan 2021 02:21 PM
Last Updated : 03 Jan 2021 02:21 PM
மனைவியின் நீண்ட ஆயுளுக்கும் அவர்கள் நித்திய சுமங்கலியாகத் திகழும் கணவன்மார்கள் அபிராமி அந்தாதி பாராயணம் செய்யுங்கள். சிவபார்வதியை வணங்குங்கள்.
நம் வழிபாட்டு முறைகள் எல்லாவற்றுக்குமானவை. எல்லா குறைகளையும் இறைவனிடம் சொல்லி முறையிடுவதற்கானவை. அப்படிச் சொல்லுவதற்காகவும் முறையிடுவதற்காகவும் பிரார்த்தனை செய்துகொள்வதற்காகவுமாக ஏராளமான வழிபாட்டு முறைகள் இங்கே சாஸ்திரங்கள் சொல்லிவைத்திருக்கின்றன.
பெண்கள் அனைவருக்குமான மிக முக்கியமான பிரார்த்தனை தீர்கசுமங்கலியாக வாழவேண்டும் என்பதே. தங்கள் தாலி பாக்கியம் நிலைக்க வேண்டும் என்பதுதான் எல்லா பெண்களின் வேண்டுதலும்.
கணவரின் ஆயுள் நீடித்திருந்தால்தான் தாலி பாக்கியம் என்பது நடந்தேறும். கணவர் நோய் நொடியின்றி வாழவேண்டும் என்றுதான் பெண்கள் விரதம் மேற்கொள்கிறார்கள். நோன்பு இருக்கிறார்கள். தங்கள் தாலியில் மஞ்சளும் குங்குமமும் இட்டுக்கொண்டு கணவரின் ஆயுளுக்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீட்டை சுத்தமாக்கி, பூஜையறையைச் சுத்தமாக்கி சுவாமி படங்களுக்குப் பூக்களிட்டு பெண்கள் தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லுவார்கள். கணவரின் உடல்நலனுக்காகவும் ஆரோக்கியத்துக்காகவும் உத்தியோகத்துக்காகவும் முன்னேற்றத்துக்காவும் வேண்டிக்கொள்வார்கள்.
ஒரு வருடத்தில் என்னென்ன விரதங்கள் உள்ளனவோ பூஜைகள் இருக்கிறதோ அவற்றையெல்லாம் குறித்து வைத்துக்கொண்டு பூஜைகள் மேற்கொள்வார்கள். உண்ணா நோன்பு இருந்து பூஜைகள் செய்வார்கள்.
இதேபோல், மனைவியின் ஆயுளுக்காகவும் கணவன்மார்கள் பூஜைகள் செய்து வேண்டிக்கொள்ளலாம். சிவனாருக்கு உகந்த திங்கட்கிழமை, அம்பாளுக்கு உகந்த செவ்வாய், வெள்ளிக்கிழமை முதலான நாட்களில், அமாவாசை முதலான தினங்களில் கணவன்மார்கள், பூஜையறையில் அமர்ந்து, அபிராமி அந்தாதி பாராயணம் செய்யலாம். மனைவியின் பெயரையும் நட்சத்திரத்தையும் சொல்லி, மனதார வேண்டிக்கொள்ளுங்கள். அம்பாளுக்கு செந்நிற மலர்கள், அரளி மாலை சமர்ப்பித்து வேண்டிக்கொள்ளுங்கள்.
மனைவிமார்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள். நோய் நோடியில்லாமல் வாழ்வார்கள். தீர்க்க ஆயுளுடன் நிறைவான செல்வத்துடன் ஆனந்தமாகவும் அமைதியாகவும் வாழ்வார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT