Published : 31 Dec 2020 05:56 PM
Last Updated : 31 Dec 2020 05:56 PM
மார்கழி மாத வெள்ளிக்கிழமையில், ராகுகாலத்தில் துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுங்கள். துக்கமெல்லாம் தீர்த்தருள்வாள் துர்காதேவி.
மார்கழி மாதம் என்பது தனுர் மாதம் என்று அழைக்கப்படுகிறது. தனுர் மாதம் என்பது தபஸ் செய்வதற்கும் மந்திர ஜபங்கள் செய்வதற்கும் உகந்த மாதம். வீட்டில் பூஜைகள் வழிபாடுகள் செய்வதற்கு உகந்த மாதம்.
மார்கழி மாதத்தில் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது மகத்தான பலன்களைத் தந்தருளும். அதேபோல், காலையில் கோயில்களிலும் வீடுகளிலும் திருப்பாவை பாடியும் திருவெம்பாவை பாடியும் இறை வழிபாடு செய்வது சகல ஐஸ்வர்யங்களையும் தந்தருளும்.
வீட்டில் தடைப்பட்டிருந்த திருமணம் முதலான வைபவங்கள் நடந்தேறும். இதுவரை காரியத்தடைகளால் கலங்கியவர்களுக்கு காரியம் யாவும் கைகூடும்.
சிவ வழிபாடு எப்படி மார்கழியில் முக்கியமோ அதேபோல் மகாவிஷ்ணு வழிபாடும் மிக மிக முக்கியம். சிவ வழிபாடு என்பதும் மகாவிஷ்ணு வழிபாடு என்பதும் எத்தனை வலிமையானதோ அம்பாள் வழிபாடு என்பது, தேவி வழிபாடு என்பது, சக்தி வழிபாடு என்பது மிக மிக முக்கியம். அவசியம்.
அபிராமி அந்தாதி பாராயணம், லக்ஷ்மி அஷ்டோத்திரம், லலிதா சகஸ்ரநாமம், கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி பாராயணம் செய்வதும் சக்தியை பூஜிப்பதும், மகாலக்ஷ்மியை வணங்குவதும் இல்லத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும்.
அதேபோல், சக்தியின் ஓர் அம்சமாகத் திகழ்கிறாள் துர்காதேவி. துர்கை என்றால் துக்கமெல்லாம் போக்குபவள் என்று அர்த்தம். எல்லா சிவாலயங்களிலும் அம்மன் கோயில்களிலும் துர்கைக்கு சந்நிதி அமைந்திருக்கும். சிவாலயங்களிலும் அம்மன் கோயில்களிலும் உள்ள துர்கையை சிவ துர்கை என்றும் பெருமாள் கோயில்களில் உள்ள துர்கையை விஷ்ணு துர்கை என்றும் போற்றுகிறார்கள் ஆச்சார்யர்கள்.
செவ்வாய், வெள்ளியில் துர்கைக்கு விளக்கேற்றுவது எண்ணற்ற பலன்களைத் தரும். குறிப்பாக, ராகுகால வேளையில் துர்கைக்கு விளக்கேற்றுவதும் எலுமிச்சை தீபமேற்றுவதும் எண்ணிலங்காத பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.
செவ்வாய்க்கிழமை ராகுகாலம் மாலை 3 முதல் 4.30 வரை. வெள்ளிக்கிழமை ராகுகாலம் காலை 10.30 முதல் 12 மணி வரை. நாளைய தினம் வெள்ளிக்கிழமை. மார்கழி மாதத்தின் வெள்ளிக்கிழமை. இந்த நாளில், ஆங்கிலப்புத்தாண்டு 2021 பிறக்கும் தருணத்தில், உலக நன்மைக்காகவும் உங்கள் குடும்பத்தின் மேன்மைக்காகவும் ராகுகாலத்தில் துர்கைக்கு விளக்கேற்றுங்கள். எலுமிச்சை தீபமேற்றுங்கள். இன்னல்களையெல்லாம் நீக்குவாள் துர்கை. துன்பங்களையெல்லாம் துடைத்தெறிவாள் துர்கை. எதிர்ப்புகளையெல்லாம் இல்லாமல் செய்வாள் துர்கை.
மார்கழி வெள்ளிக்கிழமையில், ராகுகாலத்தில் துர்கைக்கு விளக்கேற்றுவோம். விடியலைத் தந்திடுவாள் துர்காதேவி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT