Published : 31 Dec 2020 01:31 PM
Last Updated : 31 Dec 2020 01:31 PM
‘உனக்கு எது நல்லதோ அதைத் தருவேன்’ என அருளியுள்ளார் பகவான் சாயிபாபா.
எண்ணற்ற மகான்கள் இந்த உலகில் அவதரித்துள்ளனர். ஒவ்வொரு தருணத்திலும் தெய்வ சக்தியானது, தன்னுடைய சாந்நித்தியத்தை எப்படி வெளிக்காட்டிக்கொண்டிருக்கிறதோ அதேபோல், மகான்களும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தங்களின் சாந்நித்தியத்தை, அருளாடலை நிகழ்த்துவார்கள். நிகழ்த்தியிருக்கிறார்கள்.
கலியுகத்துக்கு கண்கண்ட மகானாகவும் பின்னர் தெய்வமாகவும் அருள்பாலித்துக் கொண்டிருப்பவர்தான் பகவான் ஷீர்டி சாயிபாபா. வடக்கே ஷீர்டி எனும் மிகச்சிறிய ஊரில் இருந்து கொண்டு, தன் பக்தர்களுக்கு தரிசனம் வழங்கினார் சாயிபாபா. தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளையும் கவலைகளையும் போக்கியருளினார்.
இதையடுத்துத்தான் பாபாவின் பேரருளை உலகமே உணர்ந்து வியந்தது. உலகின் பல மூலைகளில் இருந்தும் பாபாவை நாடி, அவரின் பேரருளை வேண்டி வரத் தொடங்கினார்கள் பக்தர்கள்.
ஷீர்டி எனும் ஊர், கொஞ்சம் கொஞ்சமாக புனித பூமி என்பது உலகுக்குத் தெரியவந்தது. தன் ஸ்தூல உடலில் இருந்து சூட்சும ரூபமாக உலகெங்கும் வியாபிக்கத் தொடங்கினார். ஆனாலும் ஷீர்டி எனும் க்ஷேத்திரத்துக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்றைக்கும் வந்துகொண்டே இருக்கிறார்கள். அது, பாபா நின்ற பூமி. நடந்த பூமி. அமர்ந்த பூமி.
ஷீர்டி மட்டுமின்றி, இந்தியா முழுவதும் பாபாவுக்கு கோயில்களும் மந்திர்களும் தியான மையங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன. சென்னையில் மயிலாப்பூரிலும் தி.நகரிலும் சென்னைக்கு வெளியே பைபாஸ் சாலையிலும் பாபா கோயில்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை செங்கல்பட்டை அடுத்த மாமண்டூரில் பாபா கோயில் அமைந்துள்ளது. மதுரை சோழவந்தானுக்கும் திருவேடகத்துக்கும் அருகில் பாபா கோயில் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி சமயபுரம் டோல்கேட் பகுதிக்கு அருகில் அக்கரைப்பட்டி எனும் ஊரில் தென் ஷீரடி சாயிபாபா கோயில் என்று மிகப்பிரமாண்டமாக அமைந்திருக்கிறது சாயிபாபா கோயில்.
‘சாய்ராம்’ என்று யாரெல்லாம் அழைக்கிறீர்களோ அங்கெல்லாம் நான் வந்துவிடுவேன். நீங்கள் எப்போது அழைத்தாலும் வந்துவிடுவேன்’ என அருளியுள்ளார் பகவான் சாயிபாபா.
பாபாவின் பெயரைச் சொல்லி, அவரின் புகைப்படத்துக்கு தீப தூப ஆராதனைகள் செலுத்தி, கொஞ்சம் சாக்லெட்டோ இனிப்போ படைத்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். நம் வாழ்க்கையையே இனிக்கச் செய்வார் சாயிபாபா என்கிறார்கள் பக்தர்கள்.
வாராவாரம், தொடர்ந்து ஒன்பது வியாழக்கிழமைகளில் பாபாவுக்கு சாக்லெட் படைத்துவிட்டு, அந்த சாக்லெட்டுகளை பலருக்கும் வழங்கி வாருங்கள். உங்கள் பிரார்த்தனை என்ன என்று பாபாவிடம் சமர்ப்பிக்கத் தேவையில்லை. உங்கள் எண்ணங்களை செயலாக்கித் தந்தருளுவார் பாபா.
‘உங்களுக்கு எது நல்லது என்பது எனக்குத் தெரியும். உங்களுக்கு நல்லது செய்வதற்குத்தான் நானிருக்கிறேன். கவலைப்படாதீர்கள். உங்களுக்கு நல்லது செய்யக் காத்துக்கொண்டிருக்கிறேன். நல்ல எண்ணங்களுடன் நற்குணங்களுடன் நீங்கள் இருங்கள். அந்த எண்ணங்களும் குணங்களும் சரியாக இருந்தால், உங்களை நோக்கி நான் வந்துவிடுவேன். உங்களுக்கு எல்லா நல்லதுகளையும் நான் கொடுப்பேன். அதற்கு சித்தமாக இருக்கிறேன்’ என சாயி சத்சரிதம் விவரிக்கிறது.
நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களிடம் அன்புடன் இருந்தால், நம்மைத் தேடி பாபாவே வந்துவிடுவார். வியாழக்கிழமைகளில் உங்களால் முடிந்த சாக்லெட்டுகளை பிறருக்கு வழங்குங்கள். ஒவ்வொருவருக்கும் சாக்லெட் வழங்கும்போதும், ‘சாய்ராம்’ என்று சொல்லிவிட்டு வழங்குங்கள்.
உங்கள் வாழ்வில் சத்விஷயங்களையும் தந்து அருளுவார் சாயிபாபா!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT