Published : 30 Dec 2020 12:05 PM
Last Updated : 30 Dec 2020 12:05 PM
பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருப்பதும் பூஜையில் ஈடுபடுவதும் விசேஷமானது. ஒரு பத்துநிமிடமேனும் பூஜையறையில் அமர்ந்து கண் மூடி நாம் செய்கிற பிரார்த்தனை அளப்பரிய நன்மைகளைக் கொடுக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.குறிப்பாக, பிரம்ம முகூர்த்தத்தில் நம் முன்னோர்களை நினைத்து கண்கள் மூடி வேண்டிக்கொண்டால் போதும்... மும்மடங்கு பலன்களைத் தந்தருள்வார்கள் முன்னோர்கள்.
இறைவனை வழிபடுவதற்கு நேரமோ காலமோ இல்லை. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வழிபடலாம். எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். எந்தத் தெய்வத்தை வேண்டுமானாலும் வழிபடலாம். அதேசமயம், குறிப்பிட்ட நட்சத்திரத்தில், குறிப்பிட்ட திதியில், குறிப்பிட்ட ஓரையில் வழிபடச் சொல்லியிருக்கிறது தர்ம சாஸ்திரம்.
நாள், நட்சத்திரம், திதி, ஓரை என்பதெல்லாம் கடந்து பிரம்ம முகூர்த்தத்தில், பிரம்ம முகூர்த்த நேரத்தில் நாம் செய்யும் எந்த வழிபாடாக இருந்தாலும் மும்மடங்கு பலன்களைத் தரும் என்கிறார்கள். அதேபோல், பிரம்ம முகூர்த்த வேளையில், நாம் செய்யும் மந்திர ஜபங்கள் இன்னும் வீரியமும் வலிமையும் மிக்கவையாக இருக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
பிரம்ம முகூர்த்தம் என்பது அதிகாலை 4 முதல் 5 மணி வரை உள்ள காலம். தேவதா சக்திகள் சந்தோஷமாகவும் கனிவுடனும் இருந்து நம்மை ஆசீர்வதிப்பதற்காக காத்துக்கொண்டிருக்கும் காலம். தெய்வ சாந்நித்தியங்கள், பிரபஞ்சத்தில் வியாபித்து நிறைந்திருக்கும் காலம். இந்த சமயத்தில் நாம் செய்கிற செயல்கள் அனைத்தும் நன்மைகளைத் தரும்.
பிரம்ம முகூர்த்த வேளையில், படிப்பில் ஈடுபட்டால் அவை மனதில் பசுமரத்தாணி போல் பதியும். கல்வியில் சிறந்து விளங்கலாம். அதனால்தான் இரவில் கண்விழித்துப் படிக்க வேண்டாம் என்றும் அதிகாலையில் எழுந்து படிக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
பிரம்ம முகூர்த்தம் என்பது வலிமையான நேரம். இந்த நேரத்தில் எழுந்து, பல் தேய்த்து, நெற்றிக்கு இட்டுக் கொண்டு, மந்திர ஜபங்களில் ஈடுபடலாம். கலை கல்வியில் ஈடுபடலாம். நம் முன்னோரை ஆத்மார்த்தமாக நினைத்து வேண்டிக்கொள்ளுங்கள்.
நீண்ட ஆயுள் கிடைக்கும். தேக ஆரோக்கியம் கூடும். மனக்குழப்பங்கள் மனோபயங்களும் விலகும். பிரம்ம முகூர்த்தத்தில் முன்னோரை நினைத்து வழிபட்டால், அவர்கள் குளிர்ந்து போய் நம் வீட்டுக்கு வருவார்கள். நம் இல்லத்தின் கஷ்டங்களையெல்லாம் போக்கி ஆசீர்வதிப்பார்கள் என்பது ஐதீகம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT