Published : 29 Dec 2020 08:04 PM
Last Updated : 29 Dec 2020 08:04 PM
மார்கழித் திருவாதிரை நன்னாள் நாளைய தினம் 30ம் தேதி புதன்கிழமை ஆருத்ரா தரிசனத் திருநாள். அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் செல்லுங்கள். களியமுது படைத்து வீட்டில் பூஜித்து வழிபடுங்கள். ‘திருச்சிற்றம்பலம்’ என்று சொல்லி சிவ புராணம் பாராயணம் செய்து, ருத்ரம் ஜபித்து வேண்டிக்கொள்ளுங்கள்.
தென்னாடுடைய சிவபெருமான் களியமுது போல் நம் வாழ்க்கையைத் தித்திக்கச் செய்வார்.
தன்னால் இயன்ற களியை உணவாக சிவனாருக்கு படைத்தான் சேந்தன் எனும் விறகு வெட்டி. வந்திருப்பது சிவனடியார் என்றுதான் சேந்தனுக்குத் தெரியும். வந்திருப்பது சிவபெருமான் என்பதை அறியவில்லை அவன்.
மறுநாள்... சிதம்பரத்தில்... ஆலயத்தில், சிவ சந்நிதியில் கதவு தொடங்கி எல்லா இடங்களிலும் களியாக இருந்தது. தீட்சிதர்கள் அதிர்ந்தார்கள்.
தேரோட்டம். மன்னர் உட்பட பலரும் தேரிழுத்தார்கள். சேந்தனும் கூட்டத்தில் தேரிழுத்தான். ஆனால் தேர் நகரவில்லை. முந்தைய நாள் பெய்த மழையால் தெருவெங்கும் சேறாகிக்கிடக்க, அந்தச் சேற்றில் சிக்கிக் கொண்டது தேர். சிவ திருவிளையாடலில் இதுவும் ஒன்று.
‘சேந்தன்... வா... வந்து தேரினை இழு’ என்று அசரீரி கேட்டது. யாரிந்த சேந்தன் என்று மன்னன் வியந்தான். தீட்சிதர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள் என பலரும் குழம்பினார்கள்.
‘எங்கே பாடு...’ என்றார் சிவனார் சேந்தனிடம். ‘சாமீ. நமக்கு பாட்டெல்லாம் வராது சாமீ’ என்றான் சேந்தன். ‘உன்னைத்தான் தெரியும் எனக்கு. பாட்டு தெரியாதே’ என்றான். ‘முடியும். பாடு. இன்று நீ பாடுவாய்’ என மீண்டும் கேட்டது அசரீரி!
’மன்னுக தில்லை...’ என்று கண்கள் மூடி, கரம் குவித்துப் பாடினான் சேந்தன். பிறகு பதிமூன்று பாடல்கள் பாடினார். மெய்யுருகிப் போனார்கள். சட்டென்று சகதியில் இருந்து நகர்ந்து முன்னேறியது தேர்!
அதுவரை சேந்தனாக இருந்தவன், சேந்தனார் எனப் போற்றப்பட்டார். அவரை வணங்கினார்கள். காலில் விழுந்தார்கள். தலைக்கு மேல் கரம் குவித்து போற்றினார்கள். நடப்பதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து, உணர்ந்து, தெளிந்து, சிலிர்த்து உருகினார் சேந்தனார்! ‘எம் சிவம் எம் சிவம் எம் சிவம்’ என்று சிவ கோபுரத்தைக் கண்டு மண்ணில் நெடுஞ்சாண்கிடையாக நமஸ்கரித்தார்.
மனிதர்களுக்குள் சாதாரணன், அசாதாரணமானவன் என்பதெல்லாம் உண்டு. ஆனால், ஏழையோ சாமானியனோ... அங்கே உண்மையான பக்தியே கடவுளைக் குளிர்விக்கும். மகிழச் செய்யும். அருள் செய்ய வழிவகுக்கும் என்பதை உலகுக்கு உணர்த்தினார் ஈசன்.
சேந்தனாருக்கு, சிவபெருமானே வந்து அருள்புரிந்த நன்னாள்... மார்கழித் திருவாதிரைத் திருநாள். எனவே இன்றும் சிவாலயங்களில், மார்கழி திருவாதிரையின் போது, களி செய்து இறைவனுக்குப் படைத்து பிரசாதமாக வழங்குவது தொடர்கிறது. இல்லங்களில் களி படைத்து வணங்குவது வழக்கத்தில் உள்ளது. ‘திருவாதிரைக்கு ஒரு வாய் களி! உண்ணாதவருக்கு நரகக் குழி’ என்பார்கள் முன்னோர்கள்!
மார்கழித் திருவாதிரை நன்னாள் நாளைய தினம் 30ம் தேதி புதன்கிழமை ஆருத்ரா தரிசனத் திருநாள். அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் செல்லுங்கள். களியமுது படைத்து வீட்டில் பூஜித்து வழிபடுங்கள். ‘திருச்சிற்றம்பலம்’ என்று சொல்லி சிவ புராணம் பாராயணம் செய்து, ருத்ரம் ஜபித்து வேண்டிக்கொள்ளுங்கள்.
தென்னாடுடைய சிவபெருமான், களியமுது போல் நம் வாழ்க்கையைத் தித்திக்கச் செய்வார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT