Published : 22 Oct 2015 12:21 PM
Last Updated : 22 Oct 2015 12:21 PM
அறிவுக் கூர்மையும், உடல் வலிமையும், முகப் பொலிவும், ஒன்பது அடி உயரமும் கொண்ட வாசுதேவன் தன் இளம் வயதிலேயே பல அற்புதங்களைச் செய்தவர்.
உடுப்பியை அடுத்த கிராமம் ஒன்றில் பட்டராகப் பணி புரிந்தவருக்கு மகனாக 1239-ம் ஆண்டு பிறந்த ஆண் குழந்தைக்கு வாசுதேவன் எனப் பெயர் சூட்டப்பட்டது. அற்புதங்கள் செய்த வாசுதேவன் தமது பத்தாம் வயதில் துறவறம் மேற்க்கொள்ள எண்ணினார். இதனை விரும்பாத பெற்றோருக்கு வேறு ஒரு மகன் பிறக்கும் வரை துறவறம் பூணும் திட்டத்தை ஒத்தி வைப்பதாக வாக்களித்தார் வாசுதேவன். அவருக்குத் தம்பி பிறந்தவுடன் துறவறம் மேற்கொண்டார். யார் இந்த வாசுதேவன்? பின்னாளில் துவைதக் கொள்கைகள் கொண்ட மத்வ மதத்தை உருவாக்கிய ஸ்ரீமத்வாச்சாரியார்.
உடுப்பியில் அச்யுத பிரேக்ஷாக்சாரியார் என்ற குருவிடம் சந்நியாச தீட்சை பெற்று, ஆனந்த தீர்த்தர் என்ற நாமத்துடன் வேத, உபநிஷத்துக்களைக் கற்றுத் தேர்ந்தார் வாசுதேவன். பாரத தேசம் முழுவதும் யாத்திரை மேற்கொண்ட ஆனந்தத் தீர்த்தர், பத்ரி ஷேத்திரத்தில் பகவத் கீதைக்குக் கீதா பாஷ்யம் விளக்கவுரை எழுதினார்.
இந்த உரையை வேத வியாசரிடம் சமர்ப்பித்தபோது, ஒரே ஒரு திருத்தம் மட்டுமே செய்து அந்த விளக்க உரையை ஆமோதித்ததாக மத்வ விஜயம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருத்தம் என்னவென்றால், உரையின் ஆரம்பத்தில் ஆனந்த தீர்த்தர் தன் `சக்திக்குத் தகுந்த` என்று குறிப்பிட்டிருந்த சொற்களுக்குப் பதிலாகப் பூரணமாக என மெருகேற்றினாராம் குரு வியாசர்.
ஆனந்த தீர்த்தரின் முதல் படைப்பான கீதாபாஷ்யத்தைத் தொடர்ந்து, பிரம்ம சூத்திரம் என்ற வியாசரின் படைப்பிற்கு முற்றிலும் புதிய உரை எழுதினார். பத்ரி ஸ்ரீத்திரத்தில் வேத வியாசரை மறுபடியும் கண்டு வணங்கித் தன் பாஷ்யத்திற்கான ஒப்புதலையும் பெற்றார்.
பாரத தேசம் முழுவதும் யாத்திரைகள் செய்த ஸ்ரீமத்வாச்சாரியாரிடம், பல பண்டிதர்கள் வாதப் பிரதிவாதங்கள் செய்து, தோல்வியுற்றதால், அவரது சீடர்களானார்கள். முப்பத்திரண்டு லட்சணங்கள் கொண்ட ஸ்ரீமத்வரிடம் சோபன பட்டர், சாமா சாஸ்திரி ஆகிய அத்வைத பண்டிதர்கள் சரணடைந்து, முறையே பத்மநாப தீர்த்தர், நரஹரி தீர்த்தர் என்ற பெயர்களுடன் சீடர்கள் ஆனார்கள்.
ஸ்ரீமத்வர் ஒரு முறை கடற்கரையில் அமர்ந்து தியானம் செய்தபொழுது பெரும் புயல் வீசியதாம். அப்போது கரை நோக்கி வந்துகொண்டிருந்த கப்பல் கடல் நீரினால் அலைக்கழிக்கப்பட்டு மூழ்க இருந்தது. அதில் உள்ளப் பயணிகளின் கூக்குரலைக் கேட்டு தியானம் கலைந்த மத்வர், அவர்களைக் காக்கக் கோரித் தனது குருவை மனதால் வணங்கினார். குருவருளும் இவரது தவ வலிமையும் சேர்ந்து கப்பலில் இருந்த வியாபாரிகள் காப்பாற்றப்பட்டனராம்.
வியாபாரிகள், தங்கள் உயிரைக் காப்பாற்றிய ஸ்ரீமத்வருக்கு விலை மதிப்பில்லாத பொன்னும் பொருளும் வழங்க முன் வந்தனர். அவற்றை வாங்க மறுத்த ஸ்ரீமத்வர், அக்கப்பலில் இருந்த பாறை போன்ற பொருளை மட்டுமே கேட்டுப் பெற்றார். அப்பாறையில் கோபி சந்தனத்தால் மறைக்கப்பட்டிருந்த கிருஷ்ண விக்கிரகத்தை வெளிக்கொணர்ந்து உடுப்பியில் பிரதிஷ்டை செய்தார்.
அவர் இயற்றிய பன்னிரு அத்தியாயங்கள் கொண்ட `த்வாதஸ ஸ்தோத்திரம்` இன்றளவும் ஓதப்படுகிறது. முப்பத்தேழு கிரந்தங்களை இயற்றியுள்ளார். `மகாபாரத தாத்பரிய நிர்ணயம்` என்னும் பெயரில் மகாபாரத உரையும், `பாகவத தாத்பரிய நிர்ணயம்` என்ற பெயரில் ஸ்ரீமத் பாகவத புராண உரை, பத்து உபநிஷத்துகளின் விளக்கங்கள், பகவத் கீதைக்கு இரண்டு உரைகள், ரிக் வேத பாஷ்யம், பிரம்ம சூத்ரம் தொடர்பான நான்கு நூல்கள் ஆகியவை இதில் அடங்கும்.
துவைதம் என்று பரவலாக அழைக்கப்படும் ஸ்ரீமத்வ மத சித்தாந்தம், உலகம் யாவையும் உண்மையானது; மாயத் தோற்றம் அல்ல என்கிறது. பக்தியால் மோட்ச நிலையை அடைய முடியும் என இம்மதக் கோட்பாடு தெரிவிக்கிறது.
ஸ்ரீமத்வரின் பிரதம சீடரான த்ரிவிக்ரம பண்டிதர் அபூர்வமான காட்சி ஒன்றைக் கண்டாராம். அதில் அனுமன் ராமரைப் பூஜிப்பதையும், பீமன் கிருஷ்ணனைப் பூஜிப்பதையும், மத்வர் வியாசரைப் பூஜிப்பதையும் ஒரே நேரத்தில் கண்டதை ஆதாரமாகக் கொண்டு ஹரிவாயு துதி என்ற வாயு தேவனின் மூன்று அவதாரங்களையும் துதி செய்யும் கிரந்தத்தை இயற்றினார்.
ஸ்ரீமத்வர் தன் வாழ்நாளில் எட்டு மடங்களை நிறுவினார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மடத்தின் அதிபதி, அலை மீது ஆடி வந்த கப்பலில் இருந்த உடுப்பி கிருஷ்ணனுக்கு ஆராதனை செய்யும் `பர்யாய` முறையைக் கொண்டுவந்தார். ஜெயதீர்த்தர், ஸ்ரீராகவேந்திரர் ஆகியோர் ஸ்ரீமத்வாச்சாரியாரின் வழியில் தோன்றிய மகான்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT