Published : 22 Oct 2015 12:31 PM
Last Updated : 22 Oct 2015 12:31 PM
சரியான அறிவு மற்றும் நேசத்துடன் இந்த உலகை நீங்கள் ஆராய்ந்தீர்களெனில், அது மலரைப் போலத் தெரியும். சில கணங்களே மலர்ந்து விரைவில் உலர்ந்துவிடும். இருப்பு, இல்லை என்ற வார்த்தைகள் அதற்குப் பொருந்தாது.
சரியான அறிதல் மற்றும் முழுமையான கருணையுடன் இந்த உலகத்தைப் பார்ப்பீர்களெனில், அது கனவைப் போன்றிருக்கும்; அது தோன்றும், ஒரு சுவடுமின்றி உடனை நீங்கிவிடும். இங்கேயும் இருப்பு, இல்லை என்ற எந்த வியாக்கியானத்திற்கும் பொருளில்லை.
நீங்கள் இந்த உலகை முழுமையான ஞானத்துடனும் பிரியத்துடனும் காண முயலும்போது, அது மனித மனத்தால் முழுமையாக விளங்கிக்கொள்ளவியலாத, ஒரு தரிசனம் போல இருக்கும். இங்கேயும் இருப்பு, இல்லை என்ற சொற்களுக்கு அர்த்தமேயில்லை.
அனைத்தையும் கடந்த அறிவு மற்றும் அன்புடன் திகழும்போது, பொருட்களுடனோ நபர்களுடனோ எந்த பந்தமும் இருக்க வாய்ப்பில்லை. உங்களுக்கு அகந்தை இருக்காது. நீங்கள் அறிந்தவரென்று உங்களை நீங்கள் கருத மாட்டீர்கள். பிறரையும் உங்களுக்குத் தெரியுமென்று கருத மாட்டீர்கள். புத்திசாலித்தனம் மற்றும் விருப்பங்கள் ஏற்படுத்தும் தடைகளிலிருந்து விடுதலையடைந்தவர் நீங்கள்.
நீங்கள் இன்னும் நிர்வாணத்திற்குள் தொலைந்து போகவில்லை. நிர்வாணமும் உங்களின் உள்ளும் இல்லை. அறிவது, அறிவதற்காட்படுவது என்ற இரண்டு எதிர்நிலைகளையும் கடக்கும் நிலையே நிர்வாணா எனப்படும்; ஆனால் நீங்கள் களங்கமற்றுத் திகழ்கிறீர்கள்; நீங்கள் அனைத்து ஆசைகளிலிருந்தும் விடுபட்டவர்; நீங்கள் அனைத்து ஊழல்களிலிருந்தும் கழுவப்பட்டவர்.
மாயையாலான இந்த உலகில் புகழ்ச்சியும் இகழ்ச்சியும் உண்டு. ஆனால் அனைத்தையும் கடந்த நிலையில், எண்ணத்துக்கும் புலன்களுக்கும் அப்பாற்பட்ட யதார்த்தத்தில் புகழ்வதற்கு என்ன இருக்கிறது?
(லங்காவதார சூத்திரத்திலிருந்து)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT