Published : 26 Dec 2020 02:11 PM
Last Updated : 26 Dec 2020 02:11 PM
சிதம்பரம் நடராஜர் கோயிலில் வாசனைப் பொருள்களால் செய்யப்பட்ட தெருவடைச்சான் வீதியுலா நடைபெற்றது. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சுவாமி தரிசனம் செய்தனர்.
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, காலை மற்றும் இரவு பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஐந்தாம் நாள் திருவிழாவான தெருவடைச்சான் நேற்று (டிச. 25) இரவு 11 மணிக்கு வீதியுலா சென்றது. இந்த தெருவடைச்சான் முழுவதும் வாசனைப் பொருள்களான ஏலக்காய், கிராம்பு, முந்திரி, பாதாம், பிஸ்தா, அத்திப்பழம் போன்றவற்றால் செய்யப்பட்டுள்ளது.
தெருவடைச்சான் என்பது தெரு முழுவதையும் அடைத்துக் கொண்டு சாமி முக்கிய வீதிகள் வழியாக சென்று கோயிலை அடைவது தெருவடைச்சான் வீதி உலா என்று பெயர்
இதை பக்தர்கள் ஆச்சர்யத்துடன் கண்டுகளித்து, செல்போனில் போட்டோ எடுத்துச் சென்றனர். மேலும், பலர் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
நடராஜர் கோயில் தரிசன விழாவில் இதுபோல வாசனைப் பொருள்களைக் கொண்டு தெருவடைச்சான் அமைத்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கான ஏற்பாடுகளை மணியம் மற்றும் உற்சவ பொறுப்பு சங்கர் தீட்சிதர் செய்திருந்தார்.
வரும் 29-ம் தேதி தேர்த் திருவிழாவும், 30-ம் தேதி தரிசன விழாவும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT