Published : 24 Dec 2020 03:41 PM
Last Updated : 24 Dec 2020 03:41 PM
வைகுண்ட ஏகாதசி நன்னாளில், விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள் கூட அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாளை தரிசித்து துளசி மாலை சார்த்தி வணங்குவோம். வேண்டுவோம். வளம் பெறுவோம்!
புராணத்தில், ‘முரன்’ என்கிற அசுரனையும் அவனின் அட்டூழியங்களையும் விவரித்திருக்கிறது. தன்னுடைய தவ வலிமையால் வரங்களைப் பெற்றவன், தேவர்களையும் முனிவர் பெருமக்களையும் கொடுமைப்படுத்தினான். துன்புறுத்தினான். அவர்களுக்கு நிம்மதியே இல்லாமல் செய்தான்.
இவனின் அரக்க அட்டூழியத்தால் தேவலோகமே கிடுகிடுத்துப் போனது. இந்திரன் கவலைக்குள்ளானான். இந்திரன் தேவர்களையும் முனிவர்களையும் அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் சென்று முறையிட்டான். சிவபெருமானின் அறிவுரைப்படி, மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டான் இந்திரன்.
இந்திராதி தேவர்களையும் வீரர்களையும் கொண்டு முரனை எதிர்த்துப் போரிட்டார் மகாவிஷ்ணு. சளைக்காமல் போராடி முன்னேறினான் முரன். இந்த யுத்தமானது நீண்டகாலமாக நடந்ததாகச் சொல்கிறது புராணம்.
மகாவிஷ்ணுவும் சங்கு சக்கரம் முதலான பஞ்சாயுதங்களைக் கொண்டும் அழிக்க முனைந்தார். ஒருநாள்... பத்ரிகாச்ரமத்தில் சிம்ஹாஹி எனும் குகையில் சயனித்திருந்தார் மகாவிஷ்ணு. அப்போது அங்கேயும் நுழைந்தான் முரன். மகாவிஷ்ணுவை நோக்கி ஆயுத்தத்தை வீச முற்பட்டான். அந்தத் தருணத்தில், மகாவிஷ்ணுவின் திருமேனியில் இருந்து தர்மதேவதையானவள் வெளிப்பட்டாள். முரன் என்கிற அசுரனை ஒற்றைப்பார்வையால் எரித்துச் சாம்பலாக்கினாள். அந்த நொடியே மடிந்து ஒழிந்தான் முரன்.
அவனை கொன்றழித்த நிறைவுடன் மகாவிஷ்ணுவிடம் வந்து சேர்ந்தாள் தர்மதேவதை. நமஸ்கரித்தாள். மகாவிஷ்ணு தர்மதேவதைக்கு ஏகாதசி எனப் பெயரிட்டார்.
ஏகாதசி எனும் திதி இப்படித்தான் உருவானது என்கிறது புராணம்.
மார்கழி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் அமாவாசையையொட்டி வரும் ஏகாதசி, சுக்ல பட்சத்தில் பெளர்ணமியையொட்டி வருகிற ஏகாதசி என்று மாதத்துக்கு இரண்டு ஏகாதசிகள் வருகின்றன. இதில் கிருஷ்ண பட்ச ஏகாதசி ‘உற்பத்தி ஏகாதசி’ என்று போற்றப்படுகிறது.
பொதுவாகவே, ஏகாதசி விரதம் என்பது அனைத்து பாவங்களையும் போக்கவல்லது என்பது ஐதீகம். மாதந்தோறும் வருகிற ஏகாதசியே பாவம் போக்கும் என்றால் மார்கழி மாதத்தில் வருகிற வைகுண்ட ஏகாதசி விரதம் இன்னும் மகத்துவமானது என்பார்கள். வைகுண்ட ஏகாதசி விரதம் மேற்கொண்டு பரமபத வாசலை பரந்தாமனை தரிசித்தால், அஸ்வமேத யாகம் செய்த பலன்கள் கிடைக்கும். மகா புண்ணியம் என விவரிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
வைகுண்ட ஏகாதசி நன்னாளில், விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள் கூட அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாளை தரிசித்து துளசி மாலை சார்த்தி வணங்குவோம். வேண்டுவோம். வளம் பெறுவோம்!
25.12.2020 வெள்ளிக்கிழமை வைகுண்ட ஏகாதசி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT