Published : 22 Dec 2020 10:07 PM
Last Updated : 22 Dec 2020 10:07 PM
வருகிற 25ம் தேதி வைகுண்ட ஏகாதசிப் பெருநாள். மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என கிருஷ்ணாவதாரத்தில் அருளியுள்ளார் மகாவிஷ்ணு. மார்கழி மாதத்தில், அருகில் உள்ள பெருமாளைத் தரிசியுங்கள். ஒருமுறையேனும் ஸ்ரீரங்கம் வந்து அரங்கனை தரிசித்துப் பிரார்த்தியுங்கள். அருளும் பொருளும் அள்ளித்தருவான் அரங்கன்.
காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவே அமைந்துள்ள அற்புதமான திருத்தலம் ஸ்ரீரங்கம். இங்கே பெருமாளின் திருநாமம் ஸ்ரீரங்கநாதப் பெருமாள். தாயாரின் திருநாமம் ஸ்ரீரங்கநாயகித் தாயார்.
ரங்கநாதரைச் சுற்றி ஏழு பிராகாரங்கள் அமைந்துள்ளன. ஏழு என்றால் சப்த என்று அர்த்தம். இந்தப் பிராகாரங்களை சப்த பிராகாரங்கள் என்பார்கள். சப்த பிராகாரங்களை சப்தலோகங்களாக சொல்கிறது ஸ்தல புராணம்.
கோயில் இருக்கும். பிராகாரம் இருக்கும். பின்னர் கோயிலுக்கு வெளியே வீதிகள் இருக்கும். ஆனால், ஸ்ரீரங்கத்தின் வீதிகளே பிராகாரங்களாக அமைந்திருப்பது இன்னொரு அதிசயம். ஏழாவது பிராகாரத்தை மாடமாளிகை பிரதட்சணம் என்பார்கள். இந்தப் பிராகாரத்தின் தெற்கு நுழைவாயில், மொட்டை கோபுரமாகத்தான் இருந்தது. அகோபில மடத்தின் 44வது பட்டம் அழகிய சிங்கர் ஜீயர் சுவாமிகள், கோபுரம் கட்டப்பட்டது. சுமார் 236 உயரம் கொண்ட கோபுரம். உலகில் அதிக உயரம் கொண்ட கோபுரம் என்று பெருமிதத்துடன் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இங்கேயே பலகாலம் தங்கி, ரங்கநாதருக்கு சேவை செய்த ராமானுஜர், இங்கேயே மோட்சம்அடைந்தார். அவரது உடலை, சீடர்கள் பத்மாசனத்தில் அமர வைத்தபடி அடக்கம் செய்தனர். சிலகாலம் கழித்து அவர் அதே கோலத்திலேயே பூமிக்கு மேலெழுந்தார். இவர் இங்கு தனிச்சந்நிதியில் காட்சி தருகிறார். இவருக்கு திருமஞ்சனம் கிடையாது. சித்திரை திருவாதிரையன்று குங்குமப்பூ, பச்சைகற்பூரம் சேர்ந்த கலவை சாத்தப்படுகிறது.
கார்த்திகை கைசிக ஏகாதசியன்று (வளர்பிறை ஏகாதசி) இரவில் நம்பெருமாளுக்கு 365 போர்வைகளை ஒவ்வொன்றாக போர்த்தும் வைபவம் விடிய விடிய நடக்கிறது. சுவாமிக்கு தினசரி பூஜையில் அணிவிக்கும் வஸ்திரங்களில் குறைபாடு இருந்தால், அதை நிவர்த்தி செய்யும்விதமாக இந்த பரிகாரம் செய்கின்றனர். கார்த்திகை, மார்கழி குளிர் மாதங்கள் என்பதால், சுவாமியின் மீதான அன்பின் காரணமாகவும், போர்வை அணிவிப்பதாகச் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
உடையவர் எனப்படும் ராமானுஜரின் சந்நிதியில், ஒரு பத்துநிமிடம் கண்கள் மூடி அமர்ந்தால், நல்ல அதிர்வுகளை உணரலாம் என்று சொல்லிச் சிலிர்க்கிறார்கள் பக்தர்கள்.
வருகிற 25ம் தேதி வைகுண்ட ஏகாதசிப் பெருநாள். மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என கிருஷ்ணாவதாரத்தில் அருளியுள்ளார் மகாவிஷ்ணு. மார்கழி மாதத்தில், அருகில் உள்ள பெருமாளைத் தரிசியுங்கள். ஒருமுறையேனும் ஸ்ரீரங்கம் வந்து அரங்கனை தரிசித்துப் பிரார்த்தியுங்கள். அருளும் பொருளும் அள்ளித்தருவான் அரங்கன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT