Last Updated : 22 Dec, 2020 11:39 AM

 

Published : 22 Dec 2020 11:39 AM
Last Updated : 22 Dec 2020 11:39 AM

கஷ்டமெல்லாம் தீர்க்கும் அஷ்டமி வழிபாடு; பயமெல்லாம் போக்கும் பைரவ தரிசனம்! 

அஷ்டமியில், கஷ்டமெல்லாம் தீர்த்து வைக்கும் பைரவரை தரிசித்து பிரார்த்தனை செய்தால், நம்முடைய பயத்தையெல்லாம் போக்கி அருளுவார் பைரவர். எதிர்ப்பையெல்லாம் தவிடுபொடியக்கித் தருவார் காலபைரவர். சொர்ணாகர்ஷண பைரவரின் மூலமந்திரம் சொல்லி பாராயணம் செய்து, தெருநாய்களுக்கு உணவளித்தாலோ பிஸ்கட் வழங்கினாலோ நம் பாவம் பறந்தோடும். எதிர்ப்புகள் விலகும். கடன் தொல்லைகளில் இருந்து விடுபடலாம். எதிரிகள் வலுவிழப்பார்கள் என்பது ஐதீகம்.

ஒவ்வொரு நாளும் திதி உண்டு. முருகப்பெருமானுக்கு உகந்தது சஷ்டி திதி. சஷ்டியில் முருகக் கடவுளை நினைத்து விரதம் இருப்பார்கள். பூஜிப்பார்கள். கந்தப்பெருமானைத் தரிசிப்பார்கள். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வார்கள்.

அதேபோல் சதுர்த்தசி பிள்ளையாருக்கு விசேஷம். இதைத்தான் ஆவணி மாதத்தில் விநாயக சதுர்த்தி என்றும் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி என்றும் வழிபடுகிறோம்.
ஏகாதசி திதி என்பது பெருமாளுக்கு உகந்த நாள். இந்த நாளில் பெருமாள் வழிபாடு மிக மிக உன்னதமானது. துளசி தீர்த்தம் பருகுவதும் மோட்சம் கொடுக்கும். புண்ணியங்களைப் பெற்றுத் தரும் என்றும் சொல்லுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

அதேபோல், திரயோதசி என்பது சிவ வழிபாட்டுக்கு உரிய நாள். இதுவே பிரதோஷம் என்று வழிபடப்படுகிறது. சிவாலயங்களில் சிவலிங்கத் திருமேனிக்கும் நந்திதேவருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

அஷ்டமி, பைரவர் பெருமானுக்கான நாள். நம்மைச் சுற்றியுள்ள எட்டுத்திசைகளில் இருந்தும் வருகிற தீய சக்திகளை விரட்டி அருளும் வல்லமை கொண்டவர் பைரவர். நல்ல தேவதைகளை நம் பக்கம் அரணென அனுப்பி வைக்கும் அருள் நிறைந்தவர் பைரவர். அதனால்தான் கலியுகத்துக்கு காலபைரவர் என்றே சொல்கிறார்கள்.

தேய்பிறை அஷ்டமி பைரவ வழிபாட்டுக்கு உகந்தது என்றாலும் வளர்பிறை அஷ்டமியும் பைரவருக்கான நன்னாள்தான். இன்று 22ம் தேதி செவ்வாய்க்கிழமை, அஷ்டமி. வளர்பிறை அஷ்டமி. இந்தநாளில் பைரவ வழிபாடு செய்யுங்கள். பைரவரை தரிசனம் செய்யுங்கள்.

சொர்ணாகர்ஷண பைரவரின் மூலமந்திரம் சொல்லி பாராயணம் செய்து, தெருநாய்களுக்கு உணவளித்தாலோ பிஸ்கட் வழங்கினாலோ நம் பாவம் பறந்தோடும். எதிர்ப்புகள் விலகும். கடன் தொல்லைகளில் இருந்து விடுபடலாம். எதிரிகள் வலுவிழப்பார்கள் என்பது ஐதீகம்.

பைரவரை வணங்குவோம். பயம் அனைத்தும் போக்கி அருளுவார் பைரவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x