Published : 21 Dec 2020 09:32 PM
Last Updated : 21 Dec 2020 09:32 PM
வைகுண்ட ஏகாதசி எனும் நன்னாளில், அற்புதமான விரத நாளில், அரங்கனை தரிசித்தாலும் சரி... நினைத்தாலும் சரி... நம் பாவங்களெல்லாம் தொலையும் புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதீகம். ரங்கனை ஸேவிப்போம். நம் இம்மைக்கும் மறுமைக்குமாக அருளிச்செய்வான் ஸ்ரீரங்கன்!
காவிரிக்கரையில் அமைந்துள்ள அற்புத திருத்தலம் ஸ்ரீரங்கம். காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவே அமைந்துள்ள புண்ணிய க்ஷேத்திரம் இது.
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் என இத்தனை ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட அற்புதமான க்ஷேத்திரம் ஸ்ரீரங்கம். மூலவர் ஸ்ரீரங்கநாதர். தாயாரின் திருநாமம் ஸ்ரீரங்கநாயகி.
இந்தத் தலத்தில் நடக்கும் மூன்று பிரம்மோற்ஸவ விழாக்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர். அதேபோல, மாசி மாத தெப்பத்திருவிழா பத்துநாள் விழாவிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கோயிலே விழாக்கோலம் பூண்டிருக்கும். தவிர மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்தவண்ணம் இருக்கும்.
ஸ்ரீரங்கம், ஒன்பது தீர்த்தங்களைக் கொண்ட தலம். வருடம் 365 நாட்களில் முக்கால்வாசி நாட்கள் திருவிழா நடைபெறும் பிரமாண்டமான கோயில். அதில் முக்கியமான திருவிழாதான் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா.
பகல்பத்து, ராப்பத்து எனும் இந்தத் திருவிழா நாட்களில், சுவாமியின் முன்னிலையில் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள் முழுவதுமாகப் பாடப்படும். மிக முக்கியமான இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு அரங்கனை ஸேவிப்பார்கள்.
வருகிற 25.12.2020 வெள்ளிக்கிழமை வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா.
ரங்கனை ஸேவிப்போம். நம் இம்மைக்கும் மறுமைக்குமாக அருளிச்செய்வான் ஸ்ரீரங்கன்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT