Published : 21 Dec 2020 01:50 PM
Last Updated : 21 Dec 2020 01:50 PM
விளக்கேற்றி வழிபட்டால், அந்த வீட்டில் நிம்மதியும் ஆனந்தமும் நிறைந்திருக்கும். இல்லத்தில் சுபிட்சம் குடிகொள்ளும். சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறலாம். தாலி பாக்கியம் நிலைத்திருக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
பூஜையும் வழிபாடும் மிக மிக முக்கியம் என்கின்றன ஞானநூல்கள். பொதுவாகவே, மிகப்பெரிய அளவில் பூஜை செய்கிறோமோ இல்லையோ, வீட்டுப் பூஜையறையில், சிறிய அளவில் வழிபாடுகள் செய்வது பெரும்பான்மையானோரின் வழக்கம்.
அப்படிப் பூஜை செய்யும் போது நாம் செய்கிற மிக முக்கியமான விஷயம்... விளக்கேற்றுதல். எந்த் பூஜையாக இருந்தாலும், எந்த தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும் நாம் முதலில் செய்வது விளக்கேற்றுவதைத்தான்!
குத்துவிளக்கு ஏற்றுவது வழக்கம். பொதுவாகவே பெண்கள்தான் குத்துவிளக்கு ஏற்றவேண்டும். ஒருவேளை இயலாத சூழல் இருந்தால் ஆண்கள் குத்துவிளக்கு ஏற்றலாம். மற்றபடி பெண்கள்தான் குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். கன்னிப்பெண்களும் குத்துவிளக்கு ஏற்றலாம்.
குத்துவிளக்கு ஏற்றிவிட்டு சிறிது நேரம் கழித்து மலையேற்ற வேண்டும். அதாவது குத்துவிளக்கை அணைப்பது என்று சொல்லமாட்டார்கள். அதனை மலையேற்றுவது என்றுதான் சொல்லுவார்கள். அப்படி மலையேற்றுவது குறித்தும் ஆச்சார்யர்கள் விவரித்துள்ளனர்.
குத்துவிளக்கு என்பதை காலையும் மாலையும் ஏற்ற வேண்டும். கிழக்கு நோக்கியோ, வடக்கு நோக்கியோ நின்றுகொண்டு விளக்கேற்றலாம். ஆனால் எதன் பொருட்டும் தெற்கு நோக்கி நின்றுகொண்டு விளக்கேற்றக்கூடாது.
விளக்கேற்றியதும் எரிந்துகொண்டிருக்கும் திரிக்கு இரண்டுபக்கமும் குங்குமம் வைப்பது வழக்கம். அப்படி குங்குமம் வைப்பது மிக மிக வலிமையைத் தரும். இல்லத்தில் ஐஸ்வர்யங்களைக் கொடுக்கும். குத்துவிளக்கு ஏற்றி, திரிக்கு அருகில் குங்குமம் வைத்ததும் அந்த விளக்கையே தெய்வ சொரூபமாக பாவித்து வணங்க வேண்டும். நமஸ்கரிக்க வேண்டும்.
பின்னர் பூஜைகள் முடிந்த பிறகு விளக்கை மலையேற்ற வேண்டும். அப்படி மலையேற்றும்போது வாய் மூலமாக ஊதியோ கையை விசிறி போல் வீசியோ அணைக்கக் கூடாது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். அதேசமயம் எரிந்து கொண்டிருக்கும் திருவிளக்கு தாமாகவே அணையும் வரைக்கும் விட்டுவிடவும் கூடாது.
மலையேற்றுவதை ஒரு பூவை எடுத்து விளக்குத்திரியின் மீது வைத்து மலையேற்றலாம். அப்படி மலையேற்றும் போது மீண்டும் விளக்கை நமஸ்கரிக்க வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
காலையும் மாலையும் விளக்கு ஏற்றி, விளக்குத் திரிக்கு அருகில் பொட்டிட்டு, நமஸ்கரித்து விட்டு பூஜைகளை மேற்கொள்ளவேண்டும். பின்னர் சிறிது நேரம் கழித்து, விளக்கை நமஸ்கரித்து பூவைக் கொண்டு மலையேற்ற வேண்டும்.
இப்படி முறையான நியமங்களுடன் விளக்கேற்றி வழிபட்டால், அந்த வீட்டில் நிம்மதியும் ஆனந்தமும் நிறைந்திருக்கும். இல்லத்தில் சுபிட்சம் குடிகொள்ளும். சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறலாம். தாலி பாக்கியம் நிலைத்திருக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT