Published : 08 Oct 2015 12:22 PM
Last Updated : 08 Oct 2015 12:22 PM
அக்.10 அருணந்தி சிவாச்சாரியார் குருபூஜை
“சிவத்திற்கு மேல் தெய்வமில்லை, சித்திக்கு மேல் நூல் இல்லை” என்ற பழமொழி ‘சிவஞான சித்தியார்’ நூலின் சிறப்பினை எடுத்துரைக்கிறது. இந்நூல் சைவசித்தாந்த உண்மைகளை உணர்த்தும் பதினான்கு மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றாகும். இதனை அருளியவர் சந்தானக் குரவர்கள் நால்வருள் ஒருவரான அருணந்தி சிவாச்சாரியார்.
அருணந்தியார் அவதாரம்
திருத்துறையூர் எனும் ஊரில், ஆதிசைவ மரபில் அவதாரம் செய்தவர் அருணந்தி. மெய்கண்டாரின் சீடராகத் திகழ்ந்த இவர் சகல ஆகமங்களிலும் வல்லவராய்த் திகழ்ந்தமையால் “சகலாகமப் பண்டிதர்” எனும் சிறப்புப் பெயர் பெற்றார்.
ஆணவத்தை உணர்ந்த அருணந்தி
சந்தானக் குரவர்களுள் முதல்வரான மெய்கண்டார், தம்மை அடைந்த மாணவர்களுக்கு அருள் உபதேசம் செய்து வந்தார். இதனை அறிந்த சகலாகமர், வயதில் சிறிய மெய்கண்டார் தம்மைக் காணவரவில்லை என்று வருத்தம் கொண்டார். அதோடு தாமே அவரைக் காணவும் சென்றார். ஓரிடத்தில் இருந்து கொண்டு மெய்கண்டாரை அழைத்து வரச் சொல்லித் தம் சீடர்களை அனுப்பினார். சென்ற சீடர்கள் மெய்கண்டாரின் சாத்திர உபதேசத்தில் ஈடுபட்டு அவரடிக்கு ஆளாகினர். கோபம் கொண்ட சகலாகமர், மெய்கண்டார் உபதேசம் செய்யும் இடத்திற்குத் தாமே சென்றார்.
அப்போது மெய்கண்டார் இவரைக் கவனிக்காமல், மாணவர்களுக்கு ஆணவம் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். சகலாகமர் மெய்கண்டாரிடம், “ஆணவத்தில் சொரூபம் யாது?” என்றார். அதற்கு மெய்கண்டார் அவரை அருட்பார்வையால் நோக்கித் தமது திருவிரலால் அவரைச் சுட்டிக் காட்டி ஆணவத்தை உணரச் செய்தார். குருவின் அருள்திறத்தை எண்ணி அவரின் திருவடியில் வீழ்ந்து வணங்கினார் சகலாகமர். மெய்கண்டார் அவருக்குத் திருவடி தீட்சை செய்து மெய்யுணர்வு அருளி “அருணந்தி” என்ற பெயரையும் சூட்டியருளினார்.
அருணந்தி அருளிய நூல்கள்
அருணந்தி சிவாச்சாரியார் அருளிய நூல்கள் இரண்டு. அவற்றுள் சிறந்த நூலான சிவஞானசித்தியார் 629 விருத்தங்களைக் கொண்டது. தமிழ் ஆகமம் எனப்படும் இந்நூலுள் சுபக்கம், பரபக்கம் எனும் இரண்டு பிரிவுகள் உள்ளன. நூலில் சைவசித்தாந்த உண்மைகளோடு வாழ்வியல் நெறிகளையும் அழகுபடச் சொல்லியுள்ளார். சுபக்கம் பகுதியில் ஒரு பாடலில் சிறப்பு அறம் எது? என்று கூறியுள்ளார்.
“சினம்முதல் அகற்றி வாழும் செயல் அற மானால் யார்க்கும்
முனம்ஒரு தெய்வம் எங்கும் செயற்கு முன்னிலையாம் அன்றே”
இப்பாடலுள், “சினம் முதலிய தீயகுணங்களை விட்டு வாழ்ந்தால் அவர் விரும்பிய தெய்வம் அவரின் செயல்களுக்குத் துணையாக முன்வரும்” என்கிறார். மற்றொரு நூலான இருபா இருபது சைவர்களால் போற்றப்படும் சாத்திரமாகும். குருபக்தியை விளக்கும் சிறந்த நூல் இது.
இறைவன் திருவடிநிழலில்
சிவஞான சித்தியார் அருளிய சிவயோகியாகிய அருணந்தி சிவாச்சாரியார் புரட்டாசி மாத பூர நாளில் அகண்ட பரிபூரண சச்சிதானந்த நிலையை எய்தினார். இவரது சமாதித் திருக்கோயில் திருத்துறையூரில் அமைந்துள்ளது. அங்கு ஆண்டுதோறும் புரட்டாசி பூரநாளில் இவரது குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT