Published : 19 Dec 2020 02:34 PM
Last Updated : 19 Dec 2020 02:34 PM
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று சனிக்கிழமை என்பதால், ஆன்லைன் மூலம் பதிவு செய்த திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
சனி பகவானுக்கு தனி சன்னதியுடன் கூடிய, தர்பாரண்யேஸ்வரர் கோயிலில், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி வரும் டிச.27-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. அதிகாலை 5.22 மணிக்கு சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். சனிப்பெயர்ச்சி விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரக்கூடிய ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
டிச.19, 20, 26, 27, ஜன.2, 3, 9, 10, 16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் (சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்) வரக்கூடிய பக்தர்கள், தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்திருப்பது கட்டாயம். இலவச தரிசனம், சிறப்பு தரிசனம் உட்பட அனைத்து பக்தர்களும் தனித்தனியாக https://thirunallarutemple.org/sanipayarchi என்ற தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். செல்லத்தக்க இ-டிக்கெட் மற்றும் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர். நளன் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் மற்றும் பிற தீர்த்தங்களில் குளிக்கவோ, புனித நீராடவோ, மத சடங்குகள் நடத்தவோ அனுமதி இல்லை என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
சனிப்பெயர்ச்சிக்கு முந்தைய வாரத்திலும், பிந்தைய வாரங்களிலும் பக்தர்களின் வருகை அதிக அளவில் இருப்பது வழக்கம். இந்நிலையில், இன்று (டிச.19) திரளான அளவில் பக்தர்கள் வந்திருந்தனர். ஆன்லைன் மூலம் பதிவு செய்வது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிக அளவிலான பக்தர்கள் பதிவு செய்து கோயிலுக்கு வந்து தரிசித்துச் சென்றனர்.
உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, முகக்கவசம் அணிந்து, சானிடைசர் மூலம் கைகளைச் சுத்தம் செய்துகொண்ட பின்னர், தனிமனித இடைவெளியுடன், முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் மட்டும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே, காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், கோயில் தனி அதிகாரியுமான அர்ஜூன் சர்மா, தர்பார்ண்யேஸ்வரர் கோயிலில் நேற்று (டிச.18) ஆன்லைன் பதிவு நடைமுறைகள், பக்தர்கள் அனுமதிக்கப்படும் விதம், கோயிலின் பல்வேறு இடங்களையும், சனிப்பெயர்ச்சி விழாவுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சனிப்பெயர்ச்சி விழாவுக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கரோனா பரிசோதனை நடவடிக்கைகளுக்கான நடைமுறைகளும் செய்யப்பட்டுள்ளன. சனிப்பெயர்ச்சி விழா நாளன்று சுமார் ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்" என்றார்.
துணை மாவட்ட ஆட்சியரும், நிர்வாக அதிகாரியுமான (கோயில்கள்) எம்.ஆதர்ஷ், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட், மண்டலக் காவல் கண்காணிப்பாளர்கள் கே.எல்.வீரவல்லபன், ஆர்.ராகுநாயகம் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT