Last Updated : 08 Oct, 2015 01:00 PM

 

Published : 08 Oct 2015 01:00 PM
Last Updated : 08 Oct 2015 01:00 PM

தத்துவ விசாரம்: பக்திக்கு வந்த சோதனை!

கிருத யுகத்தில் பிரகலாதனாகப் பிறந்து நாராயணனின் அருளைப் பெற்றவர்தான் கலியுகத்தில் நாமதேவாக அவதரித்தார் என்பார்கள். ஒருசமயம் நாமதேவின் தந்தை பாண்டுரங்கனுக்கு நைவேத்தியம் படைத்துவிட்டு, `இது பாண்டுரங்கனுக்கு’ என்று சொன்னாராம். அப்போது நாமதேவ் ஐந்து வயதுச் சிறுவன். தந்தை சொன்னதை அப்படியே நம்பிவிட்டான்.

“பாண்டுரங்கா உனக்குத்தான் வந்து சாப்பிடு” என்றான்.

“பாண்டுரங்கன் வரவில்லை.

இரண்டு முறை, மூன்று முறை, பலமுறை கூப்பிட்டும் பாண்டுரங்கன் வரவில்லை. தான் கூப்பிட்டு பாண்டுரங்கன் வரவில்லையே என்ற கோபம் நாம்தேவுக்கு ஏற்படுகிறது.

“பாண்டுரங்கா நீ இப்போது சாப்பிடாவிட்டால், உன் மீதே மோதி என் மண்டையை உடைத்துக் கொள்வேன்” என்றான் சிறுவன் நாம்தேவ்.

அப்போதும் பாண்டுரங்கன் வரவில்லை. மனம் வெறுத்துப் போன நாம்தேவ், பாண்டுரங்கனின் சிலை மீது முட்டிக் கொள்ள முயன்றான். உடனே நாம்தேவின் முன்னால் தோன்றி அவனை அரவணைத்துக் காக்கிறான் பாண்டுரங்கன்.

நாம்தேவ் ஊட்டிவிட பாண்டுரங்கன் சாப்பிடுகிறான். பாண்டுரங்கன் ஊட்டிவிட சிறுவன் நாம்தேவ் சாப்பிடுகிறான். அன்றிலிருந்து இருவரும் இணைபிரியா நண்பர்களாகின்றனர்.

எண்ணற்ற பாடல்களை நாம்தேவ் எழுதிப் பாடி பாண்டுரங்கனுக்கு தினம் தினம் பாமாலை சூட்டினார். வாலிப வயதில் அடியெடுத்து வைத்தார் நாம்தேவ். பாண்டுரங்கனே தனக்கு நண்பன் என்பதால் நாம்தேவுக்குத் தலைக்கனம் ஏற்பட்டது.

பக்திக்கு வந்த சோதனை

பாண்டுரங்கனைப் புகழ்ந்து பாடும் எண்ணற்ற சந்த்கள் வாழும் பண்டரிபுரத்தில் வாழ்ந்த ஒரு பாண்டுரங்க பக்தர் கோராகும்பர். இவர் மண்பாண்டங்களைச் செய்யும் குயவர் வகுப்பைச் சேர்ந்தவர். தன் வீட்டில் நடக்கும் பஜனைக்கு வரும்படி நாமதேவ், விமூர்த்திநாதர், முக்தா பாய் போன்ற பல பக்தர்களையும் அழைத்தார்.

எல்லோரும் கோராகும்பரின் வீட்டுக்குச் சென்றனர். பஜனை நடந்து கொண்டிருக்கிறது. முக்தா பாய், மண் பாண்டங்கள் செய்யும் பகுதிக்குச் சென்றுவிடுகிறாள். அங்கிருந்த ஒரு கட்டையை எடுத்து, “இது என்ன கட்டை” என்றாள் கோராகும்பரிடம்.

“இது மண் பாண்டங்களைப் பதம் பார்க்கும் கட்டைம்மா” என்றார் கோராகும்பர்.

“அப்படியானால் இந்தக் கட்டையால் பஜனை செய்து கொண்டிருப்பவர்களின் தலையில் அடித்தால், அவர்கள் வெந்துவிட்டார்களா என்று தெரிந்துவிடும்தானே” என்றாள் முக்தா பாய்.

“அய்யய்யோ இதென்னம்மா விபரீத விளையாட்டு…” என்று மனம் பதைத்தார் கோராகும்பர்.

“பதட்டப்படாமல் என்னோடு வாருங்கள்” என்றாள் சக்தியின் அவதாரமாக மதிக்கப்படும் முக்தா பாய்.

இருவரும் பஜனை நடந்து கொண்டிருக்கும் கூடத்துக்கு வருகிறார்கள். முதலில் விமூர்த்தநாதரின் தலையில் `நங்’கென்று கட்டையால் அடிக்கிறாள் முக்தா பாய். `அரி’ என்றார் விமூர்த்தநாதர். அடுத்து, சோபானதீர்த்தரின் தலையில் அடிக்கிறாள். அவர் `ராதே கிருஷ்ணா’ என்றார். அடுத்து, நாம்தேவின் தலையில் அடிக்கிறாள் முக்தா பாய். அடி விழுந்ததும்… `யாரது என்னை அடித்தது?’ என்று கோபமாய் வெகுண்டெழுந்தார் நாம்தேவ்.

“இந்தக் கட்டை வேகலை” என்றாள் முக்தா பாய்.

தன்னுடைய பக்திக்குச் சோதனையா என்று தன் நண்பன் பாண்டுரங்கனிடமே நியாயம் கேட்டார் நாம்தேவ்.

“உனது பக்தியை நான் அறிவேன். ஆனாலும் உனக்கு குருபக்திபூர்வமான ஞானம் வேண்டும்” என்றான் பாண்டுரங்கன். நாம்தேவின் தலைக்கனம் மறைந்து விடோபாகேசரை தனது குருவாகக் கொள்கிறார்.

பக்தியின் படிக்கட்டான நாம்தேவ்

நாம்தேவின் பக்தியை மெச்சி வைகுண்டத்துக்கே என்னோடு வந்துவிடு என்கிறான் பாண்டுரங்கன். ஆனால் அதை மறுத்த நாம்தேவ், “உன்னை பக்தியோடு காணவரும் பக்தர்கள் மிதித்துவிட்டுச் செல்லும் வகையில் உன் ஆலயத்தின் படிக்கட்டுகளாக நான் ஆக வேண்டும் என்றார். அப்படியே நாம்தேவுக்கு அருள்பாலித்தாராம் பாண்டுரங்கன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x