Published : 15 Dec 2020 12:39 PM
Last Updated : 15 Dec 2020 12:39 PM
மார்கழி மாதப் பிறப்பில் மறக்காமல் தர்ப்பணம் செய்வது முன்னோர் வழிபாடு செய்வதும் நம்முடைய கடமை. எனவே அவசியம் முன்னோர் வழிபாட்டைச் செய்யுங்கள். தடைகள் அனைத்தும் தகர்ந்து முன்னுக்கு வருவீர்கள்.
நம் வாழ்வில் இஷ்ட தெய்வங்களை அடிக்கடி சென்றும் இல்லத்திலும் கூட வழிபட்டு வருகிறோம். பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கும் பரிகாரம் கொண்ட திருத்தலங்களுக்கும் சென்று வழிபாடுகள் செய்கிறோம்.
நல்லநாள் பெரியநாள் என்றால் வீட்டில் பூஜை செய்கிறோம். விழாக்கள் விமரிசையாக நடைபெறும் கோயில்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கிறோம்.
இஷ்ட தெய்வ வழிபாடு போல, பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது போல், முக்கியமான விழாக்களில் தரிசனம் செய்வது போல, குலதெய்வம் என்பதும் குலதெய்வ வழிபாடு என்பதும் நம் வாழ்வில் மிக மிக முக்கியம். நம்முடைய குலத்தையும் வம்சத்தையும் வம்ச விருத்தியையும் காத்தருளும் குலசாமி வழிபாடு என்பது மிக மிக முக்கியம்.
நம் குலசாமியை, குலதெய்வத்தை, குலதெய்வக் கோயிலை நமக்கு காட்டி அருளிய நம் முன்னோர்களை வழிபடுவது மிக மிக அவசியம்.
அமாவாசை என்பது முன்னோர் வழிபாட்டுக்கு உரிய நாள் என்பார்கள். நம் முன்னோர்களை பித்ருக்களை எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். முக்கியமாக, ஒவ்வொரு மாதத்தின் அமாவாசையிலும் கிரகண காலத்திலும் மகாளய பட்சம் எனப்படும் புரட்டாசி மாத நாட்களிலும் முன்னோர் வழிபாடு செய்ய வலியுறுத்துகிறது சாஸ்திரம்.
அதேபோல ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பின் போதும் முன்னோர்களுக்கு நம் கடமையைச் செய்யவேண்டும். தர்ப்பணம் செய்து எள்ளும் தண்ணீரும் அர்க்யம் செய்து அவர்களை ஆராதிக்க வேண்டும்.
நாளைய தினம் மார்கழி மாதம் பிறக்கிறது (16ம் தேதி புதன்கிழமை). மார்கழி மாதப் பிறப்பன்று முன்னோர்களை ஆராதனை செய்யுங்கள். கோத்திரம் மற்றும் அவர்களின் பெயர்களைச் சொல்லி எள்ளும் தண்ணீரும் கொண்டு அர்க்யம் செய்யுங்கள். அரிசி, வாழைக்காய், வெற்றிலை, பாக்கு, தட்சணை முதலானவற்றை ஆச்சார்யர்களுக்கு வழங்குங்கள்.
மார்கழி மாதப் பிறப்பில், முன்னோர் ஆராதனையை மறக்காமல் செய்யுங்கள். முன்னோர்களை நினைத்து உங்களால் முடிந்த அளவுக்கு நான்கோ ஐந்தோ பத்தோ உணவுப்பொட்டலம் வழங்குங்கல். உங்கள் வம்சத்தை தலைமுறை தலைமுறையாக வாழச் செய்யும் முன்னோர்கள், வாழையடி வாழையாக தழைக்கச் செய்வார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT