Published : 22 Oct 2015 11:07 AM
Last Updated : 22 Oct 2015 11:07 AM

சமணத் திருத்தலங்கள் - பகவானின் திருப்பாதங்கள்

ஆன்மிக மகான்கள் பலரை ஈன்றெடுத்த இடம், உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தி நகரமாகும். தேவேந்திரனின் ஆணைப்படி குபேரனால் உருவாக்கப்பட்ட நகரம் இது.

முதல் தீர்த்தங்கரர் ஆதிபகவன், சக்கரவர்த்தி நாபிராஜருக்கும் அரசி மருதேவிக்கும் மகனாக அவதரித்தார். அறவாழி அந்தண தீர்த்தங்கரர்கள் அஜிதநாதர்,அபினந்தர், சுமதி, அனந்தநாதர் ஆகியோர் இவ்விடத்தில் தோன்றினர். இவர்களின் கர்ப்ப, ஜனன, துறவற, கேவலி ஆகிய நான்கு கலியாணச் சிறப்பு நிகழ்வுகளில் மொத்தம் பதினெட்டைக் கண்ட அயோத்தி கலியாண ஷேத்திரமாயிற்று. முக்திக்கு நுழைவாயில் எனப் போற்றப்படுகிறது.

எல்லோருக்கும் விரும்பியதை அளிக்கும் கல்ப விருட்சகங்கள் நிறைந்த போக பூமி அழிந்துவிட மக்கள் இன்னலுற்றனர். ஆகவே அயோத்தியில் ஆதிநாதரான விருஷப தேவர், உலகம் உய்விக்க மக்களுக்கு, விவசாயம் முதலான பலதொழில்களைக் கற்றுக்கொடுத்தார். தனது பிள்ளைகள் பரதருக்கும் பாகுபலிக்கும் அனைத்துக் கலைகளையும் கற்றுக் கொடுத்தார். பிராமி, சுந்தரி எனும் மகள்களுக்குத் தான் கண்ட எண்ணையும் எழுத்தையும் கற்பித்தார். அயோத்திய நாட்டை நல்ல முறையில் ஆள ஐம்பத்திரண்டு மாவட்டங்களாகப் பிரித்தார். அயோதியா, நாகரிகம் மற்றும் அரசியல் விழிப்புணர்வு மையமாக விளங்கியது. சமண அறநெறிகள் செழித்திருந்தன.

பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள்

ஆதிநாதரின் ஜென்ம பூமியில் ஒரு கோயில் எழுப்ப, அப்போதைய மன்னனிடம் அனுமதி பெற்றுக் கட்டப்பட்டதே இங்குள்ள ஆதிநாத் கோயில். இக்கோயிலின் நுழைவுவாயிலும் நன்கு பரந்த வளாகமும் கண்களைக் கவருகின்றன. அங்கு பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண மலர்கள் ஆன்மிக மணம் வீசுகின்றன. இங்கு மலர்மிசை ஏகிய ஆதிபகவனின் திருவடிகள் வடிக்கப்பட்டுள்ளன. முப்பத்தியேழு அடி உயர ஆதிபகவன் நின்று அருளுகிறார். இங்குள்ள சமவசரணக் கோயில் மிக அழகானது. இருபத்து நான்கு மகான்களின் பாதகமலக் கோயில் அனைவரையும் ஈர்க்கிறது. அறநாயகர் ஆதிநாதரின் இரு புறமும் இரு கருவறைகள் உள்ளன. ஒருபுறம் ஆதிவேதத்து நாதர்கள் அஜிதநாதரும் அபினந்தரும் மறுபுறம் சுமதிநாதரும் அனந்தநாதரும் நன்னெறியை நல்குகின்றனர். அருகிலே சந்திரநாதர் அருளொளி வழங்குகிறார்.

அயோத்தியில் கட்ரா எனும் இடத்திலுள்ள கோயில் முன்னூறு ஆண்டுகள் பழமையானது. இதன் கருவறையில் ஆதிபகவன் அமர்ந்துள்ளார்.

அவரின் வலது பக்கத்தில் அஜிதநாதரும் இடதுபக்கத்தில் சுமதிநாதரும் வீற்றுள்ளனர். இதற்கடுத்த மேடையில் அபினந்தரின் திருவுருவம் முக்கியமானது. அடுத்த மேடையில் ஆதிபகவனின் ஒன்பதடி சிலை, மனம் கவரும்படியும் சுமதி தீர்த்தங்கரரின் பாதமலர்களும் உள்ளன. அருகிலேயே பரதர், பாகுபலி திருஉருவங்கள் காணப்படுகின்றன.அடுத்தடுத்து பண்ணவன் பார்சுவநாதரின் பதினைந்து அடி உயர சிலையும் சதுமுகன் சந்திரபிரபுவின் ஒன்பது அடி சிலையும் பரவசமூட்டுகின்றன.

அருகர் அனந்தநாதருக்கு சரயு நதிக்கரையில் எழுப்பப்பட்ட கோயிலில் பகவானின் பொற்பாதங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.அச்சுதன் அபினந்தர் பிறந்த இராம்கோட்டின் ஆலயத்தில் அவரின் திருவடிகள் வடிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற சிறப்புகளால் புராதன நினைவில் வீற்றிருக்கும் அயோத்தி சமணர்களுக்கும் பிரதான தலமாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x