Published : 13 Dec 2020 03:44 PM
Last Updated : 13 Dec 2020 03:44 PM
அமாசோம பிரதட்சணம் எனும் உன்னதமான நாள், நாளைய தினம் 14ம் தேதி திங்கட்கிழமை. இந்தநாளில்,நம்முடைய முன்னோர்களை நினைத்து நான்குபேருக்கேனும் உணவுப்பொட்டலம் வழங்குவது மகா புண்ணியம் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அமாவாசையுமே விசேஷம்தான் என்று போற்றுகிறார்கள். தை மாதத்தில் வருகிற அமாவாசை, ஆடி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை முதலான நாட்கள், மிக மிக உன்னதமான நாட்கள். முன்னோர்கள் வழிபாடு செய்யச் செய்ய, அவர்கள் குளிர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்கள் என்கிறார்கள் ஆச்சாரய்ப் பெருமக்கள்.
அதிலும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசைக்கு முன்னதாக உள்ள பதினைந்து நாட்களும் முன்னோர் வழிபாட்டுக்கு உகந்தநாட்கள்தான். இதை மகாளய பட்ச காலம் என்பார்கள். மகாளய பட்சம் என்பது கூட்டாக உள்ள பதினைந்து நாட்கள் என்பார்கள். முன்னோர்களின் கூட்டு என்று அர்த்தம். நம்முடைய முன்னோர்கள், கூட்டாக நம் வீட்டுக்கு வருவார்கள் என்பதும் நம் வீட்டில் நாம் செய்கிற முன்னோர் வழிபாடுகளைப் பார்க்கிறார்கள் என்றும் சொல்கிறது சாஸ்திரம்.
அதேபோலத்தான், ஒவ்வொரு அமாவாசையுமே முன்னோர்களுக்கான நாள். முன்னோர்கள் நம்மை ஆசீர்வதிக்க நம் இல்லத்துக்கு வருகிறார்கள் என்பது ஐதீகம். அதனால்தான் அமாவாசை நாளில், முன்னோரை வணங்குகிறோம். நம் முந்தைய தலைமுறையினரான மூன்று தலைமுறையினர்களையும் பெயர்களையும் கோத்திரங்களையும் சொல்லி எள்ளும் தண்ணீரும் அர்க்யமாக விட்டு தர்ப்பணம் செய்கிறோம்.
முன்னோர் படங்களுக்கு மாலையிட்டு வணங்குகிறோம். அவர்களுக்குப் பிடித்த உணவைச் சமைத்து படையலிடுகிறோம். காகத்துக்கு உணவிடுகிறோம்.
நாளைய தினம் அமாவாசை. கார்த்திகை மாதத்தின் அமாவாசை. திங்கட்கிழமையன்று வருகிற அமாவாசை. அமாவாசை என்பது சந்திரன் குறித்த நாள். திங்கட்கிழமை என்பது சந்திரனைக் குறிக்கும். திங்கட்கிழமையும் அமாவாசையும் இணைந்து வருகிற நாளை, அமாசோம பிரதட்சணம் என்று சொல்லி சிலாகிக்கிறது சாஸ்திரம்.
நாளைய தினம் 14ம் தேதி, திங்கட்கிழமையும் அமாவாசையும் இணைந்தநாள். இந்தநாளில், முன்னோர் வழிபாடு செய்யுங்கள். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யுங்கள். முக்கியமாக, அமாசோம பிரதட்சண நன்னாளில், முன்னோரை நினைத்து நான்குபேருக்காவது உணவுப் பொட்டலம் வழங்குங்கள். தயிர்சாதமோ புளியோதரையோ எலுமிச்சை சாதமோ என்ன முடிகிறதோ வழங்குங்கள்.
இன்னும் முடிந்தால், இந்த குளிர்காலத்தில் ஒருவருக்கேனும் போர்வையோ சால்வையோ வழங்குங்கள். முன்னோர் ஆசியைப் பெறுங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT