Published : 08 Oct 2015 11:50 AM
Last Updated : 08 Oct 2015 11:50 AM

திருத்தலம் அறிமுகம்: முருகனுக்குப் பிரணவம், புலிக்கு முக்தி

தந்தைக்கு முருகப் பெருமான் உபதேசம் செய்த இடம் சுவாமி மலை. அந்த உபதேசத்தை அவர் கற்ற இடம்தான் ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்.

கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்குடிக்கு அருகிலுள்ள ஓமாம்புலியூரின் பழைய பெயர் பிரணவபுரம். அக்காலத்தில் இது இலந்தை வனமாக இருந்தது. அப்போது ஒரு சமயம் வனத்தில் வேடன் ஒருவனைப் புலி துரத்தியது. புலிக்குப் பயந்து ஓடிய வேடன், அங்கிருந்த வில்வமரம் ஒன்றில் ஏறி நின்றுகொண் டான். புலியும் அவனை விடுவதாய் இல்லை. மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது. பொழுதும் சாய்ந்து இருட்டத் தொடங்கிவிட்டது.

தூங்கிவிடாமல் இருப்பதற்காக, மரத்திலிருந்த வில்வ இலைகளைப் பறித்துக் கீழே போட்டுக் கொண்டே இருந்தான் வேடன். அவன் போட்ட வில்வ பத்ரங்கள் (இலைகள்) அனைத்தும் மரத்தின் அடியில் இருந்த சிவலிங்கத்திற்கு அர்ச்சனையாக ஆனது. அன்றைய தினம் மகா சிவராத்திரி என்பதால், இரவு முழுக்கக் கண் விழித்துச் செய்த வில்வ அர்ச்சனைக்காக வேட னுக்கும் அதற்குக் காரணமாக இருந்த புலிக்கும் அந்த இடத்திலேயே முக்தி கொடுத்தார் சிவபெருமான் என்று புராணக் கதை உள்ளது.

தட்சிணாமூர்த்திக்கு தனிக்கருவறை

சிவாலயங்களில் பொதுவாகப் பிராகாரத்தில் தான் தட்சிணாமூர்த்தி இருப்பார். ஆனால், இத்திருக்கோயிலில் சிவனுக்கும் அம்பாளுக்கும் இடையில் அமைந்துள்ள தனிக் கரு வறையில் குரு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார் தட்சிணாமூர்த்தி.

ஒரு சமயம், இங்கே குடிகொண்டிருக்கும் புஷ்பலதாம்பிகைக்கு சிவபெருமான் குருவாக இருந்து ஓம் என்னும் பிரணவத்தை உபதேசம் செய்கிறார். அப்போது, முருகப் பெருமான் அங்கு வந்தார். அவரை இடைமறிக்கும் நந்திதேவர், ‘அம்பாளுக்கு உபதேசம் நடந்துகொண்டிருக்கிறது. உள்ளே போக வேண்டாம்’ என்று தடுக்கிறார். அதை மீறி, வண்டாக உருமாறும் முருகப் பெருமான் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட நீர் வெளியேறும் கோமுகம் வழியாக உள்ளே சென்று, அம்பாளின் தலையில் இருந்த பூவில் அமர்ந்து கொண்டார். சிவபெருமான் அம்பாளுக்கு செய்த உபதேசத்தை அவரும் படித்தார்.

பிற்பாடு, சுவாமிமலையில் தனக்கே உபதேசம் செய்த முருகப் பெருமானிடம், ‘இதை நீ எங்கு படித்தாய்?’ என்று சிவபெருமான் கேட்டபோது, ’பிரணவபுரத்தில் அம்மைக்கு நீங்கள் உபதேசம் செய்தபோது உங்களுக்கே தெரியாமல் படித்தேன்’ என்றார் முருகப்பெருமான்.

அம்பாளுக்கு குருவாக இருந்து ஓம் என்னும் பிரணவத்தைப் போதித்ததால் ‘ஓம்’. புலிக்கு முக்தி கொடுத்ததால் ‘புலியூர்’. இந்த இரண்டும் சேர்ந்து ஓமாம்புலியூர் ஆனதாகத் தல வரலாறு சொல்கிறது.

காசியின் மீசம்

அப்பர், திருஞான சம்பந்தரால் பாடல்பெற்ற பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் சுயம்புவாக தோன்றியவர். பெரும்பாலும் சிவலிங்கத்தின் ஆவுடையானது பத்ம பீடமாகத்தான் (வட்ட வடிவில்) இருக்கும். ஆனால், இங்கே சதுர வடிவில் உள்ளது. காசியிலும் சதுர வடிவம் தான் என்பதால், இத்திருத்தலத்தை ‘காசியின் மீசம்’ என்கிறார்கள்.

பக்தர்களின் தடைகளை நீக்கி சுகவாழ்வு தரும் இத்திருத்தலம் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பரிகாரத் தலமாகவும், குருதோஷங்கள் போக்கும் தலமாகவும் விளங்குகிறது.

படங்கள்: கே.வி.இளங்கீரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x