Last Updated : 29 Oct, 2015 08:41 AM

 

Published : 29 Oct 2015 08:41 AM
Last Updated : 29 Oct 2015 08:41 AM

வேலவனின் திருவிளையாடல்

இயற்கையிலேயே பெண்ணின் கூந்தலுக்கு மணம் உள்ளதா என்னும் பாண்டியனின் சந்தேகத்தைப் போக்கும் பாடலை ஏழைப் புலவனான தருமிக்கு அளித்து சிவபெருமான் திருவிளையாடல் நடத்தியதை அறிவோம். இதுபோல் வேலவனும் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தியிருக்கிறான்.



தாமிரபரணி நதி தீரத்திலுள்ள குருகூரில் பிரதிவாதி பயங்கரன் என்னும் புலவர் இருந்தார். அவர் போகுமிடம் எல்லாம் புலவர்களை வாதில் வெல்வார். அதோடு அவர்களிடமிருந்து அடிமை ஓலையையும் வாங்கி வைத்துக் கொள்வார். அப்படியொரு சமயம், திருச்செங்கோட்டில் உள்ள குணசீலன் எனும் புலவருக்கு, அவரோடு தான் வாதாட வருவது பற்றிய விவரத்தை அனுப்பிவைத்தார்.

எந்தப் போட்டியிலும் ஈடுபட விரும்பாத குணசீலன், இந்த இக்கட்டிலிருந்து விடுபட, வேலவனை வேண்டினார். இந்த இக்கட்டிலிருந்து உன்னைக் காப்பேன் என்று குணசீலனுக்கு வாக்களித்தான் வேலவன்.

மீதி வெண்பா எழுதிய வேலவன்

தொலைதூரத்திலிருந்து செங்கோட்டைப் பார்த்த பிரதிவாதி பயங்கரன், “அது என்ன மலை என்றான். உடன் வந்தவர்கள் “அதுதான் திருச்செங்கோடு. நாகாசலம், நாககிரி என்றும் அழைப்பர்” என்றனர்.

உடனே பிரதிவாதி, “சமர முகத் திருச்செங்கோடு சர்ப்ப சயிலமென அமரில் படம் விரித்தாடாததென்னை…” - என்று பாடத் தொடங்கிவிட்டு, மேலும் தொடர முடியாமல் தவித்தான். புதருக்குப் பின்னாலிலிருந்து ஒரு குரல் கேட்டது.

“அஃதாய்ந்திலையோ நமரன், குறவள்ளிபங்கன், எழுகரை நாட்டுயர்ந்த குமரன், திருமருகன் மயில் வாகனம் கொத்துமென்றே..”

- என்று வெண்பாவை நிறைவு செய்தான் புதருக்குப் பின்னால் மாடு மேய்க்கும் சிறுவனாக தோன்றிய வேலவன். அவனிடம் `நீ யார்?’ என்று கேட்டார் பிரதிவாதி பயங்கரன்.

“திருச்செங்கோட்டில் வாழும் தலைசிறந்த புலவர் குணசீலனின் கடை மாணாக்கன் நான்” என்றான் அச்சிறுவன். “படிப்பு வராததால் என்னை மாடு மேய்க்க அனுப்பிவிட்டார். என்னை மாணாக்கனாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார் புலவர்” என்றான்.

அவன் கூறியதைக் கேட்ட பிரதிவாதி, “உன் குருவுக்கு என் வந்தனத்தைத் தெரிவி…” என்று சொல்லிவிட்டு, வந்தவழியே திரும்பிச் சென்றுவிட்டார்.

முத்துசாமிக்கோனார் எழுதிய திருச்செங்கோட்டு மான்மியத்தில் மிக விரிவாக இத்திருவிளையாடல் பற்றி தரப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x