Last Updated : 11 Dec, 2020 08:21 PM

 

Published : 11 Dec 2020 08:21 PM
Last Updated : 11 Dec 2020 08:21 PM

பிரதோஷ நாளில்... நரசிம்ம தரிசனம்! 

பிரதோஷம் என்பது நரசிம்மரை வழிபடுவதற்கான அற்புதமான நாள். எனவே பிரதோஷ நாளில், நரசிங்க பெருமாளை வழிபடுவது மிகுந்த பலன்களைக் கொடுக்கவல்லது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். நாளைய தினம் 12ம் தேதி சனிக்கிழமை, பிரதோஷம். சனிப் பிரதோஷம்.

திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை வணங்குகிறார்கள். நம் வாழ்வின் உக்கிரங்களையும் சுற்றியுள்ள தீய சக்திகளையும் அழித்துக் காத்தருள்வார் என்கிறார்கள் பக்தர்கள்.

திருத்தக்கதேவர் தனது சீவக சிந்தாமணியில், ``இரணியன்பட்ட தெம்மிறை எய்தினான்'' என்று நரசிம்ம அவதாரம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

இரணியனை அழித்து கடும் உக்கிரத்துடன் இருந்த நரசிம்மரை, சிவபெருமான், சரபப்பறவையாக வந்து தணித்தார். அதுவே சரபேஸ்வரர் என்று வணங்கி வருகிறோம். சரபேஸ்வரர் குறித்த விஷயங்களும் நரசிம்மர் குறித்த விஷயங்களும் அபிதான சிந்தாமணியில் விவரிக்கப்பட்டுள்ளது.

பல ஊர்களில், நரசிம்மருக்கு ஆலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. நாமக்கல், மதுரை ஒத்தக்கடை நரசிங்கம், சிங்க பெருமாள் கோவில், மட்டப்பள்ளி, யாதகிரிகட்டா, மங்கள கிரி ஆகிய தலங்களில் நரசிம்மர் சந்நிதிகள் குகைக் கோயில்களாகவும் குடைவரைக் கோயில்களாகவும் அமைக்கப்பட்டுள்ளன.

சோளிங்கர் திருத்தலத்தை சோழசிங்கபுரம் என்றும் விவரிக்கிறது வரலாறு. சோளிங்கர் திருத்தலம், மிகப்பிரமாண்டமான மலையின் மீது கோயில் கொண்டிருக்கிறார்.
அற்புதமான திருத்தலங்கள் நரசிம்ம பெருமாளுக்கு இருக்கின்றன.

நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்ததாக சொல்வது ஒரு பிரதோஷ காலத்தில்தான் என்கிறது நரசிம்ம புராணம். எனவே சிவாலயத்தில் பிரதோஷம் என்பது வெகுவாக, வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது போல்,நரசிம்மரையும் பிரதோஷ காலத்தில் தரிசிப்பது ரொம்பவே விசேஷமானது என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

நாளைய தினம் பிரதோஷம். சனிப் பிரதோஷம். நாளைய தினத்தில், அருகிலுள்ள நரசிம்மர் குடிகொண்டிருக்கும் ஆலயத்துக்குச் சென்று நரசிங்க பெருமாளை வழிபடுங்கள். குறிப்பாக, பிரதோஷ காலமான மாலை 4.30 முதல் 6 மணிக்குள் நரசிங்க பெருமாளை தரிசியுங்கள். மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.

முடிந்தால், பானக நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்குங்கள். நம் பாவங்களையெல்லாம் போக்கி அருளுவார் நரசிங்க பெருமாள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x