Published : 10 Dec 2020 10:09 PM
Last Updated : 10 Dec 2020 10:09 PM
நரசிம்மம் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம். மிகப்பெரிய ஜ்வாலையானவன் என்று நரசிம்மனைச் சொல்கிறது புராணம். சக்தியும் உக்கிரமும் வாய்ந்தவர் நரசிங்க பெருமாள்.
பக்தன் பிரகலாதனுக்காக மகாவிஷ்ணு எடுத்த அவதாரமே நரசிம்ம அவதாரம். நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். எதிர்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகும்.
சென்னை திருவல்லிக்கேணி கோயிலில் நரசிம்மர் சந்நிதி அமைந்துள்ளது. இவர் விசேஷமானவர். இவருக்கு பானக நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்துகொண்டால், விரைவில் நம் வேண்டுதல்களையெல்லாம் நிறைவேற்றித் தந்தருள்வார்.
உக்கிர மூர்த்தியாக உக்கிர சொரூபமாகத் திகழ்கிறார் ஸ்ரீநரசிங்கப் பெருமாள். இவரை இஷ்ட தெய்வமாக நினைத்து தொடர்ந்து வாரந்தோறும் வழிபட்டு வந்தால், நினைத்த காரியங்களையெல்லாம் தங்குதடையின்றி நடத்திக் கொடுத்து அருளுவார் நரசிம்மர். இவரை சனிக்கிழமைகளிலும் புதன் கிழமைகளிலும் பானக நைவேத்தியம் செய்து வணங்கி வந்தால், எட்டுத் திசைகளிலும் நம்மைச் சுற்றியுள்ள தீயசக்திகள் அகலும் என்பது ஐதீகம்.
நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், நரம் கலந்த சிங்கம் எனப் பல திருநாமங்கள் உண்டு.
தாம்பரம் - செங்கல்பட்டு சாலையில் உள்ளது சிங்கபெருமாள் கோவில் எனும் ஊர். இந்த ஊருக்கு பெயர் அமைவதற்கு, இங்கே உள்ள நரசிங்க பெருமாளே காரணம். சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த இவரை தொடர்ந்து ஒன்பது சனிக்கிழமைகளிலும் ஒன்பது பிரதோஷ நாட்களிலும் வணங்கி வந்தால், இல்லத்தில் சுபிட்சம் நிலவும். தீராத நோய்கள் அனைத்தும் தீரும். எண்ணிய நற்காரியங்கள் அனைத்தும் இனிதே நடந்தேறும் என்கிறார்கள் பக்தர்கள்.
மதுரையில் இருந்து மேலூர் செல்லும் வழியில், மாட்டுத்தாவணியில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலேயே உள்ளது ஒத்தக்கடை. இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் உள்ளது ஆனைமலை. இங்கே குடைவரைக் கோயிலில், அற்புதமாக யோக நிலையில் யோக நரசிம்மராக காட்சி தருகிறார் நரசிங்கப் பெருமாள். நரசிங்கம் என்றும் இந்தப் பகுதியைச் சொல்லுவார்கள்.
மதுரை ஒத்தக்கடை யோக நரசிங்க பெருமாளை தொடர்ந்து வழிபட்டு வருகிறார்கள் மதுரை மற்றும் சுற்றுவட்டார ஊர்களைச் சேர்ந்த பக்தர்கள்.
சனிக்கிழமைகளில் நரசிம்மரை வணங்குங்கள். குறிப்பாக, லக்ஷ்மி நரசிம்மரை வணங்குவது சகல ஐஸ்வரியங்களையும் பெற்றுத் தரும். மனோபலத்தையும் தந்தருள்வார் நரசிங்கப் பெருமாள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT