Published : 08 Dec 2020 06:39 PM
Last Updated : 08 Dec 2020 06:39 PM
காவிரிப்பூம்பட்டினத்தில் வசித்து வந்தவர் சிவநேசர். பேருக்கேற்றது போலவே சிவனார் மீது அளப்பரிய பக்தி கொண்டிருந்தார். இவருடைய மனைவி ஞானகலா அம்மையார். ஆணொன்றும் பெண்ணொன்றுமாக குழந்தை வேண்டும் என்பதுதான் இவர்களின் விருப்பம். பெண் குழந்தை பிறந்தது. அடுத்து ஆண் குழந்தைக்காக இறைவனை வேண்டித் தொழுதார்கள். அவர்களின் சித்தம் சிவனின் சித்தமாகவும் இருக்கவே... ஆண் குழந்தை பிறந்தது. மகிழ்ந்து நெகிழ்ந்த பெற்றோர், குழந்தைக்கு திருவெண்காடர் எனப் பெயரிட்டு வளர்த்தனர்.
திருவெண்காடனுக்கு ஐந்து வயதிருக்கும் போது தந்தையார் காலமானார். தாயாரின் அரவணைப்பிலும் அன்பிலுமாக வளர்ந்தார். நல்ல குணமும் பக்தியும் கொண்டு வளர்ந்தார். நாளாக ஆக, சிவபூஜை செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார், திருவெண்காடர்.
ஒருநாள்... ‘நாளைய தினம் திங்கட்கிழமை. சோமவாரம். திருவெண்காட்டுக்கு வா. அங்கே பெரியவர் ஒருவர் உனக்கு சிவலிங்கம் தருவார். அதைக் கொண்டு அனுதினமும் பூஜித்து வா’ என அசரீரி கேட்டது.
விடிந்ததும் அம்மாவிடம் விஷயத்தைச் சொன்னார். அம்மாவை அழைத்துக் கொண்டு திருவெண்காடு தலத்துக்குச் சென்றார். வயது முதிர்ந்த முனிவர் ஒருவர், அவரை நோக்கி வந்து, ‘நான் திருவிடைமருதூரில் இருந்து வருகிறேன். என்னுடைய ஊர் அதுதான். இதனை உன்னிடம் அளித்து, உனக்கு சிவ தீட்சை அளித்துவிட்டு வரும்படி எனக்கு உத்தரவு வந்தது’ என்று சொன்னார்.
அந்தப் பெட்டகத்தை திறந்து பார்த்தார். உள்ளே சிவலிங்கம். சின்னஞ்சிறிய சிவலிங்கம். ‘மிக்க நன்றி’ என்றார் திருவெண்காடர். ‘இது என்னுடையதில்லை. முற்பிறவியில் நீங்கள் வணங்கி வழிபட்ட சிவலிங்கம்’ என்று சொல்ல வியந்து மலைத்து திகைத்துப் போனார் திருவெண்காடர்.
பின்னர் அவருக்கு சிவ தீட்சை அளிக்கப்பட்டது.
அதையடுத்து அனுதினமும் காலையும் மாலையும் சிரத்தையுடன் சிவபூஜை செய்யத் தொடங்கினார். சில சமயம் நேரம் தெரியாமல் பூஜையில் மூழ்கிப்போனார். உரிய வயது வந்ததும் திருமணம் நடந்தேறியது. சிவகலை எனும் பெண்ணைத் திருமணம் புரிந்தார். இந்தத் தம்பதிக்கு நெடுங்காலமாக குழந்தை பாக்கியமே இல்லாமல் இருந்தது. அப்படிப்பட்ட நிலையில், திருவிடைமருதூர் மருதவாணர் பெருமானே இவருக்கு மகனாக அவதரித்தார் என்றும் 16 ஆண்டுகள் இப்பூவுலகில் வாழ்ந்து சிவ ஐக்கியமானார் என்றும் சொல்கிறது புராணம்.
அந்த வளர்ப்பு மகன், திரவியங்கள் தேடிக் கொண்டு வந்தார். தந்தையார் ஆவலுடன் மகனைத் தேடினார். மருதவாணரைக் காணோம். ‘இந்தப் பெட்டியை தங்களிடம் கொடுக்கச் சொன்னார்’ என்று கொடுக்கப்பட்டது. ‘காதற்ற ஊசியும் ஓலை ஒன்றும்’ இருந்தது. அந்த ஓலையில், காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே’ என எழுதப்பட்டிருந்தது.
அவர்... பட்டினத்தார் என்று புகழப்பட்டார். சித்தர் பெருமான் என்று இன்றளவும் கொண்டாடப்பட்டு, பூஜிக்கப்பட்டு வணங்கப்பட்டும் வருகிறார். பட்டினத்தாருக்கு, சென்னை திருவொற்றியூரில் திருச்சமாதி அமைந்திருக்கிறது. நல்ல அதிர்வுகள் கொண்ட இந்த அதிஷ்டானத்துக்கு வந்து நின்று பிரார்த்தனை செய்தாலே முக்தியும் அருளும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
பட்டினத்தார் உருகி உருகி வழிபட்ட திருத்தலம் திருவெண்காடு என்று போற்றப்படுகிறது. சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவிலுக்கு அருகில் உள்ளது திருவெண்காடு. காவிரிப்பூம்பட்டினம் எனப்படும் பூம்புகாருக்கு அருகில் அமைந்துள்ளது திருவெண்காடு.
இந்தத் தலத்தின் நாயகன் சிவனாரின் திருநாமம் ஸ்வேதாரண்யேஸ்வரர். இந்தத் திருத்தலம் புதன் பரிகாரத் தலம் என்று போற்றப்படுகிறது. நவக்கிரகங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலம் இது.
இங்கே, புதன் பகவானுக்கு தனிச்சந்நிதி அமைந்துள்ளது. புதன் பகவானையும் ஸ்வேதாரண்யேஸ்வரரையும் வணங்கி வழிபட்டால், புத்தியில் தெளிவும் காரியத்தில் வேகமும் கிடைத்து எதிலும் வெற்றி பெறலாம். குடும்பத்திலும் வியாபாரத்திலும் நிம்மதி கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் பக்தர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT