Published : 08 Dec 2020 02:55 PM
Last Updated : 08 Dec 2020 02:55 PM
கார்த்திகை செவ்வாய்க்கிழமையில், மாலையில் தீபமேற்றி வழிபடுங்கள். சக்தியையும் சக்தியின் மைந்தனான முருகப்பெருமானையும் மனதார நினைத்து, வீட்டு வாசலில் விளக்கேற்றுங்கள். பூஜையறையில் விளக்கேற்றி வழிபடுங்கள். அருளும் பொருளும் கிடைக்கப் பெறுவீர்கள்.
கார்த்திகை மாதம் என்பது அற்புதமான மாதம். வழிபாட்டுக்கு உரிய மாதம். தீபத்துக்கு உரிய மாதம். அதனால்தான் திருக்கார்த்திகை தீபம் என்று கொண்டாடப்படுகிறது. சிவ வழிபாடும் அம்பாள் வழிபாடும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அதேபோல், முருக வழிபாடு வலிமை தரும் வழிபாடு என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். ஐப்பசியும் கார்த்திகையும் பண்டிகைக்கும் விழாக்களுக்கும் உகந்த மாதங்கள் என்கிறார்கள்.
கார்த்திகை மாதம் முழுவதுமே வழிபாடுகளுக்கும் மந்திர ஜபங்களுக்கும் பூஜைகளும் உகந்த மாதமாகப் போற்றப்படுகிறது.
கார்த்திகை மாதத்தில் பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனாரின் அடி முடியைக் காண முடியவில்லை எனும் புராணம் நிகழ்ந்த தருணம் இந்த கார்த்திகை மாதத்தில்தான் என்கின்றன ஞானநூல்கள். அதேபோல், சக்தியில்லையேல் சிவமில்லை என்பதை உணர்த்தும் விதமாக, உமையவளுக்கு தன் உடலின் இடபாகத்தைத் தந்தருளி, அர்த்த நாரீஸ்வரர் திருக்கோலம் காட்டியதும் இந்த கார்த்திகை மாதத்தில்தான் என்கிறது புராணம்.
கார்த்திகை மாதம் முழுவதும் வீட்டு வாசலிலும் பூஜையறையிலும் மாலை வேளையில், விளக்கேற்றி வைத்து அம்பாளையும் சிவனாரையும் மகாவிஷ்ணுவையும் வழிபட்டு வந்தால் சகல செளபாக்கியங்களையும் பெறலாம்.
முக்கியமாக, கார்த்திகை மாதத்தின் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் மாலையில் வீட்டு வாசலில் விளக்கேற்றுங்கள். இரண்டு பக்கமும் விளக்கேற்றி, பூக்களை வைத்து பூஜையறையில் விளக்கேற்றுங்கள். அபிராமி அந்தாதி, கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வழிபடுங்கள். ஒலிக்கவிட்டுக் கேளுங்கள்.
அதேபோல, முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வரளிப் பூக்களைச் சூட்டுங்கள். கந்தசஷ்டிக் கவசம் பாராயணம் செய்து மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.
மாலையில் விளக்கேற்றி, வழிபட்டு, சர்க்கரைப் பொங்கல், பாயசம் என ஏதேனும் ஒரு இனிப்பை நைவேத்தியமாகப் படைத்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். அருளும் பொருளும் அள்ளித் தருவார் கந்தக் கடவுள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT