Published : 22 Oct 2015 10:59 AM
Last Updated : 22 Oct 2015 10:59 AM
ராமேசுவரம் சங்கர மண்டபத்தில் மத்யமான ஸ்தம்பத்தின் உச்சியில் நடுநாயகமாக சங்கர பகவத்பாதாள் எழுந்தருளியிருக்கிறார். பின்னால் இருக்கிற நூல் நிலையம் வெறும் ஹாலாக இல்லாமல் சரஸ்வதி தேவியைப் பிரதிஷ்டை செய்ததால் சரஸ்வதி மகாலாக, மகா ஆலயமாக இருக்கிறது.
ஆசார்யாளின் முதுகுக்குப் பின்னால் சரஸ்வதி இருக்கலாமா என்றால் இப்படி இருப்பதிலேயே ஒரு ரசம் இருக்கிறது. பிரம்மாவின் அவதாரமான மண்டனமிச்ரரை ஆசார்யாள் வாதத்தில் ஜெயித்த பின், அவருடைய பத்னியும் சரஸ்வதி அவதாரமுமான சரசவாணியையும் ஜெயித்தார். மண்டனமிச்ரர் உடனே சந்நியாசம் வாங்கிக்கொண்டு ஆசார்யாளின் பிரதான சிஷ்யர்களில் ஒருவரான சுரேச்வராசாரியாரானார். சரசவாணியோ வாதத்தில் தோற்றுப்போனவுடன் சரஸ்வதி ரூபத்தை அடைந்து, பிரம்ம லோகத்துக்கே கிளம்பிவிட்டாள்.
ஆனாலும் ஆசார்யாள் பூலோகத்தில் ஒரு நல்ல இடத்தில் அவளை இருக்கும்படியாகப் பண்ணி அவளுடைய சாந்நித்தியத்தால் ஜனங்களுக்கு வித்யா பிரகாசத்தை உண்டாக்க வேண்டுமென்று நினைத்தார். அதனால் ஆகாசத்தில் கிளம்பியவளை வனதுர்க்கா மந்திரத்தில் கட்டி மேலே போக முடியாதபடி பண்ணினார்.
“அம்மா! நான் தேச சஞ்சாரம் புறப்படுகிறேன். நீயும் என்னோடு வர வேண்டும். எது உத்தமமான இடம் என்று தோன்றுகிறதோ அங்கே உன்னை சாரதா பீடத்தில் ஸ்தாபனம் பண்ண ஆசைப்படுகிறேன். அங்கே இருந்துகொண்டு நீ லோகத்துக்கெல்லாம் அநுக்கிரஹம் செய்துகொண்டிருக்க வேண்டும்” என்று ஆசார்யாள் சரஸ்வதியைப் பிராத்தித்துக்கொண்டார்.
“அப்படியே செய்கிறேன். ஆனால் ஒன்று. நான் உன் பின்னாலேயேதான் வருவேன். நீ என்னைத் திரும்பிப் பார்க்கக் கூடாது. பார்த்தால் அந்த இடத்திலேயே ஸ்திரமாகக் குடிகொண்டுவிடுவேன்” என்று சரஸ்வதி இவருக்குச் சம்மதமாகச் சொல்லும்போதே ஒரு ‘கண்டிஷ'னும் போட்டுவிட்டாள். அதற்கு ஆசார்யாளும் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று.
ஆசார்யாள் புறப்பட்டார். பின்னால் சரஸ்வதி தேவியும் தொடர்ந்து சென்றாள். அவளுடைய பாதச் சிலம்பு “ஜல், ஜல்” என்று சப்தமிடுமாதலால் அவள் பின்தொடர்கிறாள் என்று ஆசார்யாளுக்குத் தெரியும். அவர் திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியமேயில்லாதிருந்தது.
ஆசார்யாள் புறப்பட்டார். பின்னால் சரஸ்வதி தேவியும் தொடர்ந்து சென்றாள். அவளுடைய பாதச் சிலம்பு “ஜல், ஜல்” என்று சப்தமிடுமாதலால் அவள் பின்தொடர்கிறாள் என்று ஆசார்யாளுக்குத் தெரியும். அவர் திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியமேயில்லாதிருந்தது.
இப்படியே ஆசார்யாள் சஞ்சாரம் பண்ணிக்கொண்டு வரும்போது துங்கபத்ரைக் கரையில் சிருங்ககிரி (சிருங்கேரி) என்ற இடத்தில் பூர்ண கர்ப்பிணியாக இருந்த ஒரு தவளைக்கு மேலே வெயில் படாமல் ஒரு பாம்பு குடை பிடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார். பாம்புக்குத் தவளை நமக்குச் சர்க்கரை பொங்கல் மாதிரி. பார்த்த மாத்திரத்தில் பாய்ந்து பிடித்துத் தின்றுவிடும். இங்கேயோ ஒரு பாம்பானது தவளைக்குக் குடை பிடித்தது. பகையே இல்லாமல் இத்தனை அன்பு நிறைந்திருக்கிற உத்தமமான இடத்திலேயே சரஸ்வதியைப் பிரதிஷ்டை பண்ணிவிடலாமா என்று நினைத்தபடி ஆசார்யாள் நடந்துகொண்டிருந்தார்.
அப்போது சட்டென்று “ஜல்,ஜல்” சப்தமும் நின்றுவிட்டது. ‘சரஸ்வதி ஏன் வரவில்லை? என்ன ஆனாள்?' என்று மநுஷ்ய ரீதியில் நினைத்து ஆசார்யாள் திரும்பிப் பார்த்தார். அந்த இடத்திலேயே சரஸ்வதி நிலைகுத்திட்ட மாதிரிப் பிரதிஷ்டையாகிவிட்டாள்.
ஓசை கேட்காததற்குக் காரணம் என்னவென்றால், அது துங்கபத்ரையின் மணல் கரை. மணலிலே பாதம் புதைந்த நிலையில் அவள் நடந்து போக வேண்டியிருந்ததால் சிலம்போசை கேட்கவில்லை.
“இதுவும் நல்லதுதான். நாம் நினைத்ததும் சரஸ்வதியின் நிபந்தனையும் ஒன்றாக ஆகிவிட்டன” என்று ஆசார்யாள் சந்தோஷப்பட்டுக்கொண்டு அங்கே சாரதா பீடத்தை அமைத்தார்.
“உன் முதுகுக்குப் பின்னால் உன்னைத் தொடர்ந்து வருவேன்” என்று சரஸ்வதி சொன்னதற்குப் பொருத்தமாகவேதான் இங்கே ராமேசுவர சங்கர மண்டபத்தில் ஆசார்யாளுக்குப் பின்னால் சரஸ்வதியின் சிலை பிரதிஷ்டையாகி இருக்கிறது.
சிறந்த சொத்து
சிஷ்யனுக்குப் புரிகிற மட்டும் திரும்பத் திரும்ப உபதேசிக்க வேண்டியது ஆசாரிய தர்மம் என்று ஆசார்யாள் அபிப்ராயப்பட்டிருப்பதைக் கீதா பாஷ்ய முடிவிலேயும் தெரிவித்திருக்கிறார். கீதை உபதேசம் முடிந்த பிற்பாடு பகவான் அர்ஜுனனிடம், 'நான் சொன்னதையெல்லாம் மனசு குவிந்து சரியாகக் கேட்டுக்கொண்டாயா?' என்று விசாரிக்கிறார். ஏன் அப்படிக் கேட்டாரென்று ஆசார்யாள் பாஷ்யம் பண்ணுமிடத்தில், ‘தாம் சொன்னதைச் சிஷ்யன் பிடித்துக்கொண்டானா, இல்லையா என்று தெரிந்துகொள்வதற்காகவே பகவான் இப்படிக் கேட்பது. 'அப்படி இவன் பிடித்துக்கொள்ளவில்லையானால் நாம் மறுபடி வேறேதாவது உபாயம் பண்ணியாவது பிடித்துக்கொள்ளப் பண்ணணும்' என்ற அபிப்ராயத்தில்தான் கேட்கிறார்' என்று சொல்லி, அதற்கு மேலும் ‘சிஷ்யன் உபதேச லக்ஷ்யத்தைப் புரிந்துகொண்ட க்ருதார்த்தனாக ஆவதற்குப் பல விதங்களில் முயற்சி பண்ண வேண்டியது ஆசார்ய தர்மம்' என்று சொல்லியிருக்கிறார்.
தாயார் எப்படிச் சாப்பாடு இறங்காத குழந்தைக்கு விளையாட்டு கிளையாட்டு காட்டி எப்படியாவது உள்ளே ஆகாரத்தைப் போட்டுவிடுகிறாளோ அப்படி உபதேசம் இறங்காத சிஷ்யனுக்கும் குருவானவர் எப்பாடு பட்டாவது உள்ளே இறக்குகிறாரென்றால் அவருடைய அபாரக் கருணை தெரிகிறது. அம்மா போடும் சாப்பாடு அந்த வேளைக்குத்தான் பிரயோஜனமாவது. அடுத்த வேளை மறுபடி பசி வந்துவிடுகிறது பலம் குறைகிறது. குரு செய்யும் உபதேசமோ அமிருதமாக, சாச்வதமான ஆத்ம புஷ்டியைக் கொடுத்துவிடுகிறது.
அம்மாவின் சாப்பாட்டைவிட சாச்வதமானது, அப்பாவின் சொத்தைவிட சாச்வதமானது, குரு கொடுக்கும் உபதேசம்தான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT