Published : 04 Dec 2020 07:47 PM
Last Updated : 04 Dec 2020 07:47 PM
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் டிச.27-ம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.
திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சன்னதியுடன் கூடிய தர்பாரண்யேஸ்வரர் கோயிலில், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி வரும் டிச.27-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. அதிகாலை 5.22 மணிக்கு சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பிரவேசிக்கிறார்.
சனிப்பெயர்ச்சி விழாவுக்கான பந்தல் கால் முகூர்த்தம் கடந்த நவ.27-ம் தேதி நடைபெற்றது. சனிப்பெயர்ச்சி விழாவின்போது நாடு முழுவதிலுமிருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருநள்ளாற்றுக்கு வந்து செல்வது வழக்கம்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்ப விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என ஏற்கெனவே சொல்லப்பட்டிருந்தது. இந்நிலையில், சனிப்பெயர்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகள் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தான நிர்வாகத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ளன. கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கோயிலுக்குள் செல்லும் வகையில், வெயில், மழையிலிருந்து பக்தர்களைப் பாதுகாக்கும் வகையில் பந்தல் அமைக்கும் பணி தொடங்கி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாவட்ட துணை ஆட்சியரும், நிர்வாக அதிகாரியுமான (கோயில்கள்) எம்.ஆதர்ஷ் 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறுகையில், "தற்போது பக்தர்கள் வரிசையில் நிற்பதற்கான பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சனிப்பெயர்ச்சி விழாவுக்காக வழக்கமாக மேற்கொள்ளப்படும் அனைத்து ஏற்பாடுகளும் செய்து, தயார் நிலையில் இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும், கரோனா பரவல் சூழலில் பக்தர்களை எந்த வகையில் அனுமதிப்பது, என்ன மாதிரியான கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, அதற்கேற்ற வகையில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து புதுச்சேரி அரசும், காரைக்கால் மாவட்ட நிர்வாகமும் உரிய முடிவுகளை எடுத்து இன்னும் சில நாட்களில் அறிவிக்கும். அதன் பின்னர் அதற்கேற்ற வகையில் இறுதிக்கட்ட ஏற்பாடுகள் செய்யப்படும்" என்றார்.
இதனிடையே சனிப்பெயர்ச்சி விழாவுக்கான அழைப்பிதழை சுவாமிக்குப் படைக்கும் நிகழ்வு இன்று (டிச.4) தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT