Published : 04 Dec 2020 12:40 PM
Last Updated : 04 Dec 2020 12:40 PM
கார்த்திகை மாதத்து வெள்ளிக்கிழமையில், மாலையில் அம்பாள் துதி சொல்லி வணங்குவதும் லலிதா சகஸ்ரநாமம், கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும் இல்லத்தின் தரித்திர நிலையை மாற்றும். சுபிட்சத்தை உண்டு பண்ணும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
பொதுவாகவே, வெள்ளிக்கிழமை என்பது அம்பாள் வழிபாட்டுக்கு உகந்தநாள். தேவி வழிபாட்டு உரிய நாள். உக்கிர தெய்வமோ, சாந்த சொரூபினியோ அம்பாள் வழிபாட்டை வெள்ளிக்கிழமைகளில் செய்யச் செய்ய, இல்லத்தில் ஒற்றுமை மேலோங்கும். துஷ்ட சக்திகளை விரட்டியடிப்பாள் மகாசக்தி என்பது ஐதீகம்.
அதனால்தான், வெள்ளிக்கிழமைகளில், அம்பாள் வழிபாடும் அம்பாளுக்கான ஆராதனைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதேபோல, உக்கிர தெய்வமான துர்காதேவிக்கு, ராகுகாலத்தில் விளக்கேற்றுவதும் பலம் வாய்ந்ததாகச் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
அம்பாள் என்பவள் சக்தி. மகாசக்தி. அந்த சிவத்துக்கே சக்தியெனத் திகழ்பவள். அதனால்தான் லோகமாதா என்று தேவியைப் போற்றுகிறது புராணம்.
அபிராமி அம்பாள், கற்பகாம்பாள், காமாட்சி அம்பாள், காளிகாம்பாள், கருமாரித் தாய், அகிலாண்டேஸ்வரி, மீனாட்சியம்மை, காந்திமதி அன்னை, கோமதிஅன்னை, பிரஹன் நாயகி என்று எத்தனையோ ரூபங்களுடனும் திருநாமங்களுடனும் திகழ்ந்தாலும் அம்பாள் என்பவள் மகாசக்தியாகவும் உலகாளும் சக்தியாகவும் போற்றப்படுகிறாள். கொண்டாடப்படுகிறாள். ஆராதிக்கப்படுகிறாள். வணங்கப்படுகிறாள். பூஜிக்கப்படுகிறாள்.
‘அம்பாள் கருணையே வடிவானவள். யாரெல்லாம் அவளைச் சரணடைகிறார்களோ, அவளை ஒருபோதும் கைவிடாதவள். நம்மைப் பெற்றெடுத்த தாயைப் போல கருணையே உருவானவள்’ என்று சிலாகிக்கிறது புராணம்.
தேவி உபாஸனை என்றே இருக்கிறது. வழிபாடுகளில், சக்தி உபாஸனை என்றே இருக்கிறது. பெண் தெய்வ வழிபாடு என்பது மிக மிக அளப்பரிய சக்தியைக் கொடுக்கக் கூடியது.
வெள்ளிக்கிழமை என்பது அம்பாள் வழிபாட்டுக்கு உரிய அற்புத நாள். அதிலும் கார்த்திகை மாத வெள்ளிக்கிழமை என்பது இன்னும் சிறப்புக்கு உரிய நாள். அம்பாளைக் கொஞ்சி மகிழ்ந்து ஆராதித்து வழிபடக் கூடிய நாள்.
இந்த கார்த்திகை வெள்ளிக்கிழமையில், மாலையில் விளக்கேற்றுங்கள். வீட்டு வாசலில், விளக்கேற்றுங்கள். வாசலின் இரண்டு பக்கத்திலும் பூக்களை வைத்து அலங்கரியுங்கள். பூஜையறையில் அம்பாள் படங்களுக்கு செவ்வரளிப் பூ வைத்து அலங்கரியுங்கள்.
லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். அபிராமி அந்தாதி சொல்லுங்கள். அல்லது காதால் கேட்டுக்கொண்டு, அம்பாளை வணங்குங்கள். அகிலத்தையும் காத்தருளும் அம்பிகை, நம்மையும் நம் குடும்பத்தையும் காத்தருளுவாள்.
இல்லத்தில் சுபிட்சத்தை மலரச் செய்வாள். தம்பதி இடையே ஒற்றுமையை மேம்படுத்தி அருளுவாள். வாழ்வில் சந்தோஷமும் அமைதியும் மலரச் செய்வாள் அம்பிகை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT