Published : 30 Nov 2020 07:09 PM
Last Updated : 30 Nov 2020 07:09 PM
“நான் மிகச் சாதாரணமானவன். கடவுளாகிய நமது தந்தை எனது பெயரை அழைத்தால் உங்களுக்கு நிச்சயம் உதவுவார். எனக்கும் அவருக்கும் அப்படியொரு ஒப்பந்தம்.ராமநாமமே எல்லாம்.அதனை 24 மணிநேரமும் ஜெபியுங்கள். முடிந்த போதெல்லாம் அதுவே உங்களைக் காக்கும்” என்பது தன்னுடைய பக்தர்களுக்கு பகவான் யோகி ராம்சுரத்குமார் அளித்த அருளுரை.
‘யோகி ராம்சுரத்குமார்’ என்கிற திருநாமத்தை உச்சரிக்க உச்சரிக்க, நமக்கு மனோதிடம் பெருகும். வாழ்வில் வளமெல்லாம் வந்துசேரும். புயலுக்குப் பின் அமைதி என்பது போல், வாழ்வில் எத்தனை புயலென சிக்கல்களும் பிரச்சினைகளும் வந்தாலும் அவை அனைத்தையும் அமைதியாய் கடந்து செல்ல வழிகாட்டும் மந்திரச் சொல் என்று பூரிக்கின்றனர் யோகி ராம்சுரத்குமார் பக்தர்கள்.
திருவண்ணாமலையில் வாழ்ந்த அற்புத மகான். மலையே சிவமெனத் திகழும் திருவண்ணாமலை, எத்தனையோ மகான்களை இந்த உலகுக்கு உணர்த்தியிருக்கிறது. அப்படி திருவண்ணாமலை உணர்த்தி உலகுக்கு அருளிய மகான் பகவான் யோகி ராம்சுரத்குமார்.
தந்தை என்பவர் குருவுக்குச் சமானம். குரு என்பவர் தந்தைக்கு நிகரானவர். நமக்கு ஞானத்தை வழங்குபவர்கள் எல்லோரையுமே குருவுக்குச் சமமாகவே வணங்க வேண்டும். வித்தையைக் கற்றுக் கொடுப்பவர் தந்தை என்றே சொல்கிறது சாஸ்திரம். பகவான் யோகி ராம்சுரத்குமார், ‘எனக்கு மூன்று தந்தைகள்’ என்று தன்னுடைய குருமார்களைப் பற்றிச் சொல்கிறார். சுவாமி அரவிந்தர், பகவான் ரமண மகரிஷி, பப்பா ராம்தாஸ் சுவாமிகள் என மூவரும் பகவான் யோகி ராம்சுரத்குமார் எனும் மகானின் வாழ்வில், வழிகாட்டியவர்கள். இவர் மகான் என அறிந்து உணர்ந்து, அதன்படி பகவான் யோகி ராம்சுரத்குமாரை வழிநடத்தியவர்கள்.
பகவான் யோகி ராம்சுரத்குமாரிடம் ஆசி கேட்டு நமஸ்கரிப்பவர்களுக்கு பகவான் சொல்லும் வார்த்தை, ‘என் தகப்பன் உன்னை ஆசீர்வதிக்கிறான்’ என்பதே!
திருவண்ணாமலையில், பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில், அந்த மிக விஸ்தாரமான மண்டபத்தில், சுவாமி அரவிந்தர், பகவான் ரமண மகரிஷி, பப்பா ராம்தாஸ் சுவாமிகள் ஆகியோரின் படங்கள் வைக்கப்பட்டிருப்பதை இன்றைக்கும் பார்க்கலாம். தரிசிக்கலாம்!
1952ம் வருடம். ராம்சுரத் குன்வர் கொஞ்சம் கொஞ்சமாக யோகியாக, மகானாக வெளியுலகுக்கு தெரியத் தொடங்கிய காலம் அது.
பகவான் யோகி ராம்சுரத்குமார், 1952ம் வருடத்தில் நிகழ்ந்ததை பின்னாளில் சொன்னார் இப்படி.
'This Beggar is No Mind.
No Thinking.
No Planning.
No Conscious.
No Sense Of Right And Wrong.
No Sense Of Good and Evil.
All Washed away'.
அதாவது, ’இந்தப் பிச்சைக்காரனிடம் எந்த எண்ணமும் இல்லை. எந்தச் சிந்தனையும் இல்லை. எந்தத் திட்டமிடலும் இல்லை. அதேசமயம், பிரக்ஞையும் இல்லை. சரியுமில்லை; தவறுமில்லை. நல்லதுமில்லை; கெட்டதுமில்லை. அனைத்துமே துடைக்கப்பட்டன..’. என்கிறார் பகவான் யோகி ராம்சுரத்குமார். .
சரி... அதென்ன பிச்சைக்காரன்?
ராம்சுரத் குன்வர், ஆனந்தாஸ்ரமத்தில்... பப்பா ராம்தாஸ் சுவாமிகளின் அறிவுரைப்படியும் அருளியபடியும் ‘ஸ்ரீராம் ஜெய்ராம்... ஜெய ஜெய ராம்...’ எனும் ராமநாமத்தை உள்ளே சொல்லியபடியே இருந்தார். ஏழு நாட்கள், ஏழு இரவுகள், ஏழு பகற்பொழுதுகள் என்று மோனநிலையில் இருந்தபடியே ராமநாமத்தில் இருந்தார்.
அதையடுத்து, ஆனந்தாஸ்ரமத்தில் இருந்த சிலருக்கு, கொஞ்சம் எரிச்சலோ இயலாமையோ... ராம்சுரத் குன்வரின் செயல்பாடுகள், மிகவும் தொந்தரவாக இருப்பதாக, பப்பா ராம்தாஸ் சுவாமிகளிடம் புகார் போல் தெரிவித்தார்கள். அங்கே ஏதும் அறியாத நிலையில், மோன நிலையில் இருந்த ராம்சுரத் குன்வரையும் புகார் கொடுத்தவர்களையும் மாறி மாறிப் பார்த்தார் பப்பா சுவாமிகள்.
ராம்சுரத் குன்வரை அழைத்தார். ‘நீ கிளம்பலாம்’ என்றார். அதைக் கேட்டு அதிர்ந்து போனார் ராம்சுரத் குன்வர்.
‘எங்கே கிளம்புவது? எங்கே செல்வது? எனக்கு வாழவே தெரியாது. பிச்சைதான் எடுக்கவேண்டும்’ என்று சுவாமிகளிடம் தெரிவித்தார் ராம்சுரத்குன்வர்.
‘பிச்சை எடு. நீ பிச்சைக்காரன் தான்.’ என்றார் பப்பா ராம்தாஸ் சுவாமிகள்.
அங்கே சிறிதுநேரம் மெளனம். பிறகு சுவாமிகளே தொடர்ந்தார்.
‘’ஒன்றைத் தெரிந்து கொள், மிகப்பெரிய மரத்துக்குக் கீழே இன்னொரு மரம் வளராது. வளரமுடியாது. மரத்துக்குக் கீழே, புல்லும்பூண்டும்தான் வளரும். புரிகிறதா?’ என்று கேட்டார். புரிகிறது என்பது போல் தலையசைத்தார் ராம்சுரத் குன்வர்.
‘ஆமாம்... உன்னை பிச்சை எடு என்று சொல்லிவிட்டேன். எங்கே செல்லப் போகிறாய்?’ என்று அடுத்த கேள்வி கேட்டார் சுவாமிகள். சட்டென்று பதில் சொன்னார்... ‘அருணாசலம்’ என்று! அவர் சொன்ன அருணாசலம்... திருவண்ணாமலை.
ராம்சுரத் குன்வரின் பதிலைக் கேட்டு, மகிழ்ந்து போனார் சுவாமிகள். அவரை ஆசீர்வதித்தவர், தன் தோளில் இருந்த ‘வுல்லன் சால்வை’யை அவர் தோளில் அணிவித்தார். ‘இது உன்னுடனே இருக்கட்டும். எனக்கு மிகுந்த மகிழ்ச்சி’ என அருளினார் பப்பா ராம்தாஸ் சுவாமிகள்.
அந்த சால்வையை எப்போதும் அணிந்து கொண்டே இருந்தார் ராம்சுரத் குன்வர். பகவான் யோகி ராம்சுரத்குமார் என்று உலகத்தாரால் அறியப்பட்டு, வணங்கி வந்த வேளையிலும் அவரிடம் பப்பா ராம்தாஸ் சுவாமிகள் வழங்கிய சால்வை தோளில் இருந்தது. எல்லாத் தருணங்களிலும் அந்தச் சால்வையைப் போர்த்திக் கொண்டே எல்லா இடங்களுக்கும் வலம் வந்தார் பகவான் யோகி ராம்சுரத்குமார்.
திருவண்ணாமலை என்பது மலை சார்ந்த பகுதி. ஆகவே குளிர்காலத்தில் கிடுகிடுக்க வைத்துவிடும். அதேசமயம் அது... அக்னி ஸ்தலமும் கூட. கோடை காலத்தில் சுட்டெரிக்கும். வியர்த்துக் கொட்டும். ஆனாலும் கடும் வெயில் காலத்தில் கூட, குரு வழங்கிய சால்வையைப் போர்த்தியபடியே இருந்தார் பகவான் யோகி ராம்சுரத்குமார்.
1952ம் ஆண்டில் நிகழ்ந்த சம்பவங்களை பகவான் விவரிக்கும் போது, இன்னொன்றையும் சொன்னார். ‘’என் குருவுக்கு கோடி வந்தனங்கள்’’ என்று பப்பா ராம்தாஸ் சுவாமிகள் குறித்து வணங்கிச் சொல்கிறார் பகவான் யோகி ராம்சுரத்குமார்.
This Beggar Died at The Lotus Feet Of Swamy Ramdoss, in 1952. Pappa Ramdoss Killed The Beggar.
All That Remain is Father Alone. Nothing Else. No One Else' என்று விவரிக்கிறார் பகவான் யோகி ராம்சுரத்குமார்.
1952ம் வருடம், சுவாமி ராம்தாஸின் பாதக்கமலங்களில் சரணடைந்திருந்த வேளையில், இந்தப் பிச்சைக்காரன், செத்துப் போனான். சுவாமி ராம்தாஸ் இந்தப் பிச்சைக்காரனைக் கொன்றுபோட்டார். அதன் பிறகு, எதுவுமில்லை; எவருமில்லை!
பகவான் யோகி ராம்சுரத்குமார், தன் பக்தர்களிடம் சொல்லும் இன்னொரு அருட்சொல்... ‘இந்தப் பிச்சைக்காரனிடம் ஏதுமில்லை. இந்தப் பிச்சைக்காரன் உன்னை ஆசீர்வதிக்கிறான்!’
டிசம்பர் 1ம் தேதி நாளைய தினம் செவ்வாய்க்கிழமை, பகவான் யோகி ராம்சுரத்குமார் 102வது ஜெயந்தி நன்னாள். இந்த நாளில், பகவான் யோகி ராம்சுரத்குமாரை வணங்குவோம். யோகி ராம்சுரத்குமார் சதாசர்வ காலமும் உச்சரித்துக் கொண்டிருந்த ‘ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்’ எனும் எளிய வாசகத்தை மந்திரமெனச் சொல்லுவோம். ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்.
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெயகுரு ராயா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT