Published : 30 Nov 2020 06:02 PM
Last Updated : 30 Nov 2020 06:02 PM
பகவான் யோகி ராம்சுரத்குமார் 102வது ஜெயந்தி பூஜை விழா நாளைய தினம் டிசம்பர் 1ம் தேதி செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. ரைட்டர் பாலகுமாரன் சாரிடபிள் டிரஸ்ட்டும் மயிலை யோகி ராம்சுரத்குமார் சத்சங்கமும் இணைந்து நடத்தும் இந்தப் பூஜையில், பிரபல ஐயப்பப் பாடகர் வீரமணி ராஜுவின் இன்னிசைக் கச்சேரி நடைபெறுகிறது.
பகவான் யோகி ராம்சுரத்குமார் திருவண்ணாமலையில் வாழ்ந்த மகான். விசிறி சாமியார் என்றும் விசிறி சுவாமிகள் என்றும் பலராலும் அழைக்கப்படும் பகவான் யோகி ராம்சுரத்குமார், வடக்கே காசிக்கு அருகில் உள்ள சின்னஞ்சிறிய கிராமத்தில் அவதரித்தவர். பின்னர், திருவண்ணாமலைக்கு வந்து, அங்கேயே பக்தர்களுக்கு தரிசனம் தந்தார்.
கலியுகத்தில் பல அற்புதங்களையும் அருளாடல்களையும் நிகழ்த்திய மகான் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.
எழுத்தாளர் பாலகுமாரன், ‘என்னுடைய குருநாதர் யோகி ராம்சுரத்குமார்’ என்று போற்றியுள்ளார். மேலும் பகவான் யோகி ராம்சுரத்குமார் பற்றி நாவல்களும் கதைகளும் கவிதைகளும் பாடல்களுமாக ஏராளமாக எழுதியுள்ளார்.
டிசம்பர் 1ம் தேதி பகவான் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தித் திருநாள். யோகி ராம்சுரத்குமாரின் அவதாரத் திருநாள். மயிலை யோகி ராம்சுரத்குமார் சத்சங்கம் எனும் அமைப்பின் பேரில், வருடந்தோறும் எழுத்தாளர் பாலகுமாரன், யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழாவை விமரிசையாக நடத்திக் கொண்டிருந்தார்.
பாலகுமாரன் மறைவுக்குப் பிறகும் பகவான் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி பூஜையை, அவரின் குடும்பத்தார் வழிகாட்டுதலுடன் பூஜை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், நாளைய தினம் டிசம்பர் 1ம் தேதி யோகி ராம்சுரத்குமார் 102வது ஜெயந்தி விழா சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெறுகிறது. ரைட்டர் பாலகுமாரன் சாரிடபிள் டிரஸ்ட், மயிலை யோகி ராம்சுரத்குமார் சத்சங்கம் இணைந்து நடத்துகிற இந்த பூஜை, நாளைய தினம் செவ்வாய்க்கிழமை சென்னை திருவலிக்கேணி சிங்கராச்சாரி தெருவில் உள்ள ஸ்ரீராகவேந்திரா மண்டபத்தில் நடைபெறுகிறது.
காலை 8.30 மணிக்கு முநீஸ்வர சாஸ்திரிகள் நடத்தும் ஹோம பூஜையுடன் ஜெயந்தி விழா தொடங்குகிறது. பின்னர், சத்சங்கத்தினரின் பகவான் யோகி ராம்சுரத்குமார் பாடல்கள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து அன்னதானம் நடைபெறுகிறது.
மாலை 5.30 மணிக்கு பிரபல ஐயப்பப் பாடகர் வீரமணி ராஜூ வழங்கும் பக்தி இன்னிசைக் கச்சேரி நடைபெறுகிறது.
விழா மற்றும் பூஜைக்கான ஏற்பாடுகளை எழுத்தாளர் பாலகுமாரன் குடும்பத்தினர் மற்றும் மயிலை யோகி ராம்சுரத்குமார் சத்சங்கத்தினர் செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT