Published : 30 Nov 2020 04:39 PM
Last Updated : 30 Nov 2020 04:39 PM
இந்த வருடத்தில் இன்னும் ஒரேயொரு நாள்தான் இருக்கிறது, தைலாபிஷேக தரிசத்தைக் காண்பதற்கு. திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரரை கவசமில்லாமல் தைலாபிஷேகக் கோலத்தில் நேற்றும் இன்றும் நாளைய தினமான 1ம் தேதியும் தரிசிக்கும் தருணம் இருக்கிறது. எனவே நாளைய தினம் மறக்காமல் திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரரை தைலாபிஷே தரிசனத்தை கண் குளிர தரிசித்துவிடுங்கள்.
சென்னையின் மிக முக்கிய சிவ ஸ்தலங்களில் திருவொற்றியூரும் ஒன்று. திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில் என்பார்கள். ஆதிபுரீஸ்வரர் கோயில் என்பார்கள். முக்கியமாக, வடிவுடையம்மன் கோயில் என்றும் அழைப்பார்கள். பிரசித்தி பெற்ற பிரமாண்டமான ஆலயம் இது.
சுந்தரர் பெருமான், நாவுக்கரசர், திருஞான சம்பந்தர் என மூவரும் பதிகம் பாடிய அற்புதமான திருத்தலம் என்று விவரிக்கிறது ஸ்தல புராணம். இங்கே உள்ள சிவலிங்கம், சுயம்புத் திருமேனி.பிரளயத்துக்குப் பின்னர், இவ்வுலகைப் படைக்க பிரம்மதேவன் சிவபெருமானிடம் கேட்ட தருணத்தில், சுயம்புத் திருமேனியாக, சிவலிங்கத் திருமேனியாக எழுந்தருளிய சிவனார், தன் சக்தியால் வெப்பம் தகிக்கச் செய்தார். அந்த வெப்பத்தால் பிரளய நீரை ஒற்றி எடுத்து அருளினார். அதனால்தான் சுயம்பு மூர்த்தமாகத் தோன்றினர். அப்படி ஒற்றி எடுத்த தலம் என்பதால், இது ஒற்றியூர் என்றும் திருவொற்றியூர் என்றும் ஆனதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.
இங்கே உள்ள சிவனாருக்கு ஆதிபுரீஸ்வரர் என்றும் தியாகராஜர் என்றும் படம்பக்க நாதர் என்றும் திருநாமங்கள் அமைந்துள்ளன. அதேபோல் அம்பாளுக்கு திரிபுரசுந்தரி என்றும் வடிவுடையம்மன் என்றும் திருநாமங்கள் அமைந்திருக்கின்றன.
கிழக்கு நோக்கிய நிலையில் காட்சி தருகிறார் ஸ்ரீதியாகராஜ சுவாமி. அருகில் இடது பக்கத்தில் மூலவரான ஆதிபுரீஸ்வரர் கிழக்கு நோக்கிய நிலையில் அற்புதமான காட்சி தருகிறார். இந்த ஆதிபுரீஸ்வரர்தான் ரொம்பவே விசேஷமானவர்.
எப்போதும் கவசத்துடன் திருக்காட்சி தருகிறார் ஆதிபுரீஸ்வரர். வருடத்தில் மூன்று நாட்கள் மட்டும் கவசம் இல்லாமல், தைலாபிஷேகக் கோலத்தில் காட்சி தருகிறார். அதாவது, ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தின் பெளர்ணமி நன்னாளில், கவசம் எடுத்துவிட்டு ஆதிபுரீஸ்வரருக்கு தைலாபிஷேகம் நடைபெறும். பிறகு பெளர்ணமி, அதற்கு மறுநாள், மூன்றாம் நாள் என மூன்று தினங்களும் தைலாபிஷேகக் கோலத்துடனும் காட்சி தருகிறார், அபிஷேகப் பிரியனான சிவபெருமான்.
கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. பெளர்ணமியும் நேற்றைய தினமான 29ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையும் வந்துவிட்டது. கார்த்திகை பெளர்ணமி நன்னாளில், நேற்று மாலை கவசம் எடுத்துவிட்டு சிவனாருக்கு மகா அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் தைலாபிஷேகம் நடந்தது. கவசமில்லாமல், தைலாபிஷேக தரிசனத்தை மூன்று நாட்கள் தரிசிக்கலாம்.
இன்று 30ம் தேதி திங்கட்கிழமை இரண்டாம் நாள். காலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி நேரம் வரையும் நாளைய தினமான மூன்றாம் நாள், டிசம்பர் 1ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 6 முதல் இரவு 8 மணி வரையும் திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரரை தைலாபிஷேகத் திருக்கோலத்தில் தரிசனம் செய்யலாம்.
பலமும் வரமும் தந்தருளும் ஆதிபுரீஸ்வரரின் தைலாபிஷேகக் கோலத்தை 2020ம் ஆண்டின் தைலாபிஷேகக் கோலத்தை இன்றைக்கும் நாளைக்கும் தரிசிக்கலாம்.
மறக்காமல் தரிசியுங்கள். அவசியம் தரிசியுங்கள். இந்த இரண்டு நாட்களை விட்டுவிட்டால், 2021 கார்த்திகை பெளர்ணமியில்தான் மீண்டும் தைலாபிஷேக தரிசனம் என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT