Published : 29 Nov 2020 11:13 AM
Last Updated : 29 Nov 2020 11:13 AM
மண்ணும் நமச்சிவாயம் மலையும் நமச்சிவாயம் என்போம். திருக்கார்த்திகை தீப நன்னாளில், மலையில் ஏற்றப்படும் திருக்கார்த்திகை தீபமே மலையென ஜொலிக்கும். உலகெங்கும் பிரகாசிக்கும் அற்புத நாள் இன்று. இந்த நாளில் இல்லத்திலும் வாசலிலும் விளக்கேற்றுங்கள். நம் வாழ்க்கையையே ஒளிமயமாக்கித் தருவார் சிவனார்.
இன்று 29ம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருநாள். நட்சத்திரங்களில் கார்த்திகைக்கு முக்கியத்துவம் உண்டு. கார்த்திகை மாதத்தின் கார்த்திகை நட்சத்திர நாள் என்பது மிக மிக உன்னதமான நாள். அற்புதமான நாள்.
அடி முடி தேடி மகாவிஷ்ணுவும் பிரம்மாவும் புறப்பட்ட போது, அவர்களால் அடியையும் தொடமுடியவில்லை. முடியையும் தொடமுடியவில்லை. அவர்களுக்கு அக்கினிப் பிழம்பாக, மிகப்பெரும் ஜோதியாக திருக்காட்சி தந்தருளினார் சிவபெருமான் என்கிறது புராணம். அப்படி ஜோதியாக காட்சி தந்தது திருக்கார்த்திகை மாதத்தின் திருக்கார்த்திகை நட்சத்திர நாளில் என விவரிக்கிறது புராணம்.
சக்தியேல் சிவமில்லை, சிவமில்லையேல் சக்தியில்லை என்பதை உணர்த்தும் வகையில், அர்த்த நாரீஸ்வரராக சிவனாரும் பார்வதி தேவியும் திருக்காட்சி தந்ததும் இந்த நன்னாளில்தான் என்கிறது புராணம்.
திருக்கார்த்திகை தீப நன்னாளில், இல்லத்தை தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். மாலையில் வீட்டில் மாவிலைத் தோரணம் கட்டுங்கள். வாசலில் கோலமிடுங்கள். பூஜையறையில் கோலமிட்டு, விளக்கேற்றுங்கள். சுவாமி படங்களுக்கு பூக்களிட்டு அலங்கரியுங்கள். சிவ நாமம் சொல்லுங்கள். சிவ புராணம் பாராயணம் செய்யுங்கள். நமசிவாய மந்திரம் ஜபியுங்கள். வாசலில் வரிசையாக விளக்குகளை வைத்து, குடும்பத்தார் அனைவரும் மனமொன்றி வேண்டிக்கொள்ளுங்கள்.
அருணாசல சிவ அருணாசல சிவ என்று உச்சரித்து, சிவனாரை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். மலையே நமச்சிவயம் என்றிருக்கும் திருவண்ணாமலையை மனதால் நினைத்து அருணாசலேஸ்வரரை வேண்டிக்கொள்ளுங்கள்.
மலையே சிவம். மலையே ஜோதி.
அண்ணாமலையானுக்கு அரோகரா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT