Published : 27 Nov 2020 07:54 PM
Last Updated : 27 Nov 2020 07:54 PM
திருக்கார்த்திகை நன்னாளில், முருகப்பெருமானை மனமுருகி வழிபட்டு பிரார்த்தனை செய்தால், கார்த்திகை நன்னாளில் கார்த்திகேயன் அருளுவான். எதிரிகளை பலமிழக்கச் செய்வான். எதிர்ப்புகளையெல்லாம் விரட்டுவான். வீடுமனை வாங்கும் யோகம் தந்தருள்வான் என விவரிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
நட்சத்திரங்களில் போர் நட்சத்திரம் என்று கார்த்திகையைச் சொல்லுவார்கள். முருகப்பெருமானுக்கு இன்னொரு பெயர் கார்த்திகேயன். கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால், முருகனுக்கு கார்த்திகேயன் என்றொரு பெயரும் அமைந்தது.
அதேபோல், சூரபத்மனை வதம் செய்ய எடுத்த அவதாரமே முருகப் பெருமான். படை திரட்டிச் சென்று முருகப்பெருமான் சூரனை அழித்தான் என்கிறது புராணம். அதனால்தான் ஆறுபடை வீடு உருவானதாகச் சொல்வார்கள்.
முருகக் கடவுளின் படைவீடுகளான ஆறுபடை வீடுகள் மட்டுமின்றி, பல தலங்களிலும் முருகப்பெருமான் தன் படைகளுடன் வந்து தங்கிச் சென்று புறப்பட்டான் என்றும் அப்படித் தங்கிச் சென்ற தலங்கள், படையூர் என்றானது என்றும் தெரிவிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
திருச்சி அருகே உள்ள பிரம்மா கோயிலான, திருப்பட்டூர் ஆதியில், திருப்படையூர் என்றும் திருப்பிடவூர் என்றும் அழைக்கப்பட்டு, பின்னாளில் திருப்பட்டூர் என அழைக்கப்படுகிறது. அதனால்தான் முருகப்பெருமானை வணங்கினால் நம் கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்புகளையெலாம் அழிப்பார் என்றும் எதிரிகளையெல்லாம் விரட்டியடிப்பார் என்றும் நம் தடைகளையெல்லாம் தகர்த்தெறிவார் என்றும் விவரிக்கின்றன ஞானநூல்கள்.
திருக்கார்த்திகை தீப நாள் என்பது கார்த்திகை மாதத்தில் வருகிறது. வருகிற 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை தீபத் திருநாள். இந்த நன்னாளில், திருக்கார்த்திகையையொட்டி, விரதம் மேற்கொண்டு, சிவ புராணம் மனனம் செய்வதும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வழிபடுவதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.
ஞாயிறு என்பது சூரியன். ஞாயிற்றுக் கிழமை என்பது சூரிய பலம் பொருந்திய நாள். அதேபோல், பெளர்ணமி என்பது சந்திரன். முழு நிலவுடன் தன் ஆட்சியை வானத்திலும் பூமியிலுமாக சந்திர பகவான் செலுத்துகின்ற அற்புதமான நாள்.
எனவே, இந்தநாளில் நாம் விரதம் மேற்கொள்வதாலும் பூஜைகள் செய்வதாலும் இறைசக்தியை வழிபாடுகள் செய்வதாலும் சூரிய சந்திர பலம் முழுமையாகப் பெறலாம். இடபாகத்தில் இடம் கொடுத்து ஆண் பெண் சமம் என்பதை உணர்த்திய சக்தி இல்லையேல் சிவமில்லை என்பதை நமக்கெல்லாம் உணர்த்திய சிவனாரை வணங்குவதால், இல்லறம் நல்லறமாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். தம்பதி இடையே ஒற்றுமை மேலோங்கும்.
முருகப்பெருமானை மனமுருகி வழிபட்டு பிரார்த்தனை செய்தால், கார்த்திகை நன்னாளில் கார்த்திகேயன் அருளுவான். எதிரிகளை பலமிழக்கச் செய்வான். எதிர்ப்புகளையெல்லாம் விரட்டுவான். வீடுமனை வாங்கும் யோகம் தந்தருள்வான் என விவரிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT