Published : 27 Nov 2020 01:54 PM
Last Updated : 27 Nov 2020 01:54 PM
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில், டிச.27-ம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி விழாவுக்கான பந்தல்கால் முகூர்த்தம் இன்று காலையில் நடைபெற்றது.
திருநள்ளாற்றில் சனி பகவானுக்கு தனிச் சன்னதியுடன் கூடிய தர்பாரண்யேஸ்வரர் கோயிலில், வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி வரும் டிச.27-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. அதிகாலை 5.22 மணிக்கு சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பிரவேசிக்கிறார். சனிப்பெயர்ச்சி விழாவின்போது நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாற்றுக்கு வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், சனிப்பெயர்ச்சி விழாவுக்கான பந்தல்கால் முகூர்த்தம் இன்று (நவ. 27) காலையில் நடைபெற்றது. இதையொட்டி, பந்தல் கால்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர், மங்கல வாத்தியங்கள் முழங்க பந்தல் கால்கள் பிரகார உலாவாகக் கொண்டு வரப்பட்டு கோயில் உள் பிரகாரத்திலும், வெளிப்பிரகாரத்திலும் நடப்பட்டது.
இதில், புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, துணை ஆட்சியரும், நிர்வாக அதிகாரியுமான (கோயில்கள்) எம்.ஆதர்ஷ், தர்பாரண்யேஸ்வரர் கோயிலின் தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோயில் ஊழியர்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சனிப்பெயர்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகள் ஒவ்வொரு கட்டமாக கோயில் நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ளது. கரோனா பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு, கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு விழா நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
வெளியூர்களிலிருந்து வந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக பேருந்து போக்குவரத்து, ரயில் போக்குவரத்து போன்ற வசதிகள் ஒவ்வொரு சனிப்பெயர்ச்சி விழாவின்போதும் எவ்வாறு செய்யப்படுமோ, அதேபோல் தற்போதும் செய்யப்படும்.
குடிநீர், கழிப்பறை வசதி, அன்னதானம், பாதுகாப்பு ஏற்பாடு, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும், வருகின்ற பக்தர்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாத வகையில் காரைக்கால் மாவட்டம் நிர்வாகம் உரிய ஏற்பாடுகளைச் செய்யும்.
புதுச்சேரி காவல் உயரதிகாரிகள், இந்து சமய அறநிலையத்துறை உயரதிகாரிகள், செயலாளர்கள் உள்ளிட்டோர் இங்கு வந்து விழா நடைபெறுவதற்கான ஒத்துழைப்பைத் தருவார்கள். புதுச்சேரி முதல்வர், அமைச்சர்கள் வந்து விழா ஏற்பாடுகள் குறித்த இறுதிக்கட்ட ஆய்வை மேற்கொள்வார்கள்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT