Published : 08 Oct 2015 01:11 PM
Last Updated : 08 Oct 2015 01:11 PM

சித்தர்கள் அறிவோம்: தானாய் ஆடிய கயிறு- அப்புடு சுவாமிகள்

உள்ளும் புறமும் தூய்மையுடன் இருத்தல், அருளுடையவனாக இருத்தல், உணவைச் சுருக்குதல், எந்தச் சூழ்நிலையிலும் பொறுமையுடன் இருத்தல், நல்ல குணங்களைப் பெற்றிருத்தல், வாய்மையைக் கடைப்பிடித்தல், நடுநிலைமையுடன் இருத்தல், காமம், களவு, கொலை ஆகியவற்றிலிருந்து விலகியிருத்தல் ஆகிய பத்துக் குணங்களை உடையவனே நியமத்தன் என்று திருமூலர் கூறுகிறார்.

‘மனம் பழுத்தால் பிறவி தங்கம்’ என்று கூறப்படுவது போல் மனதை ஒருமுகப்படுத்துவதே யோகங்களின் நோக்கமாகும். அத்துடன் சிவனடியார்கள் மற்றும் மகான்களின் வரலாற்றைப் படித்தறிந்து அவர்களைப் போன்று நாமும் வைராக்கியத்துடன் சிவ சிந்தனையை மட்டுமே கொண்டிருந்தால்தான் ஞானத்தை அடைய முடியும்.

பங்கா இழுத்த ஐகோர்ட் சுவாமிகள்

இப்படிச் சிவத்தைக் கண்ட மகான்தான், அப்புடு சுவாமிகள் என்ற ஐகோர்ட் சுவாமிகள். புண்ணியபூமியான திருவொற்றியூரில் ஜீவசமாதியில் வீற்றிருக்கும் அப்புடு சுவாமிகளின் வரலாறு முழுமையாக கிடைக்கவில்லை.

அப்புடு சுவாமிகள், ஆங்கிலேயர் காலத்தில் ஐகோர்ட் சொலிசிட்டர் ஜெனரல் அலுவலகத்தில் பங்கா இழுக்கும் பணியில் இருந்தார். (ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மின் விசிறி புழக்கத்தில் இல்லை. ஆகவே அதிகாரிகளின் மேசைக்கு மேல் உட்பக்கக் கூரையிலிருந்து நீண்ட செவ்வக வடிவத்தில் துணியினால் ஆன மிகப் பெரிய விசிறி ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். அறைக்கு வெளியே வாசற்படியருகில் ஒரு பணியாளர் அமர்ந்து அந்த விசிறியுடன் இணைக்கப்பட்டிருக்கும் கயிற்றை இழுத்து விசிறியை ஆட்டிக்கொண்டே இருப்பார். இந்த விசிறிக்குப் பங்கா என்று பெயர்).

ஒருநாள் ஆங்கிலேயே வழக்கறிஞர் ஒருவர் சொலிசிட்டர் ஜெனரலைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது சுவாமிகள் உறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் கோபம்கொண்டார். அதே சமயம் அறையினுள் பங்கா ஆடிக்கொண்டிருப்பதைக் கண்டார். சுவாமிகள் கயிற்றை ஆட்டாதபோதும் பங்கா ஆடிக்கொண்டிருக்கும் அதிசயத்தைக் கண்டதும் சுவாமிகளிடம் ஏதோ ஒரு சக்தி இருப்பதை உணர்ந்துகொண்டார். சுவாமிகள் கண் விழித்ததும் தான் சுவாமிகள் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார் என்று தெரிந்தது. அதன் பிறகு அந்த ஆங்கிலேயர் சுவாமிகளைத் தினமும் தரிசிப்பதை வழக்கமாக்கிக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் அப்புடு சுவாமிகளின் மகிமை வெளியுலகிற்குத் தெரிந்தது. சுவாமிகளைத் தேடிப் பக்தாகள் வந்து தமது குறைகளை நிவர்த்தி செய்து கொண்டனர். சுவாமிகள், ஐகோர்ட்டில் பணிபுரிந்ததால் ஐகோர்ட் சுவாமிகள் என்று பக்தர்கள் அழைத்தனர்.

சாமியை அழைத்த சுவாமிகள்

இந்தக் காலகட்டத்தில் தான் பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் திருவொற்றியூரில் சத்திய ஞான சபையினைத் துவக்கி பக்தர்களுக்கு அருளுபதேசம் செய்துவந்தார். ஒரு நாள் அவர் தமது பக்தர்களிடம், ஐகோர்ட்டில் ஒரு சாமி இருக்கிறதென்றும், அதனை அழைத்துவாருங்கள் என்றும் கூறி அனுப்பிவைத்தார்.

அவரது அழைப்பை ஏற்று, அப்புடு சுவாமிகள் பாடகச்சேரி மகானின் மடத்திற்கு வந்து தங்கிவிட்டார். ஒரே இடத்தில் இரு பெரும் மகான்களின் தரிசனம் பக்தர்களுக்குக் கிடைத்தது.

1944-ம் ஆண்டில் ஒரு நாள் அப்புடு சுவாமிகள் சமாதி நிலையை அடையப் போகிறார் என்று உணர்ந்த பாடகச்சேரி சுவாமிகள் தமது பக்தர்களிடம் ‘அது போகப் போகுது நல்லா தரிசனம் பண்ணிங்கோங்க’ என்று கூறினார். அவர் கூறியபடி, அப்புடு சுவாமிகள் அனைவரின் முன்னிலையில் சமாதி நிலையை அடைந்தார்.

பாடகச்சேரி சுவாமிகள் தமது மடத்திற்கு அருகிலேயே அப்புடு சுவாமிகளை முறைப்படி சமாதி செய்து சமாதி பீடத்தின் மீது சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தார். தாம் ஜீவசமாதியாகும் வரை தமது சீடரின் சமாதிக்கு முறைப்படி பூசைகள் செய்வித்தார்.

இந்த இரு மகான்களும் அருகருகே ஜீவசமாதி கொண்டு அந்த இடத்தைப் புனிதமாக்கியிருக்கின்றனர். அந்தப் புண்ணிய பூமியில் காலடிகள் பட்டாலே நமது வினைகள் அகலும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

சுவாமிகளின் ஜீவசமாதியை தரிசிக்க

திருவொற்றியூர் பட்டினத்தார் தெருவில் உள்ள பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகளின் ஜீவசமாதிக்கு அருகே அப்புடு சுவாமிகளின் ஜீவசமாதி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x