Published : 24 Nov 2020 02:26 PM
Last Updated : 24 Nov 2020 02:26 PM
ராகுகாலத்தில் துர்கைக்கு விளக்கேற்றுவோம். தீய சக்திகளை அழித்தொழிப்பாள் தேவி. எதிர்ப்புகளை இல்லாது செய்வாள்.
சிவ வழிபாடு செய்வதும் விஷ்ணு வழிபாடு செய்வதும் உன்னத பலன்களைத் தந்தருளும். அதேபோல் கெளமாரம் எனப்படும் முருக வழிபாடு செய்வதும் மகத்தான பலன்களைத் தரும்.
இப்படியான வழிபாடுகளில், சாக்த வழிபாடு என்பது வலிமையைக் கொடுக்கக் கூடியது என்கிறார்கள் சாக்த வழிபாடு செய்பவர்கள். சாக்த வழிபாடு என்றால் சக்தி வழிபாடு என்று அர்த்தம். சக்தி என்பது தேவியைக் குறிக்கும். சக்தி என்பது அம்மனைக் குறிக்கும். சக்தி வழிபாடு என்பது அம்மன் வழிபாட்டைக் குறிக்கும்.
அம்மன் வழிபாடு மனதின் குழப்பங்களையும் பயத்தையும் போக்கக்கூடியது. மாரியம்மன், காளியம்மன் முதலான தெய்வங்களை வணங்கி வந்தால், எதிரிகள் குறித்த பயம் அனைத்தும் நீங்கிவிடும்.
அதேபோல் துர்கை வழிபாடு என்பதும் மகத்தான பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள். எல்லா சிவாலயங்களிலும் அம்மன் கோயில்களிலும் துர்கைக்கு சந்நிதி உண்டு. சிவாலயத்தின் கோஷ்டத்திலும் அம்மன் கோயிலின் கோஷ்டத்திலும் துர்காதேவி தனிச்சந்நிதி கொண்டு அருள்பாலிக்கிறாள்.
அதேபோல், பெருமாள் குடிகொண்டிருக்கும் கோயில்களில் உள்ள துர்கையை விஷ்ணு துர்கை என்றும் சிவாலயங்களில் உள்ள துர்கையை சிவ துர்கை என்றும் சொல்லுவார்கள்.
செவ்வாய்க்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் அம்மனை வழிபடுவதும் துர்கையை வழிபடுவதும் மனதில் நம்பிக்கையை விதைக்கும். எதிர்மறை எண்ணங்களை விரட்டியடிக்கும். இதுவரை இருந்த காரியத்தடைகள் அனைத்தையும் நீக்கி, அருளுவாள் துர்காதேவி.
செவ்வாய்க்கிழமை மாலை 3 முதல் 4.30 மணி வரை ராகுகாலம். அதேபோல், வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணி வரை ராகுகாலம். ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 முதல் 6 மணி வரை ராகுகாலம். இந்த நாட்களில்... இந்த நேரத்தில் துர்கைக்கு விளக்கேற்றி வழிபடுவது வளம் சேர்க்கும்.
வீட்டில் ராகுகால வேளையில் விளக்கேற்றுங்கள்.
ஓம் காத்யாயனய வித்மஹே
கன்யாகுமாரி தீமஹி
தந்நோ துர்கி ப்ரசோதயாத்
எனும் துர்காதேவியின் காயத்ரி மந்திரத்தை 11 முறை ஜபித்து துர்காதேவிக்கு விளக்கேற்றி வழிபடுங்கள். துர்கா காயத்ரியை, 11 முறை 24 முறை அல்லது 54 முறை அல்லது 108 முறை ஜபிக்கலாம். துர்கைக்கு செந்நிற மலர்கள் சூட்டி வழிபடுங்கள். இதுவரை இருந்த எதிர்ப்புகளையெல்லாம் தீர்த்து வைப்பாள் துர்காதேவி.
துர்கை என்றாலே துக்கத்தைப் போக்குபவள் என்று அர்த்தம். நம் துக்கங்களையெல்லாம் போக்கி அருளும் துர்காதேவியை சரணடைவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT