Published : 22 Oct 2015 10:29 AM
Last Updated : 22 Oct 2015 10:29 AM
தமிழகத்தில் சுல்தானியர் ஆட்சியை ஏற்படுத்திய மகான் சையிது இபுராகீம், இன்றும் ஏர்வாடியிலிருந்து அருளாட்சி செய்துகொண்டிருக்கிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரையிலிருந்து சில மைல் துாரத்தில் அவரின் நினைவிடம் உள்ளது.
நபிகள் நாயகத்தின் பதினெட்டாவது தலைமுறையைச் சேர்ந்தவர் சையிது இபுராகீம். மதீனா நகரில் ஹிஜ்ரி 530-ம் ஆண்டு(கி.பி1137) பிறந்த அவர், இளம் வயதிலேயே ஆன்மிகத்தில் விருப்பம் கொண்டார். அவரது மனைவியின் பெயர் சையது அலி பாத்திமா.
மதீனா பள்ளிவாசலில், ஒரு வெள்ளிக்கிழமை இரவு அவர் தியானத்தில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது உறக்கநிலை போன்ற அனுபவம் ஏற்பட்டது. அந்த நிலையில் நபிகள் நாயகத்தின் தரிசனம் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. அரேபியாவிலிருந்து கீழ்த்திசை நாடுகளுக்குச் சென்று திருப்பணியில் ஈடுபடும்படி நபிகள் அவரிடம் அறிவுறுத்தியதாகக் கருதப்படுகிறது. கி.பி 1187-ல் சையிது இபுராகீம் தனது குடும்பத்தினருடன் தென்னிந்தியாவுக்கு வந்தார். அப்போது அவர் 52 வயதைக் கடந்திருந்தார்.
கேரளக் கடற்கரையிலுள்ள கண்ணனுாருக்குக் கப்பலில் வந்து சேர்ந்த சையிது இபுராகீம் அவர்கள் அந்தப் பகுதியில் இறைப்பணி செய்துவிட்டு பாண்டிய நாட்டுக்கு வந்தார், அவர்கள் அனைவரும் முதலில் புன்னைக்காயலில் தங்கினார்கள். அப்போது மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களை வீரபாண்டியன், விக்கிரமப் பாண்டியன், குலசேகர பாண்டியன் ஆகிய மூன்று சகோதரர்கள் தனித்தனியே ஆட்சி செய்தனர். சையிது இபுராகீம் அங்கு சமயப்பணி புரிவதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லையென்று கூறப்படுகிறது. அவருடைய அணியில் அப்போது இருந்த ஐந்தாயிரம் தொண்டர்கள் போர் வீரர்களாகவும் இருந்தனர். மதுரை, பவித்திர மாணிக்கப்பட்டினம் முதலான இடங்களில் சண்டை, சச்சரவுகளும் ஏற்பட்டன.
ஏர்வாடியான பவித்திர மாணிக்கப்பட்டினம்
பவித்திர மாணிக்கப்பட்டினத்தில் கிபி 1188-ம் ஆண்டில் நிகழ்ந்த போரில் விக்கிரம பாண்டியன் உயிரிழந்ததால் அப்பகுதி, சையிது இபுராகீம் அவர்களின் வசமாயிற்று, சுல்தானாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அந்த இடமே ஏர்வாடி என்ற பெயரைப் பெற்றது. மதீனாவில் அவர் வாழ்ந்த இடத்தின் பெயர் ‘யர்பாத்’. அதுதான் ஏர்பாதி, ஏறுபாடி என்றெல்லாம் அழைக்கப்பட்டு பின்னர் ஏர்வாடி என்று மாறியதாகக் கூறப்படுகிறது,
போரில் மாண்ட சுல்தான்
ஹிஜ்ரி 594-ஆம் ஆண்டு (கி.பி 1198) சையிது இபுராகீம் அவர்கள் சுல்தானாக ஆட்சிப் பொறுப் பேற்று பன்னிரண்டரை ஆண்டுகள் ஆகியிருந்த நிலையில், திருப்பதிக்குத் தப்பிச் சென்றிருந்த திருப்பாண்டியன் தனது சகோதரர்கள் போரில் மாண்டதை அறிந்தார். மதுரைக்கு வந்து, சையிது இபுராகீமைப் பழிவாங்கத் திட்டமிட்டு பெரும்படையுடன் பவித்திர மாணிக்கப் பட்டினத்திற்கு வந்தார்.
63 வயதான சையிது இபுராகீமும் போர்க் களத்திற்கு வந்தார். பத்தாம் நாள் போரில் இருவரும் நேருக்கு நேர் மோதினார்கள். திருப்பாண்டியன் களத்தில் பலவீனமான நிலையை அடைந்திருந்தார். அச்சமயத்தில், சுல்தான் அங்கிருந்து வெளியேற முயன்றபோது, விழிப்படைந்த திருப்பாண்டியன் அருகில் கிடந்த கூர்மையான வேலை எடுத்து வீசினார். அது சுல்தானின் மீது பாய்ந்து அவ்விடத்திலேயே உயிர்துறந்தார்.
மக்கள் மனதிலிருந்து மறையாத சுல்தான்
ஏர்வாடி நாயகர் சையிது இபுராகீமின் நல்லுடல் அவருடைய தாயார் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது. அங்கே ஒரு நினைவுச்சின்னமும் எழுப்பப்பட்டது. ஏர்வாடி தர்கா வளாகத்தில் தான் இறைநேசர் சையிது இபுராகீம் அவர்களின் மனைவியார் சையிது அலி பாத்திமா, புதல்வர் சையிது அபூதாஹிர், தங்கை ராபியா, மைத்துனர் ஜைனுல் ஆபிதீன் ஆகியோரின் சமாதிகளும் உள்ளன.
காலப்போக்கில் ஏர்வாடி நாயகரின் நினைவிடத்தைத் தரிசிப்பதற்காக வருபவர்களின் எண்ணிக்கை பெருகியது. ராமநாதபுர அரசர் முத்துக்குமார விஜய ரகுநாத சேதுபதி பிள்ளைச் செல்வம் பெற்றார் என்று கூறப்படுகிறது. இதனால் பெருமகிழ்ச்சியடைந்த சேதுபதி மேலைமாயாகுளம் எனும் கிராமத்தை தர்காவுக்கு மானியமாக வழங்கினார். அந்த இடமே இன்றைய ஏர்வாடி. அவர்களின் ஆசியினால் பிறந்த சேதுபதி சைலதுரையும் தர்காவுக்கு நிலங்களை மானியமாக வழங்கினார்.
காவியமாக மாறிய சையிது இபுராகீம்
ஏர்வாடி சையிது இபுராகீம் அவர்கள் தென்னகத்தில் புரிந்த திருப்பணிகளையும், தீர வரலாற்றையும் விவரிக்கும் தமிழ்க் காவியம் ‘தீன் விளக்கம்’. ராமநாதபுர மாவட்டத்திலுள்ள மீசலைச் சேர்ந்த வண்ணக் களஞ்சியப் புலவர் இந்தக் காவியத்தை இயற்றி முடித்ததும் ஏர்வாடி தர்காவில் அரங்கேற்ற விரும்பினார். ஏர்வாடி நாயகரின் குடும்ப பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் என்று தன்னைப் பற்றிக் கூறி அனுமதி கேட்டார். அப்போது ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டது.
சையிது இபுராகீமின் நினைவிடத்திற்குள் புலவர் அடைக்கப்பட்டுவிடுவாரென்றும், காவியத்தைப் பாடுவதன் மூலம் கதவுகளைத் திறக்கவேண்டுமென்பதே அந்த நிபந்தனை. அதன்படியே நிகழ்ந்தது.
அவர் நினைவு விழா ஆண்டுதோறும், துல்காயிதா மாதம் பிறை பத்து முதல் 23 வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT