Published : 23 Nov 2020 06:11 PM
Last Updated : 23 Nov 2020 06:11 PM
கல்யாண காமாட்சி அம்மன் கோயிலில் சங்காபிஷேக தரிசனம் செய்து வேண்டிக்கொண்டால், கல்யாணம் முதலான மங்கல வரங்கள் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
தர்மபுரி என்று இன்றைக்கு அழைக்கப்படுகிற ஒப்பற்ற திருத்தலத்தில்தான் அருளாட்சி செய்துகொண்டிருக்கிறாள் காமாட்சி அம்பாள். இந்த அம்பாளுக்கு கல்யாண காமாட்சி என்றுதான் திருநாமம். இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீமல்லிகார்ஜுன சுவாமி.
அற்புதமான திருநாமம். அதியமான் அரசாட்சி செய்த புண்ணிய பூமி. வள்ளல் தன்மைக்குப் பெயர் பெற்ற இந்தத் தலத்தில், கல்யாண காமாட்சியும் மல்லிகார்ஜுனேஸ்வரரும் வள்ளலென அருள்மழை பொழிகின்றனர்.
சிவனார் இங்கே சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளியுள்ளார். கனிவும் கருணையுமாக தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கேட்டதைக் கொடுக்கும் வள்ளலாக நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் காமாட்சி அன்னைதான் இங்கே நாயகி. ஆனந்த சொரூபி. பார்த்தாலே நம் மன பாரமெல்லாம் உப்புக்கரைசலென கரைந்து காணாது போகும் என சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.
ஆயிரம் வருடங்களைக் கடந்து கம்பீரமும் அழகும் குறையாமல் கலைநயத்துடன் வியக்கத்தக்க வகையில் நிற்கும் ஆலயம், கொள்ளை அழகுடன் திகழ்கிறது.
ஒருகாலத்தில் தகடூர் என்று பெயர் அமைந்ததைக் குறிப்பிடும் கல்வெட்டுகள் உள்ளன. காலங்கள் கடந்து சாந்நித்தியம் நிறைந்து அருள்பாலிக்கும் கல்யாண காமாட்சி கோயிலுக்கு ஒருமுறையேனும் வந்தால் போதும்... நாம் நினைத்த காரியங்களை செவ்வனே நிறைவேற்றித் தருகிறார்கள் அம்மையும் அப்பனும். செம்மையாக வாழ வைப்பார்கள் என்று சொல்லிச் சொல்லி உருகுகிறார்கள் பக்தர்கள்.
இங்கே, வருடம் முழுக்க விழாக்களும் விசேஷங்களும் அமர்க்களப்படுகின்றன. கார்த்திகை மாதத்தில், சோமவாரங்களில் உத்ஸவ மூர்த்தங்களுக்கு சங்காபிஷேகம் நடைபெறுகிறது. கார்த்திகை சோமவாரத்திலும் கார்த்திகை பிரதோஷ நன்னாளிலும் கார்த்திகை திருக்கார்த்திகை தீப நன்னாளிலும் கல்யாண காமாட்சி அம்பாள் சமேத மல்லிகார்ஜுன சுவாமியை தரிசித்தால், கேட்டதெல்லாம் ஈடேற்றித் தருவார்கள் என்பதும் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றித் தருவார்கள் என்பதும் தடைப்பட்டிருந்த மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும் என்பதும் மங்காத செல்வத்தையும் புகழையும் தந்தருளுவார்கள் என்பதும் இங்கே ஐதீகம்!
தர்மபுரி கல்யாண காமாட்சி அன்னையை கண்ணாரத் தரிசியுங்கள். நம் அன்னை நம் கண்ணீரைத் துடைக்கக் காத்துக்கொண்டிருக்கிறாள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT