Last Updated : 23 Nov, 2020 01:06 PM

1  

Published : 23 Nov 2020 01:06 PM
Last Updated : 23 Nov 2020 01:06 PM

சைவத்திலும் சங்கு; வைணவத்திலும் சங்கு! சிவனாருக்கு சங்காபிஷேகம்; விஷ்ணுவுக்கு பாஞ்சஜன்யம்!

சைவ வைணவ பேதமில்லாமல் இருக்கிற விஷயங்களில் சங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சங்கு மகாவிஷ்ணுவின் திருக்கரத்தில் இருக்கிறது. அதேபோல் சிவபெருமானுக்கு உரிய வழிபாடுகளில் சங்காபிஷேகம் முக்கிய அங்கம் வகிக்கிறது.

மனித வாழ்வில் சங்கிற்கும் நமக்குமான தொடர்பு பிறக்கும் போதே வந்துவிடுகிறது. பிறந்த குழந்தைக்கு சங்கு மூலம் பால் புகட்டப்படுகிறது. இறந்த வீடுகளில் சங்கின் ஒலியும் முக்கியத்துவம் மிக்கதாக நிறைவு செய்வதாக இருக்கிறது.

மகாவிஷ்ணுவின் மிக முக்கியமான ஆயுதங்களாக, திருக்கரங்களில் இருப்பவற்றில் முதன்மை மிக்கதாக சங்கு மற்றும் சக்கரம் திகழ்கின்றன. சிவனாரின் அபிஷேக பூஜைகளில், சங்காபிஷேக பூஜை என்பது மிக மிக முக்கியப் பங்கு வகிப்பதும் சாந்நித்தியம் மிக்கதுமாகப் போற்றப்படுகிறது.

சிவபெருமான் அபிஷேகப்பிரியன் என்பார்கள். பெருமாள் அலங்காரப் பிரியர் என்பார்கள். சங்கு என்பது வீரத்தைக் குறிப்பது. அதனால்தான் மகாபாரத யுத்தத்தில் பகவான் கிருஷ்ணர் திருக்கரத்தில் சங்கு இருந்தது. அந்த சங்கு, பாஞ்சஜன்யம் என்கிற ஒலியை எழுப்ப, குருக்ஷேத்திர யுத்தகளமே கிடுகிடுத்தது. சங்கு சக்கரதாரியாக மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.

அதுமட்டுமா? சங்கு செல்வத்தின் அடையாளம். சங்கு கொண்டு பூஜை செய்தாலோ சங்கிற்கு பூஜைகள் மேற்கொண்டாலோ சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம். இல்லத்தில், சங்கு இருந்தாலே செல்வ கடாட்சம் நிச்சயம்!

வீட்டுப் பூஜையறையில் சங்கு இருந்தால், அந்த சங்கிற்கு சந்தனம் குங்குமம் இட்டு, அபிஷேகித்து தீபாராதனை காட்டி வழிபட்டு வந்தால், இதுவரை வீட்டில் இருந்து வந்த தரித்திர நிலையெல்லாம் மாறும். கடன் முதலான பிரச்சினைகள் தீரும். எல்லா சுபிட்சமும் பெற்று இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இதனால்தான் பலரின் வீடுகளில், பூஜையறைகளில் சங்கு அலங்கரித்திருப்பதைப் பார்க்கலாம்.

கிராமங்களில் கூட, கோயில் விழாக்களிலும் வீடுகளில் பொங்கல் முதலான வைபவங்களிலும் சங்கும் சங்கு நாதமும் அவசியம் இடம்பெறுகிறது.
சங்கு கல்வியும் ஞானமும் தரக்கூடியது என்று சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். வீட்டில் நடக்கக்கூடிய பூஜைகளில், குலதெய்வ வழிபாடு முதலான விஷயங்களில், பண்டிகை காலங்களில், வீட்டில் உள்ள குழந்தைகள், அதாவது சிறுவர் சிறுமிகள், சங்கிற்கு பூக்களிட்டு பூஜைகள் செய்து வந்தாலும் சங்கைக் கொண்டு இல்லத்தின் பூஜையறையில் உள்ள விக்கிரகங்களுக்கு பாலபிஷேகம், தேனபிஷேகம் செய்து வந்தாலும் குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள் என்றும் கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களாகத் திகழ்வார்கள் என்றும் விவரிக்கிறார்கள்.

கார்த்திகை சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில், சங்கு மூலம் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யும் வைபவம் எல்லா சிவாலயங்களிலும் நடைபெறுகிறது. சங்கு இருக்கும் வீடுகளில், துஷ்ட தேவதைகளின் நடமாட்டம் இருக்காது என்றும் தீயசக்திகள் விலகிவிடும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக, சங்கில் பல வகைகள் உண்டு என்றாலும் வலம்புரிச் சங்கிற்கு மகத்தான பலன்கள் உண்டு என்கிறது சாஸ்திரம்.

மேலும் வீட்டு வாசலிலும் பூஜையறையிலும் சங்குக் கோலமிடுவதும் இல்லத்தில் அமைதியையும் ஆனந்தத்தையும் ஏற்படுத்தும். நிம்மதியையும் ஒற்றுமையையும் வளர்த்தெடுக்கும்.

சிவனாருக்கு சங்கு கொண்டு அபிஷேகிப்பதைத் தரிசிப்பது மகா புண்ணியம். சங்காபிஷேகம் தரிசிப்பது மிகுந்த புண்ணியங்களைப் பெற்றுத் தரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x