Published : 20 Nov 2020 10:06 PM
Last Updated : 20 Nov 2020 10:06 PM
‘உங்களின் தேவைகள் நியாயமான தேவைகள் என்றும் நியாயமான ஆசைகள் என்றும் உங்களால் உணர்ந்துகொள்ள முடிகிறதா? நீங்கள் அவற்றை எடை போட்டு அறிந்து வைத்திருக்கிறீர்கள்தானே. அப்படியெனில் கவலை வேண்டாம். அவற்றையெல்லாம் நிச்சயம் உங்களுக்கு நிறைவேற்றித் தருவேன்’ என்று பகவான் ஷீர்டி சாயிபாபா அருளியுள்ளார்.
திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்பார்கள். ஆனால் தெய்வத்தின் துணையை எப்படிப் பெறுவது, எவ்விதம் அடைவது என்பதை அறியாமல் திக்குமுக்காடிப் போகிறவர்கள்தானே நாம். அப்படி திக்குத் திசை தெரியாமல் தத்தளித்துக்கொண்டிருப்பவர்களுக்கு தெய்வத்தாலேயே நமக்கு வழங்கப்பட்டவர்கள்தான் மகான்கள்.
மகான்கள், மனித குலத்துக்கு கலங்கரை விளக்கமாகத் திகழ்பவர்கள். வழிகாட்டிகளாக இருந்து அருளுபவர்கள். வழிக்குத் துணையாகவே வருபவர்கள். அப்படி மண்ணுலகில் அவதரித்த மகான்களில் ஒருவர்தான் பகவான் ஷீர்டி சாயிபாபா.
வடக்கே ஷீர்டி எனும் சிறிய கிராமத்தில் அவதரித்து வாழ்ந்து, பல லட்சம் பேருக்கு தரிசனம் தந்த கலியுகக் கடவுளாக அருள்பாலித்தவர்தான் ஷீர்டி சாயிபாபா.
சாயிபாபா, குருவாகத் திகழ்ந்தார். ஞானகுருவாகப் போற்றப்படுகிறார். ‘என் அப்பா’ என்று எல்லோரும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். ‘சாயி அப்பா இருக்கிறார். எனக்கு கவலைகள் ஏதுமில்லை’ என்று சாயி பக்தர்கள் மெய் சிலிர்க்கச் சொல்கிறார்கள்.
தகப்பன் என்பவர், எப்படி பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவாரோ அப்படித்தான் சாயிபாபாவும், தனது பக்தர்களை குழந்தைகளாகவே பார்க்கிறார். எல்லா பக்தர்களும் என்னுடைய குழந்தைகள் என்கிறார். ‘என்னுடைய குழந்தைகளின் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்தால், என்னால் பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது’ என அருளியுள்ளார் பாபா.
அதனால்தான், இன்றைக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாயிபாபாவுக்கு இருக்கிறார்கள். உருகி உருகி அவரை வேண்டிக்கொண்டிருக்கிறார்கள். ‘நாங்கள் சாயி பகவானின் பிள்ளைகள்’ என்கிறார்கள். ‘எங்களுக்கு ஷீர்டி சாயிபாபாதான் தந்தை’ என்று வியந்து வணங்குகிறார்கள். ‘சாய்ராம் எங்கள் தந்தைக்கும் மேலானாவர்’ என்று கண்கள் பனிக்க, விகசித்துக் கொண்டாடுகிறார்கள்.
பக்தர்களின் வாட்டத்தை ஒருபோதும் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார் சாயிபாபா.
‘உங்களின் தேவைகள் நியாயமான தேவைகள் என்றும் நியாயமான ஆசைகள் என்றும் உங்களால் உணர்ந்துகொள்ள முடிகிறதா? நீங்கள் அவற்றை எடை போட்டு அறிந்து வைத்திருக்கிறீர்கள்தானே. அப்படியெனில் கவலை வேண்டாம். அவற்றையெல்லாம் நிச்சயம் உங்களுக்கு நிறைவேற்றித் தருவேன்’ என்று பகவான் ஷீர்டி சாயிபாபா அருளியுள்ளார்.
உங்களின் தேவைகள் எவை எவை என்பதை நீங்களே சீர்தூக்கிப் பாருங்கள். அந்த தேவைகள் அனைத்தும் நியாயமானவையா என்று உங்களுக்குள்ளேயே கேட்டுக்கொள்ளுங்கள். அவை நியாயமான தேவைகளாக இருந்தால், மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் பாபாவிடம் முன்வைத்து பிரார்த்தனை செய்யுங்கள்.
ஆயிரம் பேருக்கு அன்னதானம் என்றெல்லாம் பாபா ஒருபோதும் எவரிடமும் கேட்பதில்லை. ஒரு நான்கு பிஸ்கட்டுகள் வழங்கி வேண்டிக்கொண்டாலே போதும்... அந்த பிஸ்கட்டுகளை நான்கு பேருக்கு வழங்கினாலே போதும்... உங்கள் தேவைகளை பகவான் ஷீர்டி சாயிபாபா நிறைவேற்றித் தருவார். வெகு விரைவில் உங்கள் பிரார்த்தனைகளை ஈடேற்றித் தந்தருள்வார் சாய்ராம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT