Last Updated : 20 Nov, 2020 09:42 PM

 

Published : 20 Nov 2020 09:42 PM
Last Updated : 20 Nov 2020 09:42 PM

எதிரிகளை அழிக்கும் சத்ரு சம்ஹார திரிசதை பூஜை; எல்லா நலனும் தந்து காப்பான் எட்டுக்குடி முருகன்! 

உலகத்தின் எதிரியான தீயசக்தியான அசுரக்கூட்டத்தை ஒழித்த முருகப்பெருமானை எட்டுக்குடி முருகப்பெருமானை மனமுருக வேண்டுவோம். எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கி அருளுவார் எட்டுக்குடி முருகன்.

எட்டுக்குடியில் அழகும் கனிவுமாக, கருணையும் கம்பீரமுமாக காட்சி தந்து அருள்பாலிக்கிறார் சுப்ரமணிய சுவாமி. வள்ளி தெய்வானையுடன் திகழும்முருகப்பெருமானை கண்ணார தரிசித்தால், கவலைகளையெல்லாம் தீரும். செவ்வாய் முதலான தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

எட்டுக்குடி முருகன் திருத்தலம் இரண்டு விஷயங்களுக்கு பெயர் பெற்றது. கேதார கெளரி விரதம் தோன்றிய திருத்தலம் இது என விவரிக்கிறது ஸ்தல புராணம். வள்ளி தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தரும் முருகப் பெருமானை ஒருமுறையேனும் தரிசித்து வந்தால் போதும்... நம் வினைப் பயன்களையெல்லாம் நீக்கி அருளுவார் என்கின்றனர் பக்தர்கள்.

இன்னொரு சிறப்பு... கந்த சஷ்டி விழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

எட்டுக்குடி முருகனுக்கு அரோகரா எனும் கோஷம் வெகு பிரபலம். எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள், எட்டுக்குடி முருகனுக்கு வேண்டிக்கொள்வதும் வேண்டுதல் நிறைவேறியதும் இங்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவதும் தொடர்ந்து தினமும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்கிறார்கள் பக்தர்கள்.

எட்டுக்குடி திருத்தலத்தின் இன்னொரு விசேஷம்... வேறு எந்தத் தலத்துக்கும் இல்லாத பெருமை மிக்கது என சிலாகிக்கிறார்கள் பக்தர்கள். தங்களின் மனநிலைக்குத் தக்கபடி காட்சி தருகிறார் முருகப்பெருமான். அதாவது, குழந்தையாக, பாலகனாக நினைத்துப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுவார். இளைஞனாக பாவித்துப் பார்த்தால் இளைஞனாகத்தான் தோன்றுவார். வள்ளியைக் கரம்பிடிக்க, கிழவனாக வந்தாரே முருகப்பெருமான். வயோதிகராக நினைத்தீர்களென்றால் அப்படித்தான் தோன்றுகிறார் என்று சொல்லிப் பூரிக்கிறார்கள் பக்தர்கள்.

திருவாரூரில் இருந்து வேதாரண்யம் செல்லும் சாலையில், திருவாரூரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம். அற்புதமான இந்தத் தலத்து இறைவனை அருணகிரிநாதர் மனமுருக பாடியிருக்கிறார்.

இந்தத் தலத்தில், சத்ரு சம்ஹார திரிசதை எனும் பூஜை இங்கு பிரபலம். அதாவது எதிரிகளால் ஏற்படும் துன்பங்களும் துயரங்களும் நீங்கும் இந்தப் பூஜையைச் செய்வது மகத்துவமானது, சக்தி மிக்கது என்று போற்றுகிறார்கள் முருக பக்தர்கள்.

உலகத்தின் எதிரியான தீயசக்தியான அசுரக்கூட்டத்தை ஒழித்த முருகப்பெருமானை எட்டுக்குடி முருகப்பெருமானை மனமுருக வேண்டுவோம். எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கி அருளுவார் எட்டுக்குடி முருகன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x