Last Updated : 19 Nov, 2020 03:36 PM

 

Published : 19 Nov 2020 03:36 PM
Last Updated : 19 Nov 2020 03:36 PM

கந்த சஷ்டியில்... சிறுவாபுரி முருக தரிசனம்; சொந்த வீடு யோகம்; கல்யாண வரம் தருவார்! 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் இருந்தாலும் எல்லோருக்கும் இருக்கிற ஆசையும் எண்ணமும் சொந்த வீடு என்பதாகத்தான் இருக்கும். அப்படியொரு சொந்த வீட்டை தந்தருள, நமக்காக, நம் வரவுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார் சிறுவாபுரி முருகன்.

சென்னை செங்குன்றம் அருகே, சோழ வரம் அருகே அமைந்துள்ளது சிறுவாபுரி திருத்தலம். இந்தத் திருத்தலத்தில்தான் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறார் முருகப்பெருமான்.

சின்னஞ்சிறிய கிராமம்தான். இயற்கை சூழ்ந்திருக்கும் ஊர்தான். இன்றைக்கு தமிழகம் முழுக்க சிறுவாபுரியும் இங்கே உள்ள முருகக் கடவுளும் எல்லோரும் அறிந்திருக்க, தினமும் எங்கிருந்தெல்லாமோ வந்து தரிசித்துக் கொண்டிருக்கிறார்கள் பக்தர்கள்.

வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தில் லவனும் குசனும் வளர்ந்தார்கள். ஒருநாள் ஸ்ரீராமபிரானின் குதிரை அங்கே வந்தது. அந்தக் குதிரையை லவனும் குசனும் பிடித்து, கட்டிப்போட்டார்கள். பிறகு ராமபிரான் வந்து, போரிட்டார் என்றும் போரில் வென்று குதிரையை மீட்டார் என்றும் ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படிச் சொல்லும்போது இந்தத் தலம் குறித்தும் சிறுவாபுரி குறித்தும் சொல்லப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் முருக பக்தர்கள்.

மிகத் தீவிரமான முருக பக்தை அந்தப் பெண்மணி. சிறுவாபுரியில் வாழ்ந்து வந்தார். அந்தப் பெண்ணின் கணவர், எப்போது பார்த்தாலும் மனைவியை சந்தேகத்துடனேயே பார்த்து வந்தார். ஒருநாள் ஆத்திரம் கொண்ட கணவன், அவளின் கையைத் துண்டித்துவிட்டார். அப்படியொரு நிலையிலும் முருகப்பெருமானையே நினைந்து, கந்தனின் திருநாமத்தையே சொல்லிக்கொண்டிருந்தார். அவரின் பக்தியில் மகிழ்ந்த முருகப்பெருமான், பெண்மணிக்கு திருக்காட்சி தந்தார். மேலும் அவரின் வெட்டுப்பட்ட கை ஒன்று சேர்ந்தது என விவரிக்கிறது ஸ்தல புராணம்.

அற்புதமான திருத்தலத்தில், அழகு ததும்ப நின்ற திருக்கோலத்தில் இருந்தபடி தரிசனம் தந்துகொண்டிருக்கிறார் முருகக் கடவுள். இங்கே உள்ள கந்தனின் திருநாமம் ஸ்ரீபாலசுப்ரமண்ய சுவாமி.

அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற

அண்டர்மன மகிழ்மீற வருளாலே

அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூற

ஐங்கரனு முமையாளு மகிழ்வாக

மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு

மஞ்சினனு மயனாரு மெதிர்காண

மங்கையுட நரிதானு மின்பமுற மகிழ்கூற

மைந்துமயி லுடனாடி வரவேணும்

புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா

புந்திநிறை யறிவாள வுயர்தோளா

பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு

பொன்பரவு கதிர்வீசு வடிவேலா

தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறி ரூப

தண்டமிழின் மிகுநேய முருகேசா

சந்தமு மடியார்கள் சிந்தையது குடியான

தண்சிறுவை தனில்மேவு பெருமாளே

எனும் திருப்புகழைப் பாராயணம் செய்து, முருகப்பெருமானை தரிசித்து வேண்டிக்கொண்டால் போதும். நினைத்ததையெல்லாம் நிறைவேற்றித் தந்தருள்வார் முருகக் கடவுள்.

சென்னையில் இருந்து 33 கி.மீ. தொலைவில் உள்ளது சிறுவாபுரி திருத்தலம். இந்தத் தலத்துக்கு ஆறு செவ்வாய்க்கிழமைகள் வந்து ஆறுமுகப்பெருமானை மனமுருக வேண்டிக் கொண்டால், காரியம் யாவும் நடந்தேறும், நினைத்த காரியங்கள் அனைத்தையும் ஈடேற்றித் தருவார் என்பது ஐதீகம்.

சஷ்டி, கந்தஷ்டி, செவ்வாய்க்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, கார்த்திகை நட்சத்திரம், பூச நட்சத்திரம் முதலான நாட்களில், சிறுவாபுரி திருத்தலத்துக்கு வந்து முருகக் கடவுளிடம் வேண்டிக்கொண்டால், சொந்த வீடு யோகத்தை அமைத்துக் கொடுப்பார். தொழிலில் முன்னேற்றத்தைத் தருவார். திருமணம் முதலான மங்கல காரியங்களை நடத்தி அருளுவார்.

ஸ்ரீவள்ளியும் முருகப்பெருமானும் கைகோர்த்தபடி, திருமணக் கோலத்தில் காட்சி தருவது விசேஷமானது. எனவே இங்கு வந்து வள்ளியையும் வள்ளி மணாளன் முருகப்பெருமானையும் வணங்கி வழிபட்டுப் பிரார்த்தித்தால், விரைவில் கல்யாண யோகம் கைகூடும் என்பது ஐதீகம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x