Published : 18 Nov 2020 09:32 PM
Last Updated : 18 Nov 2020 09:32 PM
வாராஹி தேவிக்கு செவ்வரளி மலர்கள் சார்த்தி, மிளகு கலந்த வடை நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டால், குறிப்பாக பஞ்சமி திதியில் வேண்டிக்கொண்டால், வளமும் தருவாள். நலமும் தருவாள். பலமும் தந்து காத்தருள்வாள் வாராஹி தேவி.
நாளைய தினம் 19ம் தேதி வியாழக்கிழமை பஞ்சமி திதி. இந்த குரு வார நன்னாளில், வராஹிதேவியை மனதார வழிபட்டு வேண்டிக்கொண்டால் போதும். நமக்கு இதுவரை உள்ள எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கிவிடுவாள். காரியங்கள் அனைத்துக்கும் பக்கபலமாக இருந்து வெற்றியைத் தந்திடுவாள் வாராஹி.
சப்த மாதர்கள் என்று அறிந்திருப்போம். சோழ தேசம் அன்றைக்குச் சொல்லப்பட்ட பல சிவாலயங்களில் சப்த மாதர்களின் சந்நிதியை இன்றைக்கும் தரிசிக்கலாம். சப்த மாதர்களில், மிக முக்கியமான தேவியாக, சக்தியாக, தேவதையாகத் திகழ்கிறாள் வராஹி தேவி.
சப்த மாதர்களில் வாராஹியும் ஒருத்திதான் என்றபோதும் மகாசக்தியாகவே போற்றப்படுகிறாள் வாராஹி அம்மன். சமீப காலங்களில், வாராஹி வழிபாடு அதிகரித்து வருகிறது. வாராஹி தேவிக்கென சில ஊர்களில் தனிக்கோயில்களும் எழுப்பபட்டு வழிபட்டு வருகிறார்கள் பக்தர்கள்.
பஞ்சமி திதியில் வாராஹிதேவியை மனதார வழிபட்டால், எதிர்ப்புகளையெல்லாம் துவம்சம் செய்வாள். தீயசக்திகளை அடித்து விரட்டுவாள். எல்லாச் செயல்களிலும் துணையிருந்து காத்தருள்வாள் என்கின்றனர் பக்தர்கள்.
வாராஹிதேவிக்கு, பூண்டு கலந்து, தோல் நீக்காத உளுந்த வடை ரொம்பவே விசேஷம். நவதானிய வடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம் என நைவேத்தியம் செய்தால், இதுவரை இருந்த அத்தனை தடைகளையும் நீக்கி அருளுவாள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
மொச்சை, சுண்டல் நைவேத்தியம் செய்வதும் விசேஷம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். சுக்கு அதிகம் சேர்த்து பானகம் செய்தால், அந்த வெல்லக் கரைசல் போல், நம் வாழ்வில் இன்பத்தையும் நிம்மதியையும் சேர்த்துக் கலந்திடுவாள் வாராஹி. மிளகும் ஜீரகமும் கலந்த தோசை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலக்காய், லவங்கம், பச்சைக்கற்பூரம் கலந்த பால், கறுப்பு எள்ளுருண்டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றையும் நைவேத்தியமாக படைத்து வாராஹியை வணங்கலாம்.
நாளைய தினம் 19ம் தேதி வியாழக்கிழமையில், பஞ்சமி திதியில் வாராஹியை வழிபடுங்கள். வாராஹியின் மூல மந்திரம் சொல்லி, பிரார்த்தனை செய்யுங்கள். தரித்திரம் நீக்கி அருளுவாள். சுபிட்சத்தை தந்திடுவாள் வாராஹி தேவி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT