Published : 18 Nov 2020 08:34 PM
Last Updated : 18 Nov 2020 08:34 PM
திருநெல்வேலி ரயில்வே ஜங்ஷனுக்கு அருகில் உள்ளது சாலைக் குமார சுவாமி கோயில். ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் இரட்டைப் பாலம் உள்ளது. இந்த இரட்டைப் பாலத்துக்குக் கீழே உள்ள பகுதியில் உள்ளது சாலைகுமார சுவாமி கோயில்.
ஆலயம் சிறியதுதான். ஆனால் கீர்த்தி மிக்க திருத்தலம். மிகச்சிறிய கோயில் என்றாலும் திருநெல்வேலி என்றில்லாமல் சுற்றுவட்டார ஊர்களைச் சேர்ந்த பக்தர்களும் இங்கு வந்து முத்துக்குமார சுவாமியை தரிசித்துச் செல்கின்றனர்.
மூலவர் முருகக் கடவுள், கிழக்கு நோக்கியபடி அருள்பாலிக்கிறார். ஆறுமுகங்களும் பனிரெண்டு திருக்கரங்களும் கொண்டு, அழகு முருகனாக, அழகன் முருகனாக, மயிலின் மீது அமர்ந்து ஒய்யாரமாகக் காட்சி தருகிறார்.
திருச்செந்தூர் திருத்தலத்துக்கு இணையான தலம் என்று கொண்டாடுகின்றனர் பக்தர்கள். கிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், முக்கியமாக செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடையால் வருந்திக் கொண்டிருப்பவர்கள், இங்கு வந்து சாலை குமாரசுவாமியை வேண்டிக்கொண்டால், சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
திருமணத் தடை நீக்கும் அற்புதமான திருத்தலம் இது. அதனால்தான், நெல்லை மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள், இந்தத் தலத்துக்கு வந்து, முருகப்பெருமான் சந்நிதிக்கு எதிரில் இருந்தபடி, திருமணம் செய்துகொள்வதும் வழக்கமாக உள்ளது என்கிறார்கள் பக்தர்கள்.
வாழ்வில் குரு பலம் இருந்தால் திரு பலம் கிடைக்கும் என்பார்கள். குருவின் பலம் இழந்து தவிப்பவர்கள்,எந்தக் காரியம் செய்தாலும் நஷ்டமாகிக் கொண்டிருக்கிறதே என்று வருந்துபவர்கள், எதிரிகளின் தொல்லையால் நிம்மதி இல்லாத நிலை இருக்கிறதே என்று கலங்குபவர்கள், திருநெல்வேலி ஜங்ஷன் சாலை முத்துக்குமார சுவாமியை செவ்வாய்க்கிழமைகளிலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும் சஷ்டி முதலான திதியிலும் கார்த்திகை நட்சத்திர நாளிலும் இங்கு வந்து முருகப்பெருமானை கண்ணார தரிசித்து மனதார வேண்டிக்கொண்டால், மங்கல காரியங்கள் நடந்தேறும். வியாபாரம் விருத்தியாகும். எதிரிகள் தொல்லை இல்லாமல் போகும் என்பது ஐதீகம்.
சாலை முத்துகுமார சுவாமியை கந்தசஷ்டி நாளில் தரிசியுங்கள். வீடு மனை யோகம் தந்தருள்வார் வேல்முத்துக்குமரன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT