Published : 18 Nov 2020 04:28 PM
Last Updated : 18 Nov 2020 04:28 PM
குருப்பெயர்ச்சிக்குப் பிறகு வரும் வியாழக்கிழமையில், குரு பகவானைத் தரிசிப்போம். குரு பலமும் குரு யோகமும் பெறுவோம்.
கடந்த 15ம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெற்றது. அன்றைய நாளில், பெரும்பான்மையான சிவாலயங்களிலும் குருப்பெயர்ச்சியையொட்டி, சிறப்பு ஹோமங்களும் பரிகார பூஜைகளும் நடைபெற்றன.
குரு பகவான் ஆலயங்களில் பிரசித்தி பெற்ற ஆலயம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில். நவக்கிரக திருத்தலங்களில் குரு பகவானுக்கு உரிய தலம் இது என்கிறது ஸ்தல புராணம்.
ஆலங்குடி எனும் அற்புதமான திருத்தலத்தில் குரு பகவான் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. இந்தத் தலத்துக்கு வந்து குரு பகவானை மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.
இதேபோல், தஞ்சாவூருக்கு அருகில் உள்ளது திட்டை. தென்குடித் திட்டை என்று விவரிக்கிறது ஸ்தல புராணம். இந்தத் தலத்து இறைவனின் திருநாமம் - ஸ்ரீவசிஷ்டேஸ்வரர். இந்தத் தலத்தில் அற்புதமான கோலத்தில், நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் குரு பகவான்.
இந்த குரு பகவான், நவக்கிரகத்தில் உள்ள குரு. தேவர்களின் குரு பிரகஸ்பதி. சிவனாரிடம் பெற்ற வரத்தால், நவக்கிரகங்களில் ஒரு கிரகமாகத் திகழ்கிறார். நவக்கிரகங்களில் சுபக்கிரகம் என்று போற்றப்படுகிறார் குரு பகவான்.
திட்டையில் தனிச்சந்நிதியில் குடிகொண்டு அருள்பாலிக்கும் குரு பகவானுக்கு, குருப்பெயர்ச்சியின் போது பரிகார ஹோமங்களும் விசேஷ பூஜைகளும் நடைபெற்றன. குருப்பெயர்ச்சி முடிந்து வருகிற இந்த வியாழக்கிழமையில், குரு பகவானை மனதாரப் பிரார்த்திப்போம்.
அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று, குரு தட்சிணாமூர்த்தியையும் நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானையும் தரிசித்துப் பிரார்த்திப்போம். தீபமேற்றி வேண்டுவோம். குருவருளும் திருவருளும் பெறுவோம்.
குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். குரு பகவானின் சந்நிதியில் நின்றுகொண்டு, அவரை வேண்டுவோம். வேண்டியதையெல்லாம் நிறைவேற்றித் தந்தருள்வார் குரு பகவான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT