Published : 18 Nov 2020 01:52 PM
Last Updated : 18 Nov 2020 01:52 PM
கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது சுவாமிமலை என்பதும் அற்புதமான முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் கோயில் என்பதும் நமக்கெல்லாம் தெரியும். சக்தி மிக்க தலம். சக்தி குமரன் குடிகொண்டிருக்கும் திருத்தலம். சக்திவேலன் அருள்பாலிக்கும் அற்புதமான புனித பூமி என்றெல்லாம் போற்றுகிறார்கள் பக்தர்கள்.
கோயில் நகரம் கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் வழியில், மூப்பக்கோயிலில் இருந்து கிளை பிரிந்து செல்லும் பாதையில் அமைந்துள்ளது கந்தநாத சுவாமி திருக்கோயில். இதைத்தான் சுவாமிமலை கோயில் என்றும் சுவாமிமலை முருகன் கோயில் என்றும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி என்றும் போற்றிக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் பக்தர்கள்.
கும்பகோணத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது இந்தக் கோயில். அசூர் வாய்க்காலுக்கு மேற்குப்புறத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில், சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த தலம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
முனிவர் பெருமக்கள் கடும் தவம் மேற்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் அவர்களின் தவத்துக்கும் அசுரர்கள் இடையூறு செய்தார்கள். இதில் தவித்துப் போனார்கள் முனிவர்கள். கலங்கி மருகினார்கள். நடந்தவற்றையெல்லாம் சொல்லி, சிவனாரிடம் முறையிட்டு வேண்டினார்கள்.
அவற்றையெல்லாம் அறிந்த சிவனார், ‘முனிவர்களுக்கும் மக்களுக்கும் அல்லல்களைக் கொடுத்துவரும் அசுரர்களை அழித்து வா’ என்று தன் மைந்தன் முருகப்பெருமானை அனுப்பிவைத்தார். அத்துடன் முருகக் கடவுளுக்கு அஸ்திரம் ஒன்றையும் வழங்கினார். ‘இந்த அஸ்திரத்தை நீ எங்கே செலுத்துகிறாயோ, அந்த இடம் உன்னுடைய ஸ்தலமாகட்டும். அங்கிருந்தபடியே அகிலத்தையும் அகிலத்து மக்களையும் காத்தருள்வாய்’ என்றும் அருளினார் ஈசன்.
அப்படி முருகப்பெருமான் அஸ்திரம் பாய்ந்த இடம்... ஏரகரம் என்றானதாகச் சொல்கிறது புராணம்.
அசுரர்களை அழிக்கப் புறப்பட்ட முருகக் கடவுள், முழுமுதற்கடவுளான விநாயகப் பெருமானையும் அம்மையும் அப்பனுமான பார்வதிதேவியையும் சிவபெருமானையும் வணங்கினார் என்கிறது ஸ்தல புராணம். முருகப்பெருமானின் வேண்டுகோளுக்கு இணங்க, விநாயகரும், சிவ பார்வதியும் ஏரகரத்தில் எழுந்தருளி, இன்றளவும் காட்சி தந்து வருவோருக்கு வரங்களை வழங்கி வருகின்றனர். இந்த ஏரகரம்... பின்னாளில் சுவாமிமலை என்று அழைக்கப்பட்டது.
ஏரகரம் அறுமுருகன் என்று கச்சியப்ப சிவாச்சார்யர் என்று புகழ்ந்து பாடியுள்ளார். நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் முருகப்பெருமானைப் போற்றிக் கொண்டாடியுள்ளார். அருணகிரிநாதர் சுவாமிமலைக்கு வந்து திருப்புகழ் பாடியுள்ளார்.
அருமையான ஆலயம். மலையே இல்லாத ஊரில் சிறியதொரு மலையில், மிகப்பெரிய கீர்த்தியை வழங்கியபடி அருள்பாலிக்கிறார் சுவாமிநாத சுவாமி.
இந்தத் திருத்தலம் பல பெருமைகளைக் கொண்டிருக்கிறது. இங்கே முருகன் கோயிலில், சிவராத்திரி விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அதேபோல், கார்த்திகை திருவிழாவும் சஷ்டி விழாவும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
கந்த சஷ்டி விழா ஐப்பசி அமாவாசைக்கு மறுநாளில் இருந்து கோலாகலமாகத் தொடங்கி நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் காலையும் மாலையும் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. கந்த சஷ்டியை முன்னிட்டு விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள், கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் இருப்பவர்கள், தினமும் வந்து முருகப்பெருமானை தரிசித்துச் செல்கின்றனர்.
சுவாமிமலை சுவாமிநாத சுவாமியை கண்ணாரத் தரிசியுங்கள். கவலைகளையும் கஷ்டங்களையும் தீர்த்துவைப்பான் கந்தநாத சுவாமி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT