Published : 17 Nov 2020 05:43 PM
Last Updated : 17 Nov 2020 05:43 PM
புகைப்படத்திலும் சிலையிலுமாக இருந்துகொண்டு உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் பார்த்துக்கொண்டிருக்கிறார் சாயிபாபா என்கிறது ஸ்ரீசாயி சத்சரிதம்.
நடமாடும் தெய்வமாக, அற்புதங்கள் நிகழ்த்திய மகானாகப் போற்றப்பட்டுக்கொண்டிருக்கிறார் சாயிபாபா. வடக்கே ஷீர்டி எனும் சின்னஞ்சிறிய கிராமத்தை, மிகப்பெரிய ஊராக, உலகே அறிந்த நகரமாக மாற்றிக் காட்டிய மகான் சாயிபாபா.
தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களுக்கு தன் அருளை வாரி வழங்கினார் ஷீர்டி மகான். இதனால், ஷீர்டி எனும் பூமி, புண்ணிய பூமியாயிற்று. உலகில் எங்கிருந்தெல்லாமோ இருந்து பக்தர்கள், பாபாவை தரிசிக்க வந்தார்கள். அவரை வணங்கி தங்கள் வேண்டுதல்களை மானசீகமாக கோரிக்கையாக விடுத்தார்கள். உலகின் மக்களுக்கெல்லாம் அருள்மழையைப் பொழிந்தார் பாபா. அதனால்தான் உலகம் முழுக்க பாபாவுக்கு பக்தர்கள் இருக்கிறார்கள்.
தங்கள் குடும்பங்களில் பாபாவை கண்கண்ட தெய்வமாக ஏற்று, வழிபடத் தொடங்கினார்கள் பக்தர்கள். வீட்டில் குழந்தைகள் பிறந்தால், அந்தக் குழந்தைகளுக்கு எந்தப் பெயர் வைத்தாலும், பெயருக்கு முன்னே ‘சாய்’ என்று சேர்த்து பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்.
‘நாங்கள் பாபாவின் குடும்பம்’ என்று சந்தோஷத்துடனும் பக்தியுடனும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் பக்தர்கள். வீட்டில் பாபாவின் புகைப்படத்தை பூஜையறையில் வைத்து பூக்களிட்டு வேண்டிக்கொண்டிருக்கிறார்கள். சிறிய அளவிலாவது சிலை வைத்து வழிபடுபவர்களும் உண்டு. தங்களுடைய பர்ஸில், பாக்கெட் சைஸ் பாபாவும் அலங்கரித்து ஆசீர்வதிக்கிறார்.
பாபா சூட்சுமமாக, இந்தக் கலியுகத்திலும் எல்லோருக்கும் தன் அருட்கரங்களை நீட்டி, வாஞ்சையுடன் நம்மை அரவணைத்துக் காத்தருள்கிறார். பாபாவை நம்பினோர் கைவிடப்படார் என்பதுதான் பாபா பக்தர்களின் தாரக மந்திரம்.
இந்தியா முழுவதும் பல ஊர்களில், பாபாவுக்கு மந்திர்களும் ஆலயங்களும் எழுப்பப்பட்டிருக்கின்றன. ஷீர்டியில் பாபாவுக்கு எப்படி வழிபாடுகள் நடத்தப்படுகின்றனவோ, அதேபோல பாபாவுக்கு எல்லா ஊரில் உள்ள பாபா ஆலயங்களிலும் சிறப்புற வழிபாடுகளும் பூஜைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அங்கெல்லாம் சூட்சுமமாக இருந்து அருள்மழை பொழிந்து வருகிறார் பாபா என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.
அதேபோல், பாபாவின் புகைப்படங்களும் சிலைகளும் எங்கெல்லாம் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் அவற்றுக்குள்ளே பாபா இருந்து நம்மைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார். ஸ்ரீசாயி சத்சரிதம் அப்படித்தான் விளக்குகிறது.
’ஒரு புகைப்படத்தின் மூலமாகவோ சிலை வடிவமாகவோ பாபா நம்மிடம் வருகிறாரென்றால், அங்கே புகைப்படத்திலோ சிலையிலோ பாபா அமர்ந்திருக்கிறார் என்று அர்த்தம். அந்த இடத்தை, பாபா வளப்படுத்தப் போகிறார் என்று பொருள். அங்கே உள்ள இடையூறுகளையும் இன்னல்களையும், கஷ்டங்களையும் நஷ்டங்களையும், சிக்கல்களையும் பிரச்சினைகளையும் போக்கி அருள பாபா வந்துவிட்டார் என்று ‘ஸ்ரீசாயி சத்சரிதம்’ விவரித்துள்ளது.
சாயிபாபாவை புகைப்படமாகவோ சிலையாகவோ தரிசிப்பது என்பது, பாபாவை நம் கண் முன்னே நேரடியாக தரிசிப்பதற்குச் சமமானது. நம் எண்ணம் சரியானபடியும் மேம்பட்டதாகவும் தர்ம கர்ம சிந்தனைகளுடனும் இருந்தால், அங்கே, புகைப்படத்தில்... சிலையில் பரிபூரணமாக இருப்பார் சாயிபாபா. நமக்கும் நம் குடும்பத்தாருக்கும் பக்கபலமாக இருந்து அருளுவார் பகவான் பாபா.
அதனால்தான், கலியுகத்தின் நடமாடும் தெய்வம் என்றும் கண்கண்ட தெய்வம் என்றும் வாழ்வை உய்விக்க வந்த மகான் என்றும் போற்றி வணங்கிக் கொண்டிருக்கிறார்கள் சாயி பக்தர்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT